Advertisement

பலே கில்லாடி!

'இனிமேல் இவரால், மாநில அரசியலில் தலையெடுக்கவே முடியாது என நினைத்தால், மனிதர், மீண்டும் இப்படி, 'பீனிக்ஸ்' பறவை போல் உயிர்த்தெழுந்து விட்டாரே' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானை பற்றி, சொந்த கட்சியினரே ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். ம.பி.,யில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால், கமல்நாத் தலைமையில், காங்., ஆட்சி அமைத்தது. அதற்கு முன் முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான், பா.ஜ., மூத்த தலைவர்களிடம், 'நமக்கும், காங்கிரசுக்கும் குறைந்த தொகுதிகள் தான் வித்தியாசம் உள்ளது. எப்படியாவது நாம் ஆட்சி அமைத்து விடலாம்' என்றார். பா.ஜ., மேலிடம், அதை நிராகரித்து விட்டது. 'பா.ஜ.,மூத்த தலைவர்களுக்கு, சிவ்ராஜ் சிங் சவுகானை பிடிக்கவில்லை. அவரை, மீண்டும் முதல்வராக்க விரும்பவில்லை. இனி, சிவ்ராஜ் சிங் சவுகான், மாநில அரசியலில் தலையெடுப்பது கடினம்' என, ம.பி., - பா.ஜ., வினர் கூறி வந்தனர். சிவ்ராஜ் சிங் சவுகானோ, தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரசிலிருந்து வெளியேறியதை, லட்டு போல் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆதரவுடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட்டார். சிவ்ராஜ் சிங் சவுகானின் இந்த அதிரடியை சற்றும் எதிர்பார்க்காத, ம.பி., மாநில, பா.ஜ., தலைவர்கள், 'பலே கில்லடியாக இருப்பார் போலிருக்கிறது. 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் அல்லவா... அந்த அனுபவம் தான், இப்போது பேசுகிறது' என, வயிற்றெரிச்சலுடன் பேசுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement