Advertisement

சபாஷ் ஓம் பிர்லா!

சபாஷ் ஓம் பிர்லா!
'இவரைப் போன்றவர்கள் சபாநாயகராக இருந்தால், நமக்கு நல்லது' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பாராட்டு மழையின் நனைய வைக்கின்றனர், பெண், எம்.பி.,க்கள்.இதற்கு முன், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அந்த கட்சியைச் சேர்ந்த மீரா குமார் சபாநாயகராக இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, பா.ஜ., வைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் சபாநாயகராக பதவி வகித்தார். இருவருமே பெண்கள் என்றாலும், பெண் எம்.பி.,க்கள் சபையில் பேசுவதற்கு அதிக வாய்ப்பளிப்பது இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. லோக்சபாவில், 78 பெண் எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே பேசுவதற்கு போதிய வாய்ப்பு வழங்குகிறார் சபாநாயகர் ஒம்பிர்லா. புதிதாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சில பெண், எம்.பி.,க்கள், சபையில் பேசுவதற்கு தயங்கும்போது, 'பரவாயில்லை... உங்களுக்கு என்ன பேச வருமோ... அதை பேசுங்கள். தயங்க வேண்டாம்' என, ஊக்கப் படுத்துகிறார். லோக்சபாவில் உள்ள பெண் எம்.பி.,க்களில் கணிசமானோர், திரைப்பட நடிகையர். இவர்களுக்கும் சபையில் பேசுவதற்கு தாராளமாக வாய்ப்பு தருகிறார் ஓம் பிர்லா. 'பெண் எம்.பி.,க்கள், ஆண் எம்.பி.,க்கள் என, எந்தவித பாகுபாடும் காட்டாமல், வாய்ப்பு வழங்குகிறார். பெண், எம்.பி.,க்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார். சபாஷ் ஓம் பிர்லா' என, பாராட்டுகின்றனர் சக அரசியல்வாதிகள்.

மனைவி ராஜ்ஜியம்!

இப்படியே போனால், நமக்கெல்லாம் கட்சியில் இடம் இருக்குமா, இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயின் நடவடிக்கைகளை பார்த்து புலம்புகின்றனர், சிவசேனா நிர்வாகிகள். பா.ஜ.,வுடனான கூட்டணியை சிவசேனா முறித்ததற்கே, உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மியின், 'கிச்சன் அரசியல்' தான் காரணம் என, மஹாராஷ்டிரா மாநில அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். உத்தவ் தாக்கரேயை முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததன் பின்னணியில், ராஷ்மி, முக்கிய பங்காற்றியதாகவும் கூறப்படுகிறது. தற்போது, சிவசேனா கட்சியில், தன் அதிகார மையத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து வருகிறார் ராஷ்மி.சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வின் ஆசிரியராக ராஷ்மி பொறுப்பேற்றுள்ளார். அவரது சகோதரியின் மகன் வருண் தேசாய்க்கு, சிவசேனா கட்சியின் இளைஞரணியில் முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. ராஷ்மியின் சகோதரர், ஸ்ரீதர், சிவசேனா கட்சியில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும், இவரது உத்தரவின்படியே நடப்பதாக, சிவசேனா பிரமுகர்கள் குமுறி வருகின்றனர். 'இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்தால், உத்தவ் தாக்கரேக்கு பதிலாக, ராஷ்மியே முதல்வராகி விடுவார் போலிருக்கிறது. சிவசேனாவில், இனி எல்லாமே ராஷ்மி ராஜ்ஜியம் தான்' என, முணு முணுக்கின்றனர், சிவசேனா நிர்வாகிகள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement