Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., போன்ற கட்சிகளும், பா.ஜ., வழியை பின்பற்றுமா...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி: பா.ஜ., என்றாலே, உயர் ஜாதியினர் என கருதப்படுவோர் அதிகமுள்ள கட்சி என்ற பேச்சு உள்ளது. அதை உடைத்து, உண்மை அதுவல்ல என்பதை உணர்த்துவதற்காகத் தான், என்னை தலைவராக, கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

'போஸ்ட் ஆபீஸ்கள் பல, கிராமங்களிலும் கூட, வங்கிச் சேவையில் ஈடுபடுவதால் தான், அத்தியாவசிய சேவை துறையாக உள்ளதோ...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அறிக்கை: ரயில், விமானம், பஸ் என, அனைத்து வாகன சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளதால், தபால் துறையினருக்கு, தபால்கள் வராததால் பணி இல்லை. எனவே, அந்தத் துறையினரை, அத்தியாவசிய துறையினர் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

'நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் தான் என்பதை, அவ்வப்போது உறுதிப்படுத்துகிறீர்களே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள, பல தரப்பு மக்களுக்கும், நிவாரணம் வழங்கும் வகையில், மத்திய அரசு, 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு, சலுகைகளை அறிவித்துள்ளது; இதை நான் பாராட்டுகிறேன்.

'ஏற்கனவே போலீசார் ஆங்காங்கே, அவ்வப்போது, லத்தியை சுழற்றி வருகின்றனர்; நீங்க வேற...' என, சொல்லத் துாண்டும் விதத்தில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: சமூக ஒதுக்கலுக்கு மாறாக, பொதுமக்கள் அதிகமாக இன்னும் கூடியவாறு தான் உள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்ய, மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

'நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் நம் பிரதமர் என்பதை, இப்போதாவது உணர்ந்து கொண்டீர்களே; போகிற போக்கை பார்த்தால், அரசியல் நிலைமையே தலைகீழாக மாறும் போல இருக்கிறதே...' என, நிம்மதி தெரிவிக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிக்கை: மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், கடந்த, 22ல், ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரதமர் மோடியின் திறமையை கண்டு, உலக நாடுகளே வியக்கின்றன.


'உங்கள் கட்சித் தலைவர் சோனியாவே, மோடிக்கு ஆதரவாக பேசுகிறார். நிலைமையை புரிந்து, மத்திய, மாநில அரசுகளை தட்டிக் கொடுக்கும் விதமாக அறிக்கை விடுங்கள்...' என, அறிவுரை சொல்லத் தோன்றும் விதமாக, தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த அறிவிப்புகளில் காட்டும் வேகத்தை, நடவடிக்கைகளில் காட்ட வேண்டிய அவசியம், மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எனவே, மருத்துவமனை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement