Advertisement

நல்லாயிருக்கு உங்க, 'டீலீங்!'

வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: 'அரசியலமைப்பு சட்டத்தில் ஜாதி, மதங்களை புகுத்தக் கூடாது' என, மார்க்சிஸ்ட் எம்.பி., - ரங்கராஜன், சமீபத்தில் கருத்து தெரிவித்தார். வாஸ்தவமான பேச்சு; ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரே ஒரு கேள்வி எழுகிறது...அரசியல், சட்டம், கணக்கெடுப்புக்கு ஜாதி, மதம் கூடாது; தேவை இல்லை என்கிறீர்கள். அப்புறம் எதற்காக, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றீர்கள்? எந்த அரசியல் கட்சி தலைவருக்காவது, 'இட ஒதுக்கீடு வேண்டாம்' என்று சொல்லும் தைரியம் உண்டா?கல்வி, பதவி, சலுகை என, அனைத்திற்கும், ஜாதி, மத அடிப்படையில், இட ஒதுக்கீடு வேண்டுமாம்... ஆனால் அவர்களிடம், ஜாதி, மதத்தை கேட்கக் கூடாதாம்... நல்லாயிருக்கு உங்க, 'டீலீங்!'ஒருவேளை ஜாதி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம்; பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் வழங்குங்கள் எனக் கூறினால், பாராட்டலாம்.பிற நாடுகளை போல, ஒரே மதத்தை மட்டுமே பின்பற்றுவோர் இருந்தால், கணக்கெடுப்பில் ஜாதி, மதம் குறித்து தேவையில்லை. இந்தியா பல்வேறு மதம், இனம், ஜாதி அமைப்புகளை உடையது; அதனால், நம் நாட்டில் உள்ளோர் குறித்த, தெளிவான கணக்கு வழக்கு வேண்டாமா?
மேலும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஆட்சேபகரமான கேள்விகள் ஏதேனும் இருந்தால், அதற்கு, பதில் தர வேண்டாம் என, கூறப்பட்டுள்ளது; பிறகென்ன?இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும் என, சிறுபான்மையினரை, எதிர்க்கட்சிகள் துாண்டி விடுகின்றன. எதிர்க்கட்சியினர், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, என்ன வேண்டுமானாலும் செய்வர் என்பது, இதன் வழியாக, மக்களுக்கு நன்றாகவே தெரிய வந்துள்ளது.

மலிவு விலையில்தரமானபொருட்கள்!

வி.புருஷோத்தமன், கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: குடும்ப அட்டைகளுக்கு, விலையில்லாமல் வழங்கப்படும் பொருட்களை, பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்தாமல், அவற்றை வெளி மார்க்கெட்டுகளில் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.அந்த அரிசியை, யாரும் உபயோகிப்பதாக தெரியவில்லை. ரேஷன் கடை ஊழியர்களும், எடை குறைவாகவே, அரிசியை வழங்குகின்றனர். சில கார்டுதாரர்கள், இலவச அரிசியை வாங்குவதே இல்லை.
நுகர்வோர் பொருட்களை வழங்கியதாக கணக்கில் காட்டி, அவற்றை, ரேஷன் கடை ஊழியர்கள் வெளியே விற்பனை செய்வது, தொடர்கதையாக உள்ளது.இலவச பொருட்களை, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும். இதனால், அரசு செலவிடும் தொகை கணிசமாக குறையும். அந்த பணத்தை, வேறு உபயோகமான பணிகளுக்கு செலவு செய்யலாம்.வெறும் ஓட்டு வங்கிக்காக, இலவசங்களை வழங்கி, நாட்டை நாசமாக்காதீர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு, தரமான பொருட்களை, மலிவான விலையில் வழங்கலாம். தமிழக அரசு, இதை செயல்படுத்துமா?


காவலர்களைகவனிப்போம்!

ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: நாம் ஒவ்வொருவரும், வீட்டில் நிம்மதியாக உறங்குகிறோம் எனில், அதற்கு, காவல் துறை, எந்நேரமும் விழித்துக் கொண்டிருப்பது தான், காரணம்.ஆனால், தமிழக காவல்துறையில், ஆண்டுக்கு, சராசரியாக, 27 நபர்கள் தற்கொலை செய்து கொள்வதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது.கடைநிலை ஊழியர் முதல், விஷ்ணுபிரியா போன்ற டி.எஸ்.பி., அந்தஸ்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் வரை, காவல் துறையில், தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்திருப்பது வேதனை தருகிறது.மன அழுத்தம் காரண மாக, இவர்களில் பெரும்பான்மையோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற கசப்பான உண்மை, புறக்கணிப்படுவது சரி அல்ல. ஓய்வற்ற வேலை, பணிச்சுமை, குடும்பத்திடம் இருந்து, நீண்ட நாட்களுக்கு பிரிந்திருத்தல், மேலதிகாரிகளின் நெருக்கடி, விடுமுறையின்மை, விடுப்பு மறுப்பு என, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், அவர்கள் பணி புரிகின்றனர்.காவல் துறையினரின் தற்கொலை போக்கை தவிர்க்க, சில யோசனைகள்...காவல் துறையில் தற்போதுள்ள, 10 ஆயிரம் காலி பணி இடங்களை நிரப்ப, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல் பொறுப்பு என்ற வகையில், கூடுதல் பணிச்சுமையை திணிப்பதை, தவிர்க்க வேண்டும்.மற்ற துறைகளை போல, காவலர்களுக்கும், வாரமொருமுறை ஒருநாள் முழு ஓய்வு வழங்க வேண்டும்.வெளியிடங்களுக்கு, மாற்றுப்பணியாக செல்லும் போது, அங்கு அவர்களுக்கென, நடமாடும் கழிப்பறை வசதி, நல்ல குடீநீர் மற்றும் உணவு வசதி செய்து தர வேண்டும்.ஒரு நாளைக்கு, இத்தனை மணி நேரம் பணி என, நிர்ணயம் செய்தல் அவசியம். காவலர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை, அரசு அமல்படுத்தி, காவலர்களை ஊக்குவித்தால், அவர்களின் பணி மேலும் சிறப்பாக இருக்கும்.உள்நாட்டு பாதுகாப்பில், காவல் துறையில் பணி, அத்தியாவசியமானது. எனவே, அவர்களுக்கு தேவையான வசதிகளை, அரசு செய்து தர வேண்டும்.


குடிமூழ்கிவிடாது!

எஸ்.ராமையா, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: 'கொரோனா' காரணமாக, மார்ச், 31ம் தேதி வரை, 'டாஸ்மாக்' கடைகள் செயல்படாது என, மாநில அரசு அறிவித்துள்ளது; வரவேற்கத்தக்கது.
இதற்கு முன், 'பார்' மட்டும் அடைத்த போது, கடையில் மதுபாட்டில்களை வாங்கி, சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கூட்டமாக அமர்ந்து, குடித்து, இடத்தை நாசம் செய்தனர், 'குடி'மகன்கள்.திறந்தவெளி பார்கள் உருவாகின. அந்த இடம், சுகாதாரக் கேடாக காட்சியளித்தது. தும்பை விட்டு, வாலை பிடித்த கதையாக, கடையை அடைக்காமல், குடி மையத்தை மட்டும் மூடி, என்ன பயன்?
இதை உணர்ந்தும், பலரின் அறிவுறுத்தலின்படியும், வருவாய் அள்ளித்தரும், டாஸ்மாக் கடைகளை மூட, அரசு முடிவெடுத்துள்ளது.மார்ச், 31ம் தேதி என்பதோடு அல்லாமல், கொரோனா நோயை, மிச்ச மின்றி அழித்தொழித்த பின், டாஸ்மாக் கடைகளை திறக்கலாம். ஒன்றும் குடி மூழ்கி போய் விடாது!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    நண்பர் திரு.அன்வர்தீன் அவர்கள் காவலர்களை கவனிப்போம் என்ற தலைப்பில் எழுதிய விஷயங்கள் உண்மையாகக் தான் இருக்கின்றது.நேர்மையாக பணிபுரியும் காவலர்களை சலுட் அடித்து தலை நிமிர்ந்து வணக்கம் தெரிவிப்போம்.பொதுவாஇவே காவல்துறை மக்களிடம் எளிதில் மயங்காதவாறு காவல் நிலைய ஆய்வாளர்கள் கொஞ்சம் தூரம் தனிமைப்படுத்தி கெடுபிடி யாக இருந்தால்தான் அந்த பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை காலத்து செய்ய முடியும்.இல்லாவிட்டால் லஞ்சத்தை வாங்கி கொண்டு தவறை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு நண்பர்களுக்காக ஆகிவிடுகிறார்கள்.இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஏற்படும்போது மாவட்ட உயர் அதிகாரிகளால் நெருக்கடிகளுக்கு ஆளாகி விடுகிறார்கள் ஊசியில் நூலை நுழைய விட்டால்தான் நூல் நுழையும்.காவலர்களின் சிலர் சரியில்லாததால் இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டு இறுதியில் தற்கொலை திகழ்கின்றனர்.காவலர் தரப்பிலும் ஆண் ஆதிக்கமாக இருந்து பெண் வன் கொடுமைகளுக்கு தீர்வு காண செய்யாமல் பெண் உயிர்கள் சேதம் ஏற்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளவேடு காவல் நிலையத்தில் மகளிர் சங்கம் மூலம் பெண் வன்கொடுமை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை 245/2015 பதிவு செய்து நீதி மன்றம் மூலம் ஏகப்பட்ட வாய்தாக்கள் வாங்கப்பட்டு இன்று வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்மணி உயிரே இழந்து விட்டார்.இதற்கு காவல்துறை ஊழியர்களும் பொறுப்பாகும்.காவலர் பணி அற்புதமான பணி.விரும்பும் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.கிடைத்தவர்கள் நல்ல வாய்ப்பினை பயன்படுத்துவது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டமாக உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement