Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சிலரின் விருப்பமும் அது தான். எனினும், மது வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல...' என, சொல்ல வைக்கும் வகையில், பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் அறிக்கை:வீட்டில் முடங்கிக் கிடந்து, சதா சர்வகாலமும் கொரோனா செய்திகளை கேட்டுக் கொண்டிருப்போருக்கு, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மதுக்கடைகளை குறிப்பிட்ட நேரம் திறந்து, மது விற்க அரசுகள் அனுமதி அளிக்கலாம். இப்படி கேட்பதால், என்னைப் பற்றி தவறாக நினைக்க வேண்டாம்.

'வெளியிடங்களில் தோளோடு தோள் சேர்ப்பது, கை கோர்ப்பது எல்லாம் கூடாது' என, நினைவுறுத்தும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: கொரோனாவால், மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சம், கவலையை போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆளும் கட்சியும், அரசும் மட்டுமே இதை செய்து விட முடியாது. அனைத்து கட்சிகளும் தோளோடு தோள் சேர்ந்து இதில் ஈடுபட வேண்டும்.

'அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணையாமல் இருப்பதே நல்லது...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது. அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு உள்ளது.

'சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னால், செய்து விடுவார்; கவலைப்படத் தேவையில்லை...' என, உறுதிபட கூறும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: குமரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால், மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த நோய் தொற்றை ஆராயும் வசதி, இந்த மாவட்டத்தில் இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்தேன். விரைவில், ஆவன செய்வதாக உறுதியளித்து உள்ளார்.

'மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், உங்கள் பேச்சு அமைந்துள்ளது...' என, பாராட்டத் தோன்றும் வகையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் வைரஸ் குறித்து அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement