Advertisement

உங்க வேலையை பாருங்க!

என்.மதியழகன், பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள, பழமையான சில ஹிந்து கோவில்களை, மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது விஷயமாக, இப்பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய அரசின் தொல்லியல் துறை நடவடிக்கையை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மற்றும் வீரமணி, வைகோ, திருமாவளவன் போன்ற வகையறாக்கள், தொடை தட்டி, எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர்.ஹிந்து கோவில்கள், தெய்வங்களை அவதுாறாக பேசிய புகாரில், வி.சி., தலைவர், திருமாவளவன் மீது, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வீரமணி, எப்போதும்; வைகோ,அவ்வப்போதும், ஹிந்து தெய்வங்களை வஞ்சனையின்றி, வசை பாடுவோர்.இவர்கள், சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, வெகு ஜன ஹிந்துக்களை அவமதித்து, வெறுப்பு அரசியல் செய்து வருவோர்.'ஹிந்து துவேஷம்' என்பது, ஈ.வெ.ரா.,வால், முன்னெடுக்கப்பட்டு, தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதி காலத்தில் உச்சமடைந்தது.
கடவுள் நம்பிக்கையற்ற, ஸ்டாலின் வகையறாக்களுக்கு, கோவில்களின் மீது அக்கறை வருவது ஆச்சரியம். காரியம் இல்லாமல், அவர்கள் கத்த மாட்டார்கள்!மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு, புராதனமான ஹிந்து கோவில்கள் வருவதால், இவர்களுக்கு இதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?
ஹிந்து கோவில் தொடர்பான விவகாரத்தை, ஆத்திகர்களான நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... நாத்திகர்களான நீங்கள், வேறு வேலைகளை பாருங்கள்.


எடப்பாடிகவனத்திற்கு!

'தண்ணி வண்டி' பிரபுராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' நோய் பரவலை தடுக்க, அத்தியாவசிய கடைகள் தவிர, மற்றவை மூடப்பட்டுள்ளன. 'டாஸ்மாக்' கடைகளும், மூடப்பட்டுள்ளன.ஆனால், இன்றைய சூழலில், அரசு மது விற்பனைக் கூடம், 'டாஸ்மாக் எலைட்' கடைகளை திறந்து வைப்பது, நல்லது.மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு உள்ள கட்டுப்பாடு போல, அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் எலைட்டை தினமும், நான்கு மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டும்.இதனால், மது சார்புள்ளமை நோயில் பாதிக்கப்பட்டோர், தற்கொலை செய்வதை தவிர்க்கலாம்; அவர்களுக்கு தோன்றும் அறிகுறிகளால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம்.மேலும், கள்ள சந்தையில், மது விற்பனையை ஒழிக்க முடியும். கள்ள சாராயம் காய்ச்சி, அதை குடித்து, பலர் உயிரிழப்பதையும் தடுக்க முடியும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும், சிகிச்சைக்காகவும் வசூலிக்கப்படும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, டாஸ்மாக் எலைட் மூலம், கூடுதல் வருவாய் ஈட்டலாம்.ஒரு குவார்ட்டருக்கு, 50 ரூபாய் கூடுதலாக வசூலித்தால், அரசின் பற்றாக்குறையை போக்கலாம். டாஸ்மாக் எலைட் திறப்பதன் மூலம், 'குடி'ப்பழக்கம் உள்ளவர்கள், தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கலாமே!மக்கள் நலன் கருதி, தமிழக அரசு சிந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆசிரியர் பணிக்கு அழகல்ல!

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும், தமிழக அரசு, ஆசிரியர்களை மட்டும் தினமும் வரவழைப்பது நியாயமா என்கிற ரீதியில், தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் புலம்புகின்றனர்.
இந்நோய் பரவலுக்காக, விடுமுறை விடப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு, வேலை பார்க்காவிட்டாலும், சம்பளம் வந்துவிடும்; ஆனால், கூலி தொழிலாளிகளுக்கு, வியாபாரிகளுக்கு கிடைக்குமா?தின சம்பளம் பெறும் கூலிகள், தங்கள் குழந்தைகளின் பசி பிணியை போக்க, என்ன செய்வர்?கொரோனாவின் பிடியில் இருந்து, நம் நாடு, விரைவில் விடுபட வேண்டும். அது தான், நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.அதற்காக மருத்துவர், காவலர், துாய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். அந்த வரிசையில், கொரோனா விழிப்புணர்வு பணியில், ஆசிரியர்களும் பங்கு பெறலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அப்பாவி மக்களிடம் விளக்கி கூறலாம்.
உங்கள் மாணவர்களின் பெற்றோரை, மொபைலில் தொடர்பு கொண்டு, அவர்கள் வீட்டில், சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா என, விசாரிக்கலாம்; தேவையான நடவடிக்கை எடுக்கக் கூறி, அறிவுறுத்தலாமே!'ஆசிரியர் பணி, அறப்பணி' என்பதை, மெய்ப்பிக்கும் வகையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, உங்கள் பணி நேரங்களில் மட்டுமாவது, உதவ முடியுமா என, சிந்தியுங்கள்.இயன்றால், பள்ளி அமைந்துள்ள ஊர் மக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி வழங்குங்கள். சந்தை உள்ளிட்ட இடங்களில், இடைவெளியை பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்துங்கள்.அதை விடுத்து, எங்களுக்கும் விடுமுறை வேண்டும் என, குரல் கொடுக்காதீர்; அது, உங்கள் பணிக்கு அழகன்று!


ஆட்டு மந்தையாய்இருக்காதீர்!

எல்.விஜயராகவன், சென்னை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள், தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மருத்துவர், காவலர், துாய்மை பணியாளர்கள், இரவு - பகல் பாராது பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில், அவசியமின்றி வெளியில் திரிந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி, போலீசார், ஊரடங்கு குறித்து அறிவுறுத்தினர்.அந்த வாலிபர், 'ஓட்டு கேட்டு வந்தவங்களை, இங்கே வர சொல்லுங்க... இது எங்க கோட்டை' என, பெண் போலீசாரிடம், அடாவடித்தனமாக நடந்து கொள்ளும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சினிமா ஆக் ஷன் ஹீரோவின் ரசிகன் அல்லது தமிழின போர்வையாளர் கும்பலைச் சேர்ந்த நபராகத் தான், அந்த வாலிபர் இருப்பார். சினிமா ஹீரோக்களும், மோசடி கும்பலும், இது போன்ற, அடாவடி நபர்களை தான் உருவாக்குகின்றனர்.
அந்த வாலிபருக்கு, காவல் நிலையத்தில், செமத்தியான, 'கவனிப்பு' நடந்தது, வேறு விஷயம்.இளைஞர்களே... ஆட்டு மந்தை போல இருக்காதீர். யார், எது சொன்னாலும், அதை பகுத்தறிந்து, புரிந்து கொள்ளுங்கள்!

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    விஜயராகவன் அவர்களே அவன் வாலிபனா? அவனின் உடல் அசைவுகள் எல்லாம் வெளிநாட்டு தண்ணி கம்பெனிக்கு ஆடிய நடிகனின் அசைவுகளை ஒத்திருந்தது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தற்போது பல கோயில்களின் அறங்காவலர், அலுவலர்கள் திமுக ஆண்ட காலத்தில் நுழைக்கப்பட்டவர்கள் உள் நிலவரம் அறிந்து எப்படித் தேட்டை போடலாம் என்று முயன்று, வெற்றியும் கண்டவர்கள் தொல்லியல் துறைக்குப் போய்விட்டால் ஆட்டம் போட முடியாதே என்ற கவலை தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement