Advertisement

இது உங்கள் இடம்

கருணாநிதி மட்டும் தான் குற்றவாளியா?

எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மறைந்த, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி, சிலர் தவறான கருத்துகளை, இப்பகுதியில் பதிவு செய்கின்றனர்.பிற்படுத்தப்பட்ட சமூகத்தில், ஏழைக் குடும்பத்தில், குக்கிராமத்தில் பிறந்து, உயர்நிலை படிப்பையே தாண்டாத, கருணாநிதியின் சாதனைகள் எண்ணிலடங்காதது.தொல்காப்பியம், ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் என, அனைத்தும் கற்று, அதிலிருந்து மேற்கோள் காட்டி பேசக் கூடியவர், சிறந்த எழுத்தாளர், கதை ஆசிரியர் என, பன்முகம் உடையவர்,


அவர்.தி.மு.க.,வில், அடிமட்ட தொண்டனாக இருந்து,தலைவராக உயர்ந்தவர். அண்ணாதுரைக்கு பின், கட்சியை, கட்டுக்கோப்பாக வழி நடத்தியவர்.தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து, நான்கு முறை, முதல்வராக பணியாற்றியவர். அவரது ஆட்சியில், பல சாதனைகள் நடந்துள்ளன. சமுதாயத்தில், ஏற்றத் தாழ்வு ஒழிய வேண்டுமென்பதற்காக, சமத்துவபுரங்கள் அமைத்துக் கொடுத்தார்.'ஊனமுற்றோர், திருநங்கை' என, பெயர் சூட்டி, கவுரவம் அளித்தார்.
விவசாயிகளுக்கு, உழவர் சந்தை; கிராமங்களுக்கு, 'மினி பஸ்' என, அவர் பல சாதனைகள் செய்ததை, மறந்துவிடக் கூடாது.நேரு, தேவகவுடா, லல்லு... இப்படி பல அரசியல்வாதிகள் செய்யாத, வாரிசு அரசியலை, கருணாநிதி மட்டும் தான் செய்து விட்டாரா?அரசியலில், எவரும் சம்பாதிக்காதை, இவர் சம்பாதித்து விட்டாரா?அரசியலில் சம்பாதிக்காதவனை, பிழைக்கத் தெரியாதவன் எனக் கூறும் இக்காலத்தில், கருணாநிதி மட்டும் தான், சொத்து சேர்த்துள்ளாரா? தமிழர்களுக்கு, முன்னாள் முதல்வர், கருணாநிதி செய்த சேவையையும், எண்ணிப் பார்க்க வேண்டும்.

அனைத்திலும்மதம் பார்க்காதீர்!
ஜெ.மனோகரன், மதுரை யிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன், இணைய தளத்தில் வெளியான, ஊரடங்கு குறித்த செய்திக்கு, 'இந்தியாவில், 'கொரோனா' பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்' என, 'கமென்ட்' பதிவு செய்திருந்தேன்.உடனே, அதற்கு, ஹிந்து சகோதரர் ஒருவர், 'இது குறித்து, வாடிகன் குரூப் கவலைப்பட வேண்டாம்' என, பதில் எழுதியிருந்தார்.


இதைப் படித்த உடன், மன வேதனையுடன், என் கருத்துப் பதிவை அழித்து விட்டேன்.உலகம், இன்று பெரும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டிலும், நோய் தொற்று பரவலைத் தடுக்க, அரசு இயந்திரம், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.இந்த இக்கட்டான நிலையிலும், ஜாதி, மதம் பார்ப்பது, சரியானது அல்ல. கொரோனா குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, விளம்பரம் இல்லாமலும், தகுந்த பாதுகாப்புடன், நம் நாளிதழ் வெளியாகிறது. அது போல, எந்தெந்த நேரத்தில், நாம் ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்பதை, சிலர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தாய்மொழியைகாப்போம்!

வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழ் வழியில் படித்தால், அரசு வேலையில் முன்னுரிமை என்ற மசோதா, தமிழக சட்டசபையில், சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது; இது, வரவேற்கத்தக்கது.மேலும், '10ம் வகுப்பு வரை, தமிழை கட்டாயமாக்க வேண்டும்.


அதுவும், அனைத்து வகையான பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வற்புறுத்தியுள்ளார்; இதுவும், சரியானதே!இந்த, இரு திட்டங்களையும் நிறைவேற்றி, அடுத்த கட்டமாக, பிளஸ் 2 வரை, தமிழை முதல் மொழிப் பாடமாக்க வேண்டிய முயற்சியை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

மேலும், உயர் கல்வியில், இன்னொரு மொழிப்பாடமாக, ஹிந்தியை கற்பிக்க வேண்டும்.கற்றல், கற்பித்தலுக்கு அறிவியல், கணிதம், வணிகம் மற்ற தொழில் முறை சார்ந்த பாடங்களை, ஆங்கிலத்தில் கற்றுக் கொடுப்பதே, சிறந்த கல்வி முறையாகும்.ஏன், இதுவும் தமிழில் முடியாதா என, கேள்வி எழுப்பலாம்... ஆனால், அது சாத்தியமாக, கால தாமதமாகும்.


மக்களுக்கும், மாணவர்களுக்கும், இந்த கல்வி முறை, முதலில் கசப்பாகத் தோன்றி, எதிர்ப்புத் தெரிவிப்பர்; பின், சரியாகி விடும்.இந்த நடைமுறை, மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும். மேலும், அழிவில் இருந்து, செம்மொழியான, தமிழை காக்கலாம்.தாய்மொழியில், கல்வி பயின்று, கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வதை, யாரும் எதிர்க்க மாட்டார்கள். இத்திட்டங்களை செயல்படுத்த, தமிழக கல்வித்துறை முன்வருமா?

ஒன்றுபட்டுபோராடுவோம்!

ஜி.ராமலிங்கம், சென்னை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


'கொரோனா' வைரஸ் பரவுதலை தடுக்க, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, இரவு - பகல் பாராது, மருத்துவர்களும், காவல் துறையினரும் போராடி வருகின்றனர்.இந்த இக்கட்டான காலத்தில், மக்களில் பலர், ஊரடங்கு உத்தரவுகளை மதிக்காமல், ஊர் சுற்றுவதும், சந்தைகளில் கூட்டமாக வலம் வருவதும், வியாதியை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பாகும்.


காவல் அதிகாரி ஒருவர், தேவையின்றி, வெளியே சுற்றி திரியும் மக்களிடம், கைகூப்பி, 'வீட்டிற்குள் இருங்கள்' என, மன்றாடும் காட்சி, நெகிழ செய்தது.பிரதமர் மோடி, தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டி இருக்கிறார்.எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின், 'அனைத்துக் கட்சிகளும், ஒரே நோக்கத்துடன் ஒன்றுபட்டு, கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டும்' என கூறியிருப்பது, வரவேற்கத்தக்கது.

அனைத்துக் கட்சித் தலைவர்களும், தம் கட்சியினரிடமும், பொதுமக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்நேரத்தில், 'அரசியல்' என்பதை, மூட்டைக்கட்டி, பரணில் போட்டு விடலாம். மனிதம் என்ற, ஒற்றை நோக்கத்துடன், செயல்படுவோம்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில், அனைவருக்கும் தாழ்வு என்பது தான், என்றைக்குமான, தாரக மந்திரம்.பேரிடரை எதிர்த்து, ஒன்றுபட்டு போராடுவது தான், அறிவுடமை.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement