Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்படியே, 'உல்டா'வாக கூறுகிறீர்கள். ரஜினியை பற்றி பேசுவதால் தான், உங்களை பலருக்கும் தெரிய வந்துள்ளது. இல்லையேல், காந்தியவாதிகளைப் போல, விளம்பர வெளிச்சம் உங்கள் மேல் விழுந்திருக்காது...' என, சொல்லத் தோன்றும் வகையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் பேட்டி: ரஜினியை வைத்து நான் விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை. அவரை முன்னேற்றவே, அவரை நோக்கி நான் செல்கிறேன். அவரை வைத்து, என்னை நான் முன்னேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


'கொஞ்ச பேர் கேட்க மாட்டேன் என்கிறார்களே... என்ன செய்வது?' என, கவலை தெரிவிக்க வைக்கும் வகையில், நடிகர், பிரகாஷ் ராஜ் அறிக்கை: கொரோனா வைரஸ் தானாக பரவாது; நாம் தான் பரப்புகிறோம். எனவே, அனைவரும் வீட்டில் இருங்கள்; சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். வீட்டை விட்டு நான் வெளியே வரவில்லை; என் மகனுடன் நேரத்தை கழிக்கிறேன்.

'எல்லா எதிர்க்கட்சிகளும், இதை வலியுறுத்தி விட்டன. நாமும் சொல்லி வைப்போம் என நீங்களும் சொல்கிறீர்களா்...' என்ற கேள்வியை எழுப்பும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவன் அறிக்கை: தமிழகத்தை சேர்ந்த, 16 லட்சம் தொழிலாளர்கள் மஹாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் சிக்கி, உணவின்றி தவித்து வருகின்றனர். அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'இதுபோல பலரும், பல விஷயங்களை இந்த நாட்களில் கற்கலாமே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், நடிகை, தேவயானி பேட்டி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைத்து, எங்கள் பண்ணை வீட்டுக்கு நாங்கள் வந்து விட்டோம். வந்த இடத்தில், சும்மா இருக்க கூடாது என்பதற்காக, சிலம்பம் கற்று வருகிறோம். நானும் என் மகள்கள் இருவரும், சிலம்பம் கற்கிறோம். எனினும், எங்களுக்குள் போதிய இடைவெளி உண்டு.

'நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலன் கருதி, இவ்வாறே இருப்போம்... ஆனா, வெளியில் யாருடனும் பேச என்ன தடை... போன் இருக்கே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழர் தேசிய முன்னணி தலைவர், பழ.நெடுமாறன் பேட்டி: சிறையில் கூட, சில மணி நேரம், அறையை விட்டு வெளியே விடுவர். பிறரை சந்திக்கலாம்; பேசலாம். ஆனால், இப்போது, வீட்டை விட்டு மட்டுமல்ல, வெளியில் யாருடனும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், புத்தகம் எழுத துவங்கி விட்டேன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement