Advertisement

இது உங்கள் இடம்

தொடரட்டும்நம் நாளிதழின்சேவை!உஷா முத்துராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எத்தனை செய்தி சேனல்கள் வந்தாலும், அவை எப்படிப்பட்ட செய்திகளை நேரில் காண்பித்தாலும், காலையில் நாளிதழ் படிக்கும் சுவாரஸ்யமே தனி தான்.காலையில், காபி அல்லது டீயுடன், நாளிதழ் படித்தால் தான், அந்த நாள் இனிய நாள்.இன்றைய சூழலில், 'கொரோனா' பாதிப்பு விபரங்களுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த அபாயத்திலும், நமக்கு நாளிதழை வினியோகிக்க வரும், 'பேப்பர் பாய்' ஊழியர்கள், பாராட்டத்தக்கவர்கள்.'பேப்பர் பாய்களுக்கு சல்யூட்' செய்த, நம் நாளிதழின் பெருமிதமான பணிக்கு, வாசகர்களாகிய நாங்கள், 'சல்யூட்' தெரிவிக்கிறோம்.மேலும், 'தினமலர்' நாளிதழ், பாதுகாப்புடனும், இயந்திர உதவியுடன் எவ்வாறு அச்சடிக்கப்படுகிறது என்பதை, படங்களுடன் தெரிவித்ததற்கு, பாராட்டுகள்.நம் நாளிதழில் கூறியது போல, பேப்பர் பாய், முகத்தில், 'மாஸ்க்' அணிந்து வந்து, வினியோகம் செய்தனர்.செய்திகளில், உண்மையின் உரைகல்லாக இருக்கும், 'தினமலர்' நாளிதழ், எத்ததைய பாதுகாப்புடன் வெளி வருகிறது என்பதிலும், நேர்மையை கடைப்பிடிக்கிறது.தொடரட்டும், நம் நாளிதழின் சேவை!
வி.சந்திரசேகரன், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின், பொதுத்துறை நிறுவனங்களில், 25 - 30 ஆண்டுகள் வரை பணியாற்றி, ஓய்வு பெற்றோர், 1,500 - 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் பெற்று, வாழ்வாதாரம் உயர வழியின்றி, தவித்து வருகின்றனர்.இவர்களின், ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படவே இல்லை.ஐந்து ஆண்டுகள் மட்டும், மக்கள் பணியாற்றிய பிரதிநிதிகளுக்கு, சம்பளம், ஓய்வூதியம், சலுகைகள் வாரி வழங்குகின்றனர். ஆனால், 30 ஆண்டுகள், அரசு பணியாற்றிய ஊழியர்களை புறக்கணிக்கின்றனர்.பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் உயர, கருணை தொகை என்ற பெயரிலாவது, மாதம், 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமராஜர்இன்றைக்குஇல்லையே!ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அடுத்த தேர்தலை பற்றி மட்டும் சிந்திப்பவர், அரசியல்வாதி; அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பவர், தலைவர். அவ்வகையில், மக்களின் தலைவர், காமராஜர் தான்.தன் ஆட்சி காலத்தில், எதிர்கால தேவைகளையும், தொலைநோக்கு சிந்தனையோடு பார்த்தவர், காமராஜர்.அவருடைய ஆட்சி காலத்தில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீராதாரங்களை பெருக்குவதில், பெரும் முயற்சி மேற்கொண்டு, வெற்றி பெற்றார்.கடந்த, 1962ல், இரண்டாவது முறையாக, காமராஜர் முதல்வர் பதவி ஏற்றார். மாதாந்திர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் ஒருவர், காமராஜரிடம், 'அய்யா... நம் மாநிலத்தில், அணை கட்டுவதற்காக, மத்திய அரசு ஒதுக்கிய பணம் அப்படியே இருக்கிறது. 'தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும், அணைகள் கட்டப்பட்டு விட்டதால், அப்பணத்தை, டில்லிக்கு திருப்பி அனுப்பி விடலாமா?' எனக் கேட்டார்.சற்று யோசித்த காமராஜர், 'நீங்கள் எல்லாரும், ரொம்ப படிச்சவங்க... அணைகள், எதுக்காக கட்டுகிறோம்; அதில் சேமிக்கும் தண்ணீரை, எதுக்காக பயன்படுத்துறோம்?' எனக் கேட்க, அனைவரும், 'பாசனத்திற்கு பயன்படுகிறது' என்றனர்.'அப்படின்னா... ஏரி, குளம், கிணறுகளில் இருக்கற தண்ணீர், பாசனத்திற்கு பயன்படாதா?' என்றார். அனைவரும், 'பயன்படும்' என்றனர்.'அப்படின்னா, அந்த பணத்தில், அணை கட்டினால் என்ன, குளம் வெட்டினால் என்ன? தமிழகம் முழுக்க ஏரி, குளம், கிணறுகள் வெட்ட, அப்பணத்தை செலவு பண்ணுங்க... 'டில்லியில் இருந்து கேட்டால், நான் பதில் சொல்லிக்கிறேன்' என, அதிரடியாக உத்தரவு போட்டார். அதன்படி, ஏராளமான நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன. அவரை போன்ற உன்னத தலைவர் இல்லாத காரணத்தால், தமிழகம் இன்று, ஆண்டுதோறும், தண்ணீர் பிரச்னையை சந்திக்கிறது.இன்றைய சூழலில், புதிதாக ஏரி, குளங்களை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை; இருப்பதையாவது, துார் வாரி பாதுகாப்பதே, அரசின் முக்கிய கடமை.கடந்தாண்டு, நம் நாளிதழில், 'களமிறங்குவோம். நமக்கு நாமே' திட்டத்தில், விழிப்புணர்வு வாயிலாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் துார் வாரப்பட்டன. அதனால், நிலத்தடி நீர் பெருகி, இன்று வரை, பெரியளவிற்கு தண்ணீர் பஞ்சத்தை சந்திக்காமல் உள்ளோம்.தமிழக அரசும், அதிகாரிகளும், நீர்நிலை பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதை பார்க்கும்போது, காமராஜர் போன்ற தலைவர், இன்று நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் பிறக்கிறது.

சுகாதாரத்தைபழகுங்கள்!வெ.ச.கோபாலன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த, ஊரடங்கு உத்தரவு, 'கொரோனா' நோய் தொற்று அபாயத்திலிருந்து, நிச்சயமாக நம்மை காப்பாற்றும். அந்த உத்தரவை, மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.கண்ட இடங்களில் எச்சில் துப்புவது; அசுத்தமான சுற்றுப்புறம்; திறந்தவெளியில், சிறுநீர், மலம் கழிப்பது; கை கழுவாமல், உணவு பொருட்களை தொடுவது போன்றவை, எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பது, அனைவருக்கும் புரிந்திருக்கும்.ஊரடங்கு உத்தரவை, 21 நாட்கள் முடிந்தவுடன் விலக்கி கொள்ளாமல், படிப்படியாக குறைக்கலாம். சமூக இடைவெளியை, தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.கொரோனா நோய்க்கான மருந்து, இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசி பற்றிய ஆய்வுகள், ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாலும், மக்கள் மிக கவனத்தோடு இருக்க வேண்டும்.ஒரு சிறிய அலட்சியம், பல உயிர்களை காவு வாங்கி விடும். சுகாதாரம் என்பது, வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளுங்கள்; அதற்கு இந்த, ஊரடங்கு நாட்களில் பழகிக் கொள்ளுங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • venkat Iyer - nagai,இந்தியா

  திரு.தர்மவன் நீங்களே சமுக அக்கறையை நினைத்து நீதிமன்றம் நாடலாமே.

 • Sundar Maha - Chennai,இந்தியா

  என் பெயரில் இண்டேன் எரிவாயு இணைப்பு உள்ளது. சென்ற 24.09.2019ல் சிலிண்டருக்கு பதிவு செய்ததாகக் காட்டி ஆறு மாதகாலமாக சிலிண்டர் கேட்டு பதிவு செய்ய விடாமல் மறுக்கிறார்கள். அந்த பதிவு நான் செய்யவில்லை தவறாகக் காட்டப்படுவதால்அதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை அனுப்பியதில் எந்த பலனுமில்லை. புகார் செய்தால் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் எந்திரத்தனமாக பதில் அனுப்புகிறார்கள்.

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த MLA சம்பளம்மற்றும் படிகள் சலுகைகள் ஒரு வெளிப்படையான ஊழல்.இதற்கு மக்கள் அனுமதி இல்லை.ஏன் இதன் மீது சமூக நல அமைப்புகள் ஏன் கோர்ட்டில் வழக்கு போடவில்லை.. மக்கள் அனுமதி பெற வேண்டும். தேர்தல் இந்த கொள்ளைக்கான அனுமதி இல்லை என்பதை கோர்ட் உணர்த்த வேண்டும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  எங்கே ? இந்த 21 நாட்களை பல்கலைக் கடித்துக்கொண்டு பிடித்துத் தள்ளியபின் பழைய குருடி என்று மும்மடங்காக விதிமீறல்கள் நடக்கும். தளர்விலும், கட்டுப்பாடுகளை அறவே நீக்காமல் கண்காணிப்புடன் இருந்தால் தான் நம் மக்களுக்கு ஒழுங்குமுறையைப் பின்பற்றத் தெரியும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement