Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

.'உங்கள் பேட்டியிலேயே, ரஜினி யாரிடம் கருத்து கேட்டு செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் பேட்டி: ரஜினி பக்கத்தில், நான் மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணும் மனநோயாளி அல்ல நான். ஆயிரம் கராத்தே தியாகராஜன்கள், மாரிதாஸ்கள், பாண்டேக்கள், ராகவா லாரன்ஸ்கள் வர வேண்டும் என, விரும்புவன் நான்.

'சுற்றிச் சுழன்று வந்த அரசியல் பிரமுகர்களுக்கு, இது கஷ்டமான நேரம் தான்...' என, பரிதாபப்படும் வகையில், ம.தி.மு.க., முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி பேட்டி: 'பொடா' வழக்கில், மதுரை சிறையில், 13 மாதங்கள் இருந்துள்ளேன். அப்போது கூட, பார்வையாளர்களை சந்திக்க முடிந்தது; ஆனால், இப்போது முடியவில்லை. மக்களின் நலனுக்காக, சுயமாக ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கிறேன்

'இப்படி எப்போதும் ஒற்றுமையாக இருந்தால் சரி தான்...' என, ஆறுதலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் பேட்டி: ஜெ., உதவியாளர் பூங்குன்றன், 2021 தேர்தலில், அ.தி.மு.க.,வில், 25 பேர் முதல்வர் கனவில் இருப்பர் என கூறியுள்ளது தவறு. அப்போதும், முதல்வராக, ஓ.பி.எஸ்.,சும், துணை முதல்வராக, பன்னீர் செல்வமும் தான் இருப்பர் என்பது உறுதி.

'எல்லாரும் இப்படித் தான். உங்களைப் போல, நிறைய படித்து, அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி: நாளிதழ்களை படிக்கிறேன். புத்தகம் படிக்க, அதிக நேரம் கிடைக்கிறது. போன் மூலம், கட்சியினருடன் நீண்ட நேரம் பேசுகிறேன். எனவே, வீட்டில் சும்மா இருப்பவர்கள், மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள, புத்தகங்களை படிக்க வேண்டும்.

'உலகளாவிய பொருளாதாரம், உலகளாவிய உறவுகளை கொடுத்து, உலகளாவிய கவலையையும் கொடுத்து விட்டதே...' என, சொல்லத் துாண்டும் வகையில், நடிகை பிரியா ஆனந்த் பேட்டி: என் பெற்றோர், அமெரிக்காவில் உள்ளனர். அங்கு, கொரோனா கோர தாண்டவம் ஆடுகிறது. பெற்றோரை நினைத்து வருந்தாமல், அவர்கள் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். இங்கு, நானும், பாட்டியும் மட்டும் தான். இருவரும் பழைய கதைகளை பேசி, நாட்களை போக்கி வருகிறோம்

.'இப்படி நீங்கள் அறிக்கை விடாவிட்டால், ராமலிங்கம் போல, நீங்களும், ஸ்டாலினால் நீக்கப்படுவீர்கள் என்ற அச்சத்தில் இதை சொல்கிறீர்களா...' என, மடக்கத் தோன்றும் விதத்தில், திராவிடர் கழகத் தலைவர், வீரமணி அறிக்கை: தி.மு.க., தலைவர், ஸ்டாலின் சொல்வது போல, வீடியோ கான்பரன்ஸ் மூலமாவது, அனைத்து கட்சிகளின் கருத்தை அறிய வேண்டியது, தமிழக அரசின் கடமை. இதில், வீண் ஜம்பம், கவுரவம் பார்க்கக் கூடாது. இந்த நேரத்தில் எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement