Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஓடிய பலரையும், ஓய்வெடுக்கச் செய்து விட்டது கொரோனா...' என, சொல்ல வைக்கும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் வானதி சீனிவாசன் பேட்டி: காலையில் மெதுவாக எழுகிறேன். தினமும் யோகா செய்கிறேன். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓட வேண்டும் என்ற அழுத்தம் இன்றி, நிதானமாக எல்லா செயல்களையும் செய்கிறேன். மனம் இப்போது அமைதியாக உள்ளது.

'விதண்டாவாதம் பேசி பேசியே, கட்சிக்கு முகவரியை தொலைத்து விட்டீர்கள்; இப்படியே பேசிக் கொண்டிருந்தால், மக்கள் மனதிலிருந்தும் நீங்கி விடுவீர்கள்...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: வீட்டில் ஓய்வாக இருப்பவர்களை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் கீதை படிக்க சொல்கிறார். நான் சொல்கிறேன், ஈ.வெ.ரா., எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற நுாலையும் படியுங்கள் என்று!

'டாக்டர்கள் இப்படித் தான் இருக்க வேண்டும்...' என, பாராட்டும் வகையில், கேரள மாநில அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் விஜயகிருஷ்ணன் அறிக்கை: டாக்டரின் கடமை, நோயாளியை குணப்படுத்துவது. அத்தகைய டாக்டரிடம் போய், மதுபானத்திற்கு சான்று கொடுக்க கேட்பது சரியல்ல. மதுபானம் அருந்தியவருக்கு, பிற சிகிச்சையின் போது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கேரள அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

'உண்மையிலேயே அவசியமான கோரிக்கை; அரசு கவனிக்க வேண்டும்...' என, வலியுறுத்தும் வகையில், அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கத் தலைவர் சிவசங்கர் சர்மா பேட்டி: கோவில்கள் பூட்டப்பட்டுள்ளதால், வருவாய் இன்றி அர்ச்சகர்கள் அவதிப்படுகின்றனர். பக்தர்கள் வழங்கும் காணிக்கையை நம்பியே பல கோவில்களில் குருக்கள் உள்ளனர். தற்போது கோவில்கள் பூட்டப்பட்டுள்ளதால், மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும்

.'பணப்பட்டுவாடா நேற்று தான் துவங்கியுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்; கூட்டம் சேர்வதை பொறுத்து, அரசு தக்க முடிவெடுக்கும் என நம்புவோம்...' என கூறி, ஆறப் போடும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் அறிக்கை: ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவி மற்றும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. எல்லாரும் கடைகள் முன் குவிவதை தவிர்க்க, பயனாளிகளின் மொபைல் எண்ணுக்கு, எப்போது வந்து வாங்க வேண்டும் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.

'உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய இளைய தலைமுறையினரின் மனதை, கொரோனா மாற்றியுள்ளது...' என, கூறும் வகையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேட்டி: எனக்கு பல பாடங்களை, ஊரடங்கு கற்றுத் தந்துள்ளது. இதுவரை, சுயநலத்துடனும், பொறுப்பு இல்லாமலும், பெரியவர்கள் மீது அக்கறை இல்லாமலும் இருந்த எனக்கு இப்போது, அவற்றை அறிய முடிகிறது. சும்மா இருக்கும் தருணங்கள், யோசனை மிகுந்த தருணங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement