Advertisement

ரயில்வேயின் நியாயமற்ற செயல்!

கொ.வை.அய்யப்பன், பதுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும், ஏப்., 14ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்த பயணியருக்கு, கட்டணம் திரும்ப தரப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது, பாராட்டுக்குரியது.ஆனால், முழு கட்டணத்தையும் திரும்ப வழங்காமல், முன்பதிவு சேவை கட்டணத்தை கழித்து, மீதி பணத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது, நியாயமற்ற செயல்.வங்கியில் வாங்கிய கடனுக்கே, வட்டி மற்றும் தவணைத் தள்ளுபடி வழங்கும் மத்திய அரசு, ரத்தான ரயிலுக்கு, சேவை கட்டணம் பிடித்தம் செய்வது நியாயமில்லை. முழு தொகையையும் திரும்பத் தர, ரயில்வே நிர்வாகம் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

***

மக்கள் மருந்தகத்தில் முகக் கவசம்!

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடியின், 'மக்கள்' மருந்தகம் மூலம், சத்தமில்லாமல், மிகக் குறைந்த விலையில், மருந்து விற்பனை நடந்து வருகிறது; இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்து வருகின்றனர்.'கொரோனா' வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் முகக் கவசம், கை உறை, 'சானிடைசர்' போன்றவை, உடனடியாக தேவைப்படுகின்றன.

தற்போதைய தேவை அளவிற்கு, சப்ளை இல்லாததால், வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கின்றனர்; இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர்.மக்கள் மருந்தகம் மூலம் முகக் கவசம், கை உறை, 'சானிடைசர்' போன்றவற்றை விற்பனை செய்தால், மக்கள் பயன் பெறுவர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?


***

ஊரடங்கு வேளையிலே...

கே.ராமநாதன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், தொழிற்சாலை, பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; போக்குவரத்து இல்லை. எனவே, இந்த நாட்களை, அரசு பயன்படுத்திக் கொள்ள சில யோசனைகள்...

* டில்லி உட்பட முக்கிய இடங்களில், சுற்றுச்சூழல் மாசு எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ந்து, பதிவு செய்யலாம். பின்னாட்களில், சுற்றுச்சூழல் மாசு அதிகமாகும்போது, ஒப்பீடு செய்ய, இந்தத் தரவுகள் பயன்படும். மாசை கட்டுப்படுத்த, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்ற தெளிவு பெறலாம்

* அரிதாகக் கிடைத்திருக்கும் இந்நேரத்தில், அரசு அலுவலக ஊழியர்கள், நிலுவையில் உள்ள கோப்புக்களை விரைந்து முடித்து, பணிச் சுமைகளைக் குறைத்துக் கொள்ளலாம்

* கணினியை எப்படி பயன்படுத்துவது என்ற பயிற்சியை, தேவையான ஊழியர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம்

* வெவ்வேறு பிரிவுகளில், மாறி மாறி பணியாற்றிட, இந்நாட்களை பயன்படுத்தி, ஊழியர்களை பழக்கப்படுத்தலாம்

* நடைமுறையில் உள்ள அலுவலக ரீதியான வழிமுறையில் உள்ள சிக்கல்கள், சிரமங்களை, உரிய மேலதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சரி செய்யலாம்.கெட்டதிலும், ஒரு நல்லது என்பர். அது போல, இந்த ஊரடங்கு நாட்களை, ஆக்கப்பூர்வ விஷயத்திற்காக, அரசு அதிகாரிகள் பயன்படுத்தலாம்.

***
என்ன செய்தாய் நாட்டிற்கு?
எ.சேனாதிபதி, கணியூர், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய, மாநில அரசுகள், 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, சிறப்பான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.தமிழகத்தில், ஒன்பது இடங்களில், கொரோனா வைரஸ் ஆய்வு மையம் துவக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை, அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி, கண்காணிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் கிருமிநாசினி தெளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என, பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றன.சாலையில் வசிப்போருக்கு உணவு வழங்குவது, குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவராண நிதி, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கல், மின் கட்டண கால நீட்டிப்பு என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓரிரு நாட்களிலேயே, 6,000க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய, மருத்துவ ரயிலை உருவாக்கி, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளது, இந்தியா.துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில், 'லாக்டவுன்' செய்து, கொரோனோ வைரஸ் பரவலை, கட்டுப்படுத்தினர்; அதற்கு, மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.அங்குள்ள மனிதர்கள், சுய கட்டுப்பாட்டுடனும், தண்டனைகளுக்கு பயந்தும், வீட்டிலேயே முடங்கினர். உலக அரங்கில், 'பெரியண்ணன்' போக்கில் நடந்து கொள்ளும் அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் தாக்குதலால், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், 'நியூயார்க் நகரை லாக்டவுன் செய்யலாம்' என, அதிபர் டிரம்ப் அறிவிக்க இருந்த நிலையில், எதிர்ப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக, அத்திட்டத்தை கைவிட்டுள்ளது, அமெரிக்கா அரசு.ஒரு ஆண்டு முழுதும், 'லாக்டவுன்' செய்தாலும், அதை சமாளிக்ககூடிய, பொருளாதார பின்னணியை உடையது, அமெரிக்கா.நம் பொருளாதார நிலையில், ஊரடங்கு நாட்களை கடப்பதே, சவாலானது. மக்கள், பொறுப்பில்லாமல் நோய் பரப்பினர் எனில், நாட்டை காப்பாற்றவே முடியாது.

பொதுமக்களாகிய நாம், ஊரடங்கு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதுவரை நாட்டிற்காக நாம் என்ன செய்து விட்டோம்? ஏப்., 14ம் தேதி வரை, முழுமையாக வீட்டிலிருந்தபடியே, நாட்டிற்கு சேவை செய்வோம்; சமூக இடைவெளியை பின்பற்றுவோம்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • AXJ - Chennai,இந்தியா

    PM Modi is the only leader who is thoughtful, considerate, bold, proactive, seasoned at this period of our peril to lead, motivate & save 130 crore people. None others have a speck of leadership quality . They are all selfish passive bystanders. Let them continue bark at the Sun. Indians will not stay put indoor & our people are borne to be misled easily by the passive bystanders. As a senior citizen of India, I request PM Modi to Emergency or Martial Law to save Indians from the wolves in sheep's skin. That is the only medicine available now to save us all from Corona too. (Indian)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement