Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்படி கொஞ்சம், இப்படி கொஞ்சம் பேர் இருக்கத் தான் செய்வர். அவர்களைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் வேலைகளில் மும்முரமாக ஈடுபடுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி: கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க அரசு தீவிரமாக செயலாற்றி வருகையில், நடிகர் கமல் மற்றும் காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், அரசியல் செய்கின்றனர். அரசியல் காரணங்களுக்காக, அரசை குறை கூறுகின்றனர்.

'நீங்கள் சொல்வது உண்மை தான்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு: காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறையினரை ஏமாற்றி விட்டு, வெளியே சுற்றலாம். ஆனால், கொரோனா வைரசை ஏமாற்ற முடியாது. அது தொற்றினால், தப்பிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்து, வீடுகளுக்குள் மக்கள் இருக்க வேண்டும்.

'இந்த விஷயத்திலாவது நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் சரி...' என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா பேட்டி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு, மாநில செயலர்களை, போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். அதுபோல, அந்தந்த மாநில நிலவரம் குறித்தும் விசாரிக்கிறேன். நிறைய நுால்களை படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது; படித்து வருகிறேன்.


'இந்த நேரத்தில் கேட்டால், உங்கள் கோரிக்கையை அரசு எப்படி பரிசீலிக்கும்; அதெற்கென நேரம், காலம் தெரியாதா...' என, கண்டிப்புடன் கேட்கத் தோன்றும் வகையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சிசுந்தரம் அறிக்கை: மாநிலத்தின், 18 லட்சம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள், தங்களின் ஒரு நாள் சம்பளத்தை, கொரோனா நிவாரணத்திற்காக வழங்கியுள்ளனர். அவர்களின் நல்லெண்ணத்தை புரிந்து, அவர்கள் மீது சில மாதங்களுக்கு முன் தொடரப்பட்ட தண்டனை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.


'பரவாயில்லையே, நடிப்புடன் நின்று விடாது, சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறீர்களே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், நடிகை தீபிகா படுகோனே பேட்டி: 'லிவ், லாப், லவ்' என்ற சமூக தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான விழிப்புணர்வுகளை, அதன் மூலம் ஏற்படுத்தி வருகிறோம். அனைவருக்கும் அமைதி, ஆறுதலை அளிப்பது தான் என் நோக்கம்.


'ஒட்டுமொத்த உலகமும், இறைவனிடம் கையேந்த வேண்டும்; அப்போதாவது நிலைமை மாறுகிறதா என பார்க்கலாம்...' என, நம்பிக்கையாக சொல்லும் வகையில், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், எஸ்.கே.மயிலானந்தன் அறிக்கை: கொரோனா கொடூரத்திலிருந்து இந்த உலகம் விடுபட வேண்டும் என வேண்டி, எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், காலை, மாலை நேரங்களில் இறைவணக்கம் செய்யுங்கள். இறைவனை வேண்டுவது ஒன்றே, நல்ல பலன் அளிக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement