dinamalar telegram
Advertisement

கொஞ்சம் புண்ணியமும் சேருங்கள்!

Share

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊழல் செய்து, மூட்டை மூட்டையாய் சேர்த்து வைத்திருக்கும் பணத்தால், எமனை விலைக்கு வாங்க முடியாது. உயிருக்கு பயந்து, தினமும் செத்து செத்து பிழைக்கும் இந்த வேளையில், யோசியுங்கள் அரசியல்வாதிகளே...பணத்தால், மரணத்தை வெல்ல முடியவில்லை என்ற விரக்தியில், இத்தாலி மக்கள், சாலையில் பணத்தை வாரி இறைக்கும் காட்சி, நம் மனதை உலுக்கிவிட்டது.ஆங்கிலக் கவிஞர், டபிள்யு.ஹெச்.ஆடன் என்பவர், 'பணமும், தேவையும் மட்டுமே, ஒரு மனிதனை வாழ வைத்து விடாது' எனக் கூறியுள்ளார். 'கழுத்து வரை இருக்கும் பணம், உன்னைக் காப்பாற்றும்; கழுத்துக்கு மேலே போனால், நீ தான், அதைக் காப்பாற்ற வேண்டும்' என்பது, ஆங்கில பழமொழி.எமதர்மன் ஒருவன் தான், லஞ்சத்திற்கு அடிமையாகவில்லை. இல்லையெனில், நம்மூர் அரசியல்வாதிகள், அவனையும், பெட்டியுடன் சென்று பார்த்து, காரியம் முடிப்பர்.பணத்தால், தாய், தந்தை மட்டுமல்ல, ஆயுளையும் சேர்த்து வாங்க முடியாது. உணவு வாங்கலாம்; பசியை வாங்க முடியாது. பஞ்சு மெத்தை வாங்கலாம்; துாக்கத்தை வாங்க முடியாது. உண்மையான நண்பனையோ, பாசமான உறவையோ வாங்க முடியாது.இன்று, உலகையே திருப்பிப் போட்டுள்ள, 'கொரோனா' எனும் அரக்கனை எதிர்கொள்ள, பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது. பிரதமர் முதல், முதல்வர் வரை, 'நிதி கொடுங்கள்' என, மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.நல் உள்ளம் படைத்த பலர், அவரவர் சக்திக்கேற்ப, நிதி வழங்கி வருகின்றனர். கைதி ஒருவர், சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து, 5,000 ரூபாய் கொடுத்துள்ளார்.அரசியல்வாதிகளே... நீங்கள், ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ளது, பணம் இல்லை; பாவம். அந்த பாவத்திற்கு, பரிகாரம் தேடும் நேரம் இது.மரண பீதியில், உலகமே ஆடிப்போய் இருக்கும் இவ்வேளையில், பதுக்கி வைத்துள்ள பணம், உங்களை காப்பாற்றாது. மூட்டை மூட்டையாய் பதுக்கி வைத்துள்ள பணத்திற்கு, விடுதலை கொடுங்கள். நம் நாட்டை காப்பாற்றுங்கள்! இந்த இக்கட்டான நிலையிலாவது, திருந்துங்கள் அரசியல்வாதிகளே... தலைமுறைக்கு, சொத்து சேர்ப்பதில் தவறில்லை. அதோடு கொஞ்சம் புண்ணியமும் சேர்த்து வையுங்கள்.மரணத்திற்கு முன்னால், சொத்து, பணம் ஏதும் பெரிதில்லை என, புரிய வைத்துள்ளது, கொரோனா. எனவே, மனித குலத்தை காக்க, நிதி கொடுங்கள்.

இதுநல்லாத் தான் இருக்கு!
எம்.லதா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலகெங்கும், காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. இந்திய பாரம்பரிய முறையை, உலகமே கும்பிடுகிறது.கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவு என்பது, நம் எல்லாருக்குமே புதிதாக உள்ளது.தற்போது, எல்லாரும் கைக்குட்டை வைத்து தும்முகின்றனர். வீதிகள், சுத்தமாக உள்ளன. யாரும், எச்சில் துப்புவதில்லை, 'உச்சா' போவதில்லை.அலுவலகம் செல்லும் ஏனைய நாட்களில், 40 நிமிடம் ஆகும்; ஆனால், தற்போது, 15 நிமிடத்தில் சாத்தியமாகிறது.சில நாட்களாக, காவலர்கள் கையில் லத்தியை காணோம். சாலையில் வாலாட்டும் வெட்டி பயல்கள் எல்லாம், தோப்புகரணம் போடுவதையும், வீதிகளில் தவழ்வதையும் காண்கிறோம். 'குடி'மகன்களின் அட்டூழியம் இல்லை.அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்குவதால், கையில் கொஞ்சம் சேமிப்பை பார்க்க முடிகிறது. வீட்டிலேயே, சமைக்கின்றனர்.'வீட்டில், நாள் முழுவதும், வெட்டியாகத் தானே உட்கார்ந்து இருக்க' எனக் கேட்ட கணவர்களுக்கு, 'வீட்டுப்பாடம்' ஆரம்பித்துள்ளது.வீதிகளில், பிச்சை எடுப்பவர்களை காண முடியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சிலரை மட்டும், வீதி ஓரங்களில் காண முடிகிறது. ப்ளீஸ்... யாராவது இவர்களையும், பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்களேன்.திருட்டு, வழிப்பறி, நகை கொள்ளை, கள்ளக்காதல், காதலி குத்தி கொலை போன்ற செய்திகளை காணவில்லை.குடும்பமாகவே பேசி, பழகி, சமைத்து, விளையாடி என, பொழுது ஜாலியாக தான் இருக்கிறது.சென்னை உள்ளிட்ட, பெரிய நகரங்களில், காலையில், இரண்டு மணி நேரம், மாலையில், இரண்டு மணி நேரம் பயணித்து, அலுவலகம் செல்லாமல், 'வொர்க் பர்ம் ஹோம்' சுகமாக தான் இருக்கிறது.மொத்தத்தில், ஆண்டில், இரண்டு வாரம், இதுபோல், 144 தடை வந்தால், நன்றாக தான் இருக்கும் என, தோன்றுகிறது. ஆனால் அது, கொரோனா போன்ற காரணங்களுக்காக அல்லாமல், இயல்பாக இருக்க வேண்டும்.

என்ன நியாயம்இருக்கிறது?-
பிரபு சங்கர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' பாதிப்பில் இருந்து, மக்களை மீட்க, எம்.பி.,க்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தாராளமாக நிதி வழங்கி வருகின்றனராம்.தொகுதி மேம்பாட்டு நிதி என்பது, எம்.பி.,க்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கும் நிதி தானே?ஒவ்வொரு, எம்.பி.,க் கும், ஆண்டுக்கு, தலா, 5 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்தத் தொகை, அவர்களின் தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படுத்த கொடுக்கப்படுகிறது. அதாவது, நம் வரிப்பணத்தை, மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த கையாளப்படும், ஒரு வழி இது. இதற்கிடையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, எம்.பி.,க்கள் வழங்கியுள்ளனர். அவர்களின், சொந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.'டாடா' நிறுவன அதிபர், ரத்தன் டாடா, பிரதமர் நிவாரண நிதிக்காக, 1,500 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார். இந்தக் கொடையில் இருக்கும் பொறுப்புணர்வு, மரியாதை, பாராட்டு எதையும், தொகுதி நிதியிலிருந்து வழங்கும், எம்.பி.,க்களுக்கு அளிக்க முடியாது.காரணம், ரத்தன் டாடா கொடுத்தது, தன் சொந்த சம்பாத்தியத்தில் இருந்து! பொதுமக்களும், பிரபலங்களும் தங்களால் இயன்ற நிதி, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவர்களை பாராட்டி, நன்றி கூறலாம்.தன் சொந்தப் பணத்திலிருந்து, நிவாரண நிதி கொடுத்தனர் எனில், அப்போது, எம்.பி.,க்களை பாராட்டலாம்.மாறாக, மக்களின் வரிப்பணம், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியாக மாறி, மீண்டும் மக்களையே வந்தடைவதால், இடைப்பட்ட அரசியல்வாதிகள் புகழையும், பாராட்டையும் பெற்றுக்கொள்வதில், என்ன நியாயம் இருக்கிறது?lll
யார் அறிவுரை சொல்வது
ந.செந்தமிழ்வாணி, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 30ம் தேதி, 'ஓட்டல், டீக்கடை இல்லை' என்று, பால் உற்பத்தியாளர்கள், லிட்டர் லிட்டராக பாலை, கீழே கொட்டியுள்ளனர். இது, எந்த விதத்தில் நியாயம்?இதற்கு முன்பும் ஒருமுறை, அரசு, உரிய விலை அளிக்கவில்லை என்று, பால் உற்பத்தியாளர்கள், கேன் கேனாக பாலை, தெருவில் கொட்டினர்.இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், நியாயமான கோரிக்கையை, அரசு ஏற்காததால், தங்கள் எதிர்ப்பை, இப்படி வெளிப்படுத்தினர் என, ஏற்றுக் கொள்ளலாம்.சரி, போனது போகட்டும்... இப்போது உள்ள சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், மலிவான விளம்பரத்துக்காக, பாலை கொட்டுவது நியாயமா?டீக்கடை, ஓட்டல் இல்லாவிட்டால் என்ன? ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு கொடுத்திருக்கலாமே...அதுவும் இல்லாவிட்டால், தன்னார்வலர்களிடம் கொடுத்திருந்தால், அவர்கள், தெருவோர ஆதரவற்றோருக்கு, பாலை காய்ச்சி கொடுத்திருப்பரே!சுய உதவி குழுவினரிடமோ, என்னைப் போன்ற இல்லத்தரசிகளிடமோ, தலா, 2 லிட்டராக பிரித்து கொடுத்திருந்தால், டீயோ, காபியோ தயாரித்து, தேவை உள்ளோர்களுக்கு கொடுத்திருப்போம். பாலை காய்ச்சி, தயிராக்கி இருப்போம்.மேலும், தயிரை கடைந்து, வெண்ணெய் எடுத்த பின், மோராக்கி, வெயிலில் காய்ந்தபடி சேவையாற்றும் காவலர், துப்புரவு தொழிலாளர், மருத்துவ துறையினருக்கு இலவசமாக கொடுத்து, நல்ல பெயர் வாங்கியிருக்கலாம்.வெண்ணெய் காய்ச்சி நெய்யாக்கியிருந்தால், நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.இதை எதுவுமே செய்யாமல், கீழே கொட்டி நாசமாக்கியது, வேதனை அளிக்கிறது. இவர்களுக்கெல்லாம், யார் அறிவுரை சொல்வது!எதிர்காலத்தில், இதுபோன்று, உணவுப்பொருட்களை வீணாக்குவதை தவிர்த்து, மாற்று யோசனை செய்யலாம்.கடந்த, ஏப்., 1ம் தேதி வெளியான நம் நாளிதழில், புதுக்கோட்டை இயற்கை விவசாயி ஒருவர், தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை, மக்களுக்கு இலவசமாக வழங்கி, முன்னுதாரணமாக திகழ்கிறார் என, செய்தி இடம்பெற்றிருந்தது.நாமக்கல்லில் தேங்கியுள்ள முட்டைகளையும், ஏழை மற்றும் ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு வழங்கலாமே!

இந்தியாநிச்சயம்சாதிக்கும்!

-கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுக்க, 'கொரானா' வைரசால், எட்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா நாடுகளில், அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை, மிகவும் குறைவு.உலகளவில் சீனாவும், இந்தியாவும் மிக அதிக மக்கள் தொகை உடைய நாடுகள். இந்தியாவை விட, சற்று அதிக மக்கள் தொகை, சீனாவில் இருந்தாலும், நில பரப்பும், அங்கு அதிகம்.உலகின் பெரும் வல்லரசு நாடான, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட, இந்தியாவின் மக்கள் தொகை, 4 மடங்கு அதிகம். பரப்பளவில், அமெரிக்காவை விட, இந்தியா, 3 மடங்கு சிறியது.எனவே, அமெரிக்கா மற்றும் சீனாவை ஒப்பிடும்போது, இந்தியா மிக நெருக்கமாக, அதிக மக்கள் வாழும் நாடு என்பதை, எளிதாக புரிந்து கொள்ள முடியும். சீனா, ஒரு இரும்புத்திரை நாடு. அந்நாட்டில், ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதில்லை. அரசு வெளியிடும் தகவல் தான், ஊடகங்களில் வெளியாகும்.எனவே சீனாவில், கொரானாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் என, அறிவிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கை, உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. சீனா பெரும் இழப்பை சந்தித்து இருக்கும் என்பதில், சந்தேகமில்லை.சீனா, அமெரிக்கா, இத்தாலி மற்றும் பிற நாடுகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையோடு, இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும்போது, மத்திய அரசு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது, நிச்சயமான உண்மையாகும்.மிக அதிக மக்கள் தொகையும், அவர்கள் நெருக்கமான நிலையில் வாழும் சூழ்நிலையிலும் கூட, இந்தியாவில் பாதிப்புகள் மிகவும் குறைவு என்பது, அரசின் திட்டமிடலுக்கு கிடைத்த வெற்றி. இதை, மறுப்பார் இல்லை.எனினும், நோய் பாதிப்பு மேலும் குறைய, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றுபட்டு, நம் தேசத்தை அழிவின் பிடியில் இருந்து காக்க, உறுதியேற்போம். நம் அரசு, கொரோனாவுக்கு எதிரான போரில், நிச்சயம் வெற்றி பெற்று, சாதனை படைக்கும்.

'மெக்கானிக்'கடையை திறக்கலாமே!

-ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ், உலகையே மிரட்டி வருகிறது. தொற்று நோய் பரவலை தடுக்கும்விதமாக, நம் நாட்டில், 21 நாட்கள், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நோய், சமூக தொற்றாக மாறாமல் இருக்க, மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்; இல்லையெனில், பாதிக்கப்பட போவது, நாம் தான்.ஊரடங்கு காலத்தில் மருத்துவர், காவலர், சுகாதாரப் பணியாளர், பத்திரிகையாளர், அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவர்களின் பணியால் தான், கொரோனா பரவலை, அரசு தடுத்து வருகிறது; மக்களின் அத்தியாவசிய தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.மேற்கண்ட பணிகளில் இருக்கும் நபர்களின் வாகனங்கள் பழுதடைந்தால், அதை சரி செய்ய, தற்போது வாய்ப்பு இல்லை. அவர்களின் பணி பாதிக்கப்படும்.எனவே, தமிழக அரசு, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடையை, திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அங்கு, மக்கள் கூடுவதற்கு வாய்ப்பு இல்லை.'ஏப்., 15ம் தேதிக்கு பின், ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படாது' என, அரசு தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில், ஏப்., 15ம் தேதிக்கு பின், கொரோனா நோய் தொற்று இருக்கும் மாவட்டத்திற்கு மட்டும், 'சீல்' வைக்க வேண்டும். மற்ற மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, அரசு உதவ வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • SIVA G india - chennai,இந்தியா

    பிச்சைகார்களுக்கும் கை கழுவ தண்ணீருக்கும் ஸானிடைசருக்கும் எங்கு போவார்கள். அவர்களை அலச்சிய படுத்தினால் மறைமுகமா அவர்கள் அறியாமல் கரோனா தொற்று எந்த அரசியல்வாதியானாலும், அதிகாரியானாலும், ஆன்மீக மதவாதியானாலும் குடும்பத்துடன் பாதிப்பதில் இருந்து தப்ப முடியாது. இயற்கையை [இறைவன்] இம்சித்தற்காக அதன் வலிக்காக, இயற்கை சிறிது நெட்டி எடுத்தற்றகே மணித இனமே நடுங்குகிறது. இனி இயற்கையை சீண்டாமல் இருத்தல் அவசியம்.சீண்டுபவர்களை இனியும் தடுக்காவிட்டால் தாத்தா பாட்டிகளின் கண்முன்னே பேரகுழந்தைகள் - - - எந்த தேசத்தில் இருந்தாலும் தடுக்க முடியாது. முறையற்ற சம்பாதனைகளை சம்பாத்தவர்கள் எல்லோரும் எழ்மையானவர்க்கும் பிச்சைகார்களுக்கும் வைத்தியத்திற்கும் விளம்பரமின்றி பாவத்தை கழிக்க உங்கள் பேரகுழந்தைகளின் நன்மைக்கா செலவிடுங்கள். ஏதேனும் சிலர்க்கு மனமாற்றம் வரலாம்.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    நமது அரசியல்வாதிகள் ,எமதர்மரானுக்கே கையூட்டு கொடுக்க முயற்சி செய்வார்கள் .தோல்வி அடைந்தால் அவர்கள் எமதர்ம ராஜன் உதவியாளர் சித்ரகுப்தன் மூலம் முயற்சி செய்வார்கள் ,தோல்வி நிச்சயம் ,ஏனனில் அவர்கள் ஜாதகம் அப்படி .நேர்வழியே தெரியாதவர்கள்

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    na ....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement