Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி: சமூக விலக்கல் நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. இதை சகித்துக் கொண்டால், வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால் பிரச்னை ஆரம்பமாகும். வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. இந்த காலத்தில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: சென்னை தி.நகரில் உள்ள எங்கள் கட்சி தலைமையகத்தின் இரண்டு தளங்களை, சுகாதாரத் துறை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளோம். இரண்டு தளங்களும், தலா, 7,000 சதுர அடி கொண்டவை. மின்துாக்கி, தண்ணீர் என அனைத்து வசதிகளும் உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: ஊரடங்கு உத்தரவால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. எனினும், பள்ளிக் கட்டணங்களை கட்டச் சொல்லி, பெற்றோருக்கு தனியார் பள்ளிகள் செய்தி அளித்துள்ளன. மூன்று மாதங்களுக்கு, அந்த கட்டணங்களை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்.

ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர், பவன் கல்யாண் அறிக்கை: தமிழகத்தில் சிக்கியுள்ள ஆந்திர மீனவர்களை மீட்க வேண்டும் என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, மீட்டுள்ளார். அவரின் செயல்கள் பாராட்டுக்குரியவை.

வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலர் கிருபாகரன் அறிக்கை: வங்கிப் பணியாளர்களுக்கு சுமை கூட உள்ளது. பொது போக்குவரத்து இயங்காததால், நீண்ட துாரத்திலிருக்கும் ஊழியர்களால், வங்கிக்கு வர முடியவில்லை. எனவே, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வங்கிக் கிளைகளில் பணியாற்ற, வங்கி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

'ஹாயா காலை நீட்டிட்டு, 'ஸ்கைப்'புல பேசிக்கிட்டு, அறிக்கை விடுறதைக் கெடுக்குறா மாதிரியான எந்த ஐடியாவைக் கொடுத்தாலும், நாங்க கொதிச்சிருவோம்... அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்காதுன்னு தெரிஞ்சு தானே அறிக்கை விட்டோம்... இது புரியாம இப்படி நடந்துக்கிட்டா இப்படி தான் செய்வோம்...' என, சம்பந்தப்பட்டவரின், 'மைண்ட் வாய்ஸ்' போல பேசத் தோன்றும் வகையில், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., ராமலிங்கம் அறிக்கை: மக்களை பாதுகாப்பது தான் முக்கியம்; கட்சி முக்கியமல்ல என்ற கருத்தின் அடிப்படையில் தான், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது என்றேன். அதற்காக என்னை பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். அதற்காக என் மக்கள் பணி முடிந்து விடாது.
'ஓய்வு நேரத்தை, பயனுள்ள வகையில் செலவழித்து வருகிறீர்கள்; பாராட்டுகள்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி: ஏற்கனவே பல முறை படித்த, அம்பேத்கர் தொகுத்த, 'புத்தரும் அவரது தம்மமும்' என்ற நுாலை மீண்டும் படித்து வருகிறேன். தலித் மக்களின் தாய் இயக்கமான, அம்பேத்கர் துவக்கிய, இந்திய குடியரசு கட்சியின் வரலாற்றை தமிழில் தொகுத்து வருகிறேன்.

'ஊரடங்கை ஒட்டி, வீட்டுக்குள் முடங்கி இருப்பதற்கு, கவிதையாக பதில் சொல்கிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் விஜய் சேதுபதி பேட்டி: நாற்காலியில் அமர வைத்து, கட்டிப் போட்டாலும், மனசு எங்கோ பறந்து கொண்டு தான் இருக்கும். அப்படி ஒரு பயணத்தில் தான் நான் தற்போது இருக்கிறேன். ஆனால் இப்போது, மனசுக்குள் ஒரு வீடு, வீடு முழுக்க உறவுகள் உள்ளனர். அதனுள் தான் நான் இருக்கிறேன்.

'வெறுப்பு அரசியலில் பொதுமக்கள் ஈடுபடுவதில்லை; அரசியல் கட்சித் தலைவர்கள் தான் அவ்வாறு உள்ளனர்...' என, கூற வைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: கொடுமையான இந்த நேரத்தில், கொரோனா பரப்பியது யார் என, வெறுப்பு அரசியலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது, அதிர்ச்சி அளிக்கிறது. யாராக இருந்தாலும், இத்தகைய வெறுப்பு அரசியல் செய்யக் கூடாது.

'இலங்கை தமிழர் நலனுக்கு எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும் என்பதையும், சொல்லி விட்டால் தேவலை...' என, மடக்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: இலங்கையில், 2000த்தில், எட்டு தமிழர்களை கொடூரமாக கொலை செய்த ராணுவ வீரர், சுனில் ரத்னநாயகே, அந்நாட்டு அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழர் நலனுக்கு உத்தரவாத நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும்.

'இந்த விவகாரத்தில், பிறரின் அறிவுரை எல்லாம் தேவையா... விபரீதத்தை உணர்ந்து கொள்ள வேண்டாமா... மற்ற நாட்டு மக்கள் உயிரையே பறிக்கிறதே இந்த நோய்... இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டாமா...' என, கேட்கத் துாண்டும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை:டில்லியில் நடந்த, முஸ்லிம்கள் மத மாநாட்டில் பங்கேற்றோர், தாங்களாக முன்வந்து, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும் செயலாக அமையும். நோய் இருந்தாலும், இல்லை என்றாலும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement