Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'வணிகர்களில் சிலர் அவ்வாறு செய்கின்றனர் என கேள்வி. அத்தகையோர் மீது வணிகர் சங்கங்களே நடவடிக்கையில் இறங்கியுள்ளன...' என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகப்படுத்தி, வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இதை விட பெரிய சமூக விரோத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இதை உங்கள் மனசாட்சியே மன்னிக்காது.

'மதுவால் மனநலம் பாதிக்கப்படும் என்பது பொய். நீங்கள் சொல்வது தான் சரி. கொஞ்ச பேர் வேண்டுமானால், பாதிக்கப்பட்டிருக்கலாம். பெரும்பாலானோர், பெரிய அளவில் அது பற்றி யோசிப்பதில்லை தான்...' என, கூற வைக்கும் வகையில், மனநல மருத்துவர் ருத்ரன் பேட்டி: இப்போதைய சூழ்நிலையில், பொதுநல மருத்துவம் தான் அனைவருக்கும் தேவை; மனநல மருத்துவம் அல்ல. கொரோனா நோய் தாக்கம் குறைந்த பின், தேவைப்பட்டால், 2 - 3 சதவீதம் பேருக்கு மனநல சிகிச்சை தேவைப்படும்.

'மாநில அரசு வழங்கிய நிவாரணத்தால், இப்போது தான் குழப்பம் சற்று ஓய்ந்துள்ளது. அதனால், கொஞ்சம் பொறுங்கள்; ஊரடங்கு ஓயட்டும்...' என, மடக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள், பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், பிரதமர் அறிவித்த, 5 கிலோ அரிசி மற்றும் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, அவற்றை உடனே வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

'அருமையான யோசனை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தெரிந்தால், அமல்படுத்துவாரே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி அறிக்கை: பிற மாநிலங்களில், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஏழைகள் மற்றும் தெருவோரங்களில் வசிப்போருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் வழங்க வேண்டும். இதனால், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; ஏழைகளுக்கும் பால் கிடைக்கும்.

'ஊரடங்கு ஓய்ந்து, மாமூல் நிலைமை ஏற்பட்டதும், விற்றுத் தீர்ந்து விடும் என நம்புவோம்...' என, ஆறுதல் கூறும் வகையில், கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு பேட்டி: கரூரில், ஊரடங்கால், 1,000 கோடி ரூபாய் ஜவுளி பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை எப்போது விற்பது என தெரியவில்லை. தினமும், ௫ - 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

'அந்தந்த மாநில நிர்வாகங்கள், பிற மாநில தொழிலாளர் தங்க ஏற்பாடு செய்துள்ளன. அதை அறியாமல் இப்படி நடந்து வந்து பலியானால், அதற்கும் மத்திய அரசு தான் பொறுப்பா; நல்லா இருக்குதுங்க உங்க நியாயம்...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: ஊடரங்கு திடீரென உத்தரவிடப்பட்டதால் தான், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து, நாமக்கல் நோக்கி நடந்து வந்த, 23 வயது லோகேஷ் இறந்துள்ளார். இதற்கு, பிரதமர் மோடி அரசு தான் காரணம்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • chinnathambi - chennai,இந்தியா

    திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகப்படுத்தி, வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இதை திரு வீரமணி கூறுவது, மொஹம்மது பின் துக்லக் படத்தில் கடைசியில் வரும் காட்சியை போல " பாவம் பதூதா அவரை யாரும் அடிக்காதீர்கள் " என்று துக்ளக் சொல்வது போல இருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement