Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'மருத்துவர்கள், துாய்மை காவலர்கள், போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் என, பல தரப்பினரும் பாராட்டுதலுக்குரியவரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி: அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு, அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களைப் போல, துாய்மை காவலர்களும், தங்கள் உயிரை துச்சமென மதித்து, மாநிலம் முழுவதும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.

'இப்போது வரை, நோய் பரவல் பெரிய அளவில் இல்லை என, ஆறுதல் அடைவோம்...' என, அறிவுறுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: 'கொரோனா நோய் தொற்று, இன்னும், இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது; மூன்றாம் கட்டத்தை எட்டவில்லை' என, சுகாதாரத்துறை செயலர் கூறுகிறார். நோய் பரவல் எந்த அளவுக்கு உள்ளது என்பதை, அதிக விரைவு சோதனையை அதிக எண்ணிக்கையில் நடத்துவதன் மூலம் தான் கண்டறிய முடியும்.

'இப்படி எல்லாம், பீதியை கிளப்புறாங்களா...' என, மலைக்கத் தோன்றும் வகையில், தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை. அதனால், கர்ப்பிணிகள் தைரியமாக, அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

'அருமை; பாராட்டுக்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: கொரோனா ஒழிப்பில், உலக அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன என்பதை, உலக சுகாதார அமைப்பு, அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள நோய் தடுப்பு மையம், உலக வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி, சிறப்பாக பின்பற்றி வருகிறோம்

.'நீங்கள் சொல்வது, நுாற்றுக்கு நுாறு சரி தான்...' என, கூறத் தோன்றும் வகையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பேட்டி: ஊரடங்கு உத்தரவை மீறுவோரை, போலீசார் அடிக்கின்றனர் என, பலர் குறைபடுகின்றனர். அடித்தாலும் திருந்தாத பலர் உள்ளனர். போலீசாராவது நம்ம ஊர் ஆள் தெரிந்து நடந்து கொள்வர். ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால், நிலைமை எப்படி இருக்கும் என யோசித்து, வீடுகளுக்குள் முடங்கி இருங்கள்.

'ஹாலிவுட் படங்களில், வைரஸ் பற்றி, வழக்கமாக காண்பிக்கப்படும் அளவுக்கு, கொரோனா ரொம்ப கொடூரன் இல்லை போலிருக்கிறதே...' என, ஆறுதல் அடையும் வகையில், டாக்டர் சுதா சேஷய்யன் பேட்டி:கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அனைவருக்கும் நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. ௮௦ சதவீதம் பேருக்கு, சாதாரண தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் நின்று விடுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement