Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது தான்...' என, கூற வைக்கும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., நவாஸ் கனி அறிக்கை: கீழக்கரையை சேர்ந்த ஒருவர் இறந்த பிறகு தான், அவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இயல்பான மரணம் என நினைத்து, அவரின் இறுதிச் சடங்கில் பலர் பங்கேற்றனர். அவர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தவறை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை செய்ததால், பலர் அவதிப்படுகின்றனர்.

'எல்லா தரப்பினருக்கும், அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. நீங்கள் ஒவ்வொருவராக குறிப்பிடத் தேவையில்லையே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவன் அறிக்கை: மாநிலத்தில், 65 ஆயிரம் துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு, மூன்று மாத ஊதியத்தை ஊக்கப் பணமாக வழங்க வேண்டும்.

'இதுபோல, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது தான், அனைவரின் விருப்பமாக உள்ளது...' என, சொல்ல வைக்கும் வகையில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் பேட்டி: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்று இல்லை. அதற்கு காரணம், அரசின் உத்தரவை மதித்து, சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்தது தான். அதுபோல, தொடர்ந்து பின்பற்றி, கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பராமரிப்போம்.

'சரி, விளக்கு ஏற்ற மாட்டோம் என அறிவித்த, கம்யூனிஸ்டுகள், கொரோனா வைரஸ் அனைத்தையும் அதட்டி, உருட்டி ஒரு இடத்துல உட்கார வைச்சு, எல்லா மக்களையும் காப்பாத்திட்டாங்களா...' என, மடக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., பேராசிரியர், அருணன் அறிக்கை: நாடு முழுதும் விளக்குகளை அணைத்து, அகல் விளக்கு ஏற்றிய, பா.ஜ.,வினர், அதன் மூலம் என்ன நன்மை கண்டனர்; கொரோனாவை விரட்டி விட்டனரா என்பதை தெரிவிக்க வேண்டும்.

'இந்த நேரத்திலும், நிதியை நிறுத்தக் கூடாது என்றால், உங்கள் அப்பா, ப.சி., சொன்னது போல, 'நோட்டு தான் அச்சடிக்க வேண்டும்' என, சொல்லத் துாண்டும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை:கொரோனா தடுப்புக்கு நிதி திரட்ட வேண்டும் என்பதற்காக, எம்.பி.,க்களின் தொகுதி நிதியை ரத்து செய்வது சரியல்ல. இதுபோன்ற செயல்கள், அதிபர் ஆட்சி முறையை நோக்கி செல்வது போல உள்ளது. மத்திய அரசு வீண் செலவுகளை நிறுத்தினாலே, நிறைய மிச்சமாகும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement