கலாசார மாற்றம் அது என்ன...?
உலக நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழகம் இனி எப்படி, என்ற கேள்வி இன்று அதிகம்.ஏப்ரல் முழுதும், 'கோவிட் - 19' தொற்று பீதி, மற்ற எல்லாவற்றையும் மிஞ்சி நின்றது.
இனி மே, 15ம் தேதிக்கு பின்பாவது, நிலை திருந்துமா என்பது அடுத்த கேள்வி.பிரதமர் மோடி, ஊரடங்கால் நாட்டைக் கட்டிப்போட்டதுடன், இப்போது கடைசியாக மாநில முதல்வர்களுடன் பேசியபோது, 'லாக் டவுன் நீக்கம்' மாநில முதல்வர்கள் கையில் உள்ளது எனக் கூறியுள்ளார்.அதைவிட தெலுங்கானா முதல்வர், நம் முதல்வர் உட்பட, பலரும் மே, 3ம் தேதியில் இருந்து விரைவாக, லாக் டவுன் முடிச்சை கட்டவிழ்க்க முன்வரவில்லை.
முக்கியமாக, ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து இப்போது இல்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல, லாரிகள் ஓடலாம். ஆனாலும், சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்ல பணிகள் துவங்கி விட்டன.இவை ஓரளவு சீரானாலும், 'கொரோனா' அதிகம் பாதிப்பு கொண்ட, 'சிவப்பு மண்டலங்களை' தாண்டி பயணிப்பது சுலபம் அல்ல. இன்றைய அளவில் அரிசி, கோதுமை ஆகியவை ரேஷனில் சப்ளை ஆவதால், பற்றாக்குறை அதிகம் காணோம்.
தமிழகத்தில், கொரோனா பாதித்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட, 15 மாவட்டங்களில், புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.சென்னை நகரம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அதிக சிவப்பு பகுதிகளை கொண்டிருக்கிறது. மேலும், 'டெஸ்ட் கிட்' கருவிகள், முழுதும் வரும் போது, நோய் தொற்று வீரியம் குறையலாம். அதனால், அரசை விமர்சிப்பது சரியல்ல.டாக்டர்கள், நர்சுகள், மக்களை காக்கும் போலீசாரும் இத்தொற்றில் சிக்கியுள்ளனர்.
இனி எதிர்காலத்தில், 'முக கவசம்' அணிந்த, புதிதான கலாசார பூமியாக நாம் மாறுவோம். 'கைகளை' அடிக்கடி கழுவும் பழக்கம் தொற்றிக் கொள்ளும்.பணியிடங்களில், 'இடைவெளி நிற்றல்' என்பது எளிதானது அல்லது. அதற்கேற்ப தொழிலகங்கள் மாற வேண்டும்.
நாடு முழுதும், 1.4 கோடி சிறு தொழில் அமைப்புகள் உள்ளன.இவைகளில் இப்போது, 5 முதல், 10 சதவீதம், 'பசுமை' மண்டலங்களில் இயங்கக் கூடும். அவை உற்பத்தி திறன் முழுதையும் எட்ட, இனி எத்தனை மாதங்கள் ஆகும்? இதில் பணியாற்றிய அனைவரும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வர முடிகிறதா என்பதை, இனி ஆய்வு செய்ய வேண்டும். சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்பது தனி விஷயம்.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில், 6,000 மெகா வாட் மின்சாரம் மிச்சம் எனினும், சிறிய, வசதியற்ற குடும்பங்களில், இந்த நேரத்தில் நிச்சயம் மின் தேவை அதிகரித்து இருக்கும், 'டிவி'க்களில் பழைய திரைப்படம், சீரியல்களை பார்த்து அலுப்பு தட்டியிருக்கும்.இதைவிட பள்ளி, கல்லுாரிகளில் வழக்கப்படி மாணவ - மாணவியர் கூட்டம் செல்லும் காலம்; எதிர்பார்க்க வேண்டிய நன்னாள்.அதற்குள், கொரோனா நோய்த் தொற்று வரும் செப்டம்பர் வரை தொடரலாம் என்ற அச்சத்தையும், உலக அரங்கில் பரப்புகின்றனர்.
தமிழகம் உட்பட தென் மாநிலங்கள், 'இனி விழித்தெழும்' காலத்தில், கலாசார மாற்றத்தை எப்படி கொண்டு வரப் போகிறது என்பது புதிராகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!