Advertisement

சாப்பாடு போட அதிகாரிங்க டார்ச்சர்: கூப்பாடு போடுறாங்க வியாபாரிங்க!

Share

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சித்ராவும், மித்ராவும் முக கவசம் அணிந்து கொண்டு, ஹோப் காலேஜில் இருந்து, காமராஜ் ரோட்டில் ஸ்கூட்டரில் நகர் வலம் புறப்பட்டனர்.''என்னக்கா, 'கொரோனா' வைரஸ் பரவல் இருக்கா, இல்லையா, உண்மையை மூடி மறைக்கிற மாதிரி தெரியுதே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமா மித்து, நிர்ப்பந்தத்தால, மாவட்ட நிர்வாகமும், மருத்துவ துறையும் அமைதியாகிடுச்சு. 'கொரோனா' இல்லாத ஊருன்னு, அறிவிப்பு வெளியிட்டு இருக்கு.ஒரு நாளைக்கு வழக்கமா, 1,000 பேருக்கு 'டெஸ்ட்' எடுக்கணும்னு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்துச்சு. நோய் பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தினமும், 250 பேருக்காவது 'டெஸ்ட்' எடுக்கணும்னு சொல்லியிருக்கு.

''ஆனா, பரிசோதனை செய்றதையே குறைச்சிட்டாங்க. பரிசோதனை செஞ்சாத்தானே, 'பாசிட்டிவ்', 'நெகட்டிவ்'ன்னு, 'ரிசல்ட்' தெரியும். யாருக்குமே பரிசோதனை செய்யலைன்னா, 'கொரோனா' இல்லைன்னு சொல்லிடலாமே.''அச்சச்சோ, அப்புறம் சமூக பரவலாகிடாதா,'' எனக்கூறி, பதறினாள் சித்ரா.
''அதுக்குதான், இந்திய மருத்துவ ஆராயச்சி கழக 'டீம்', சென்னையில இருந்து வந்திருக்கு. ரெண்டு நாள் முகாம் போட்டு, 10 இடங்கள்ல, 400 பேர்கிட்ட ரத்த பரிசோதனை எடுத்திருக்கு. ஆய்வக முடிவுல, சமூக பரவல் இருக்கா, இல்லையான்னு வெளிச்சத்துக்கு வருமாம்,''''ஓ... அப்படியா, சங்கதி, அதனாலதான், பஸ் ஓட்டுறதுக்கு 'கிரீன் சிக்னல்' கொடுக்கலையா,''

''மித்து, பஸ் இயக்குறதுக்கு அரசு போக்குவரத்து கழகம் தயாரா இருந்துச்சு. எந்தெந்த வழித்தடத்துல, எத்தனை பஸ் இயங்கப் போகுது, எவ்வளவு பயணிகளை ஏத்தணும்னு பட்டியல் போட்டு, 'வாட்ஸ்அப்'புல பரப்பி விட்டாங்க. எக்குத்தப்பா பயணிகள் ஏறுனா, நோய் பரவிடக்கூடாதுன்னு பயந்து, 31ம் தேதி வரைக்கும் பஸ் இயக்கம் இருக்காதுன்னு அறிவிச்சிட்டாங்க,


''இருவரும் பேசிக் கொண்டே திருச்சி ரோட்டில் சென்றபோது, ஆளுங்கட்சி கொடி கட்டிய கார், ஸ்கூட்டரை வேகமாக கடந்து சென்றது.''க.க.சாவடி ஸ்டேஷன்ல நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், வி.ஐ.பி., கோபத்தின் உச்சிக்கு போயிட்டராமே,''

''ஆமாக்கா, ஸ்டேஷன்ல நடந்த சம்பவத்தை முழுசா விசாரிக்காம, எஸ்.ஐ., முத்துக்குமாரை, ஆழியாறுக்கும், ஏட்டு முத்துசாமியை காடம்பாடிக்கும் 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க. இது, ஸ்டேஷன்ல புகைச்சலா ஓடிட்டு இருந்துச்சு.''ஆளுங்கட்சி வி.ஐ.பி., விசாரிச்சதுக்கு பிறகே, உண்மை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. அதுக்கப்புறம், எஸ்.எஸ்.ஐ., சரவணனை சேக்கல்முடிக்கு மாத்திட்டாங்க. இப்பதான், ஸ்டேஷன்ல வேலைபார்க்குற போலீஸ்காரங்க நிம்மதியா இருக்காங்களாம்,''

''அதிருக்கட்டும், மதுக்கடைகளை மறுபடியும் திறந்ததுனால, போலீஸ்காரங்க காட்டுல கரன்சி மழை பொழிய ஆரம்பிச்சிடுச்சாமே,''
''அதுவா, மதுவிலக்கு போலீஸ் தரப்புல இருந்து, ஒவ்வொரு கடையில இருந்தும், 4,000 ரூபாய் வசூலிக்கிறாங்களாம். 'பார்' நடத்துறவங்க, ஸ்டேஷனுக்கு, மாசம் ரூ.20 ஆயிரம் மாமூல் கொடுக்கறது வழக்கமாம். இப்ப, 'பார்' நடத்த தடை இருக்கறதுனால, கடைக்காரங்களே, கொடுக்கணும்னு, துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் ஏரியாவுல இருக்குற போலீஸ்காரங்க நெருக்கடி கொடுக்குறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

நிர்மலா கல்லுாரி வழியாக, ரேஸ்கோர்ஸ் சென்ற சித்ரா, எதிரே வந்த வனத்துறை அதிகாரி ஜீப்பை பார்த்ததும், ''மித்து, வனப்பகுதியில மணல் கடத்துற விஷயத்தை கேள்விப்பட்டு, மாவட்ட வன அதிகாரி நேர்ல போயிருக்காரு. மண் வளத்தை சுரண்டி அள்ளிக்கிட்டு இருந்ததை பார்த்து, கையும் களவுமா, 10 வண்டிகளை பிடிச்சு, வருவாய்த்துறையில ஒப்படைச்சிருக்காரு.

''மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததும், எந்த வழக்கும் போடாம, வண்டிகளை வருவாய்த்துறையினர் விடுவிச்சிட்டாங்களாம். இதை கேள்விப்பட்ட வனத்துறையினர், ரொம்பவே 'அப்செட்' ஆகிட்டாங்க. நிஜமாகவே ஆளுங்கட்சி தலையீடு இருக்கா; ஆளுங்கட்சிக்காரங்க பெயரை சொல்லி, வேறு யாராவது ஆட்டம் போடுறாங்களான்னு தெரியலையேன்னு வனத்துறையினர் புலம்புறாங்க,''ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் வழியாக, தெற்கு தாலுகா ஆபீசை கடந்தபோது, '

'அக்கா, வடமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செஞ்சு, சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்புற வேலையில மாவட்ட நிர்வாகம் இருக்கு.ஆனா, வட மாநில தொழிலாளர்களுக்கு, சாப்பாடு செஞ்சு போடணும்னு சொல்லி, இலவசமா மளிகை பொருள் தரச்சொல்லி, 'சவுத்' தாலுகா ஆபீசுல இருந்து, வியாபாரிகளை தினமும், 'டார்ச்சர்' பண்றாங்களாம். ஒன்றரை மாசமா பொருள் கொடுக்குறோம்; இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கேட்பாங்கன்னு மளிகை கடைக்காரங்க கண்ணீர் வடிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''மித்து, இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். சிமென்ட் ஆலை செயல்படுற தாலுகாவுக்கு, அரசு தரப்புல, 15 டன் அரிசி ஒதுக்குனாங்களாம். ஒரு டன் கூட எடுத்து, 'யூஸ்' பண்ணலையாம். என்.ஜி.ஓ.,க்கள் மூலமா, சாப்பாடு செஞ்சு போட்டுட்டு, அரிசியை பத்திரமா, 'பாதுகாத்து' வச்சிருக்காங்களாம். 'கொரோனா' பிரச்னை முடிஞ்சதுக்கப்புறம், அரிசி கடத்தல் கமுக்கமா நடக்கும்னு சொல்றாங்க,'' என்றபடி, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரே உள்ள பேக்கரி முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.காகித டம்ளரில் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டு, இருவரும் ஓரமாக ஒதுங்கினர்.

தனது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியை படித்த மித்ரா, ''அக்கா, கிருமி நாசினி தெளிப்பதால், 'கொரோனா' வைரசை ஒழிக்க முடியாதுன்னு, உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்காம்,'' என, கிளறினாள்.

''அப்படியா, நம்மூர்ல தெருவுக்கு தெரு லிட்டர் கணக்குல கிருமி நாசினி தெளிச்சாங்களே. இதுக்காக, மூணு கோடி ரூபாய் செலவு செஞ்சு தினுசு, தினுசா இயந்திரங்களும் வாங்குனாங்களே,''''ஆமாக்கா, அதையெல்லாம் இன்னும் ஆறு மாசம் கழிச்சு, காயலான் கடைக்குதான் போடணுமாம். கார்ப்பரேஷன் அதிகாரி சொல்லி, வருத்தப்பட்டாரு,''''அதெல்லாம் சரி, டோக்கன் கொடுக்கறதுக்கும் பணம் வாங்குனாங்களாமே,'' என்றபடி, டீயை குடித்து முடித்து விட்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

''அதுவா, வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் போறதுக்கு டோக்கன் கொடுக்குறாங்க. செங்கப்ப கோனார் மண்டபத்துல தங்க வச்சிருக்கிற தொழிலாளர்கள்கிட்ட, பணம் வாங்கிட்டுதான் டோக்கன் கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.ரயில்வே ஸ்டேஷன் கடந்து, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement