Advertisement

கொஞ்சம் இரக்கம் காட்டலாமே!

Share

கொஞ்சம் இரக்கம் காட்டலாமே!என்.செல்வமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொல்லாத, 'கொரோனா' வைரசால், இன்று, உலகமே விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், சிலர் மனசாட்சியின்றி நடந்து கொள்வது, வேதனை அளிக்கிறது.சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில், வாழ்வாதரம் தேடி, லட்சக்கணக்கானோர், தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.தற்போதைய ஊரடங்கால், மூன்று மாதங்களாக, வேலையின்றி, வருமானமின்றி, அவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களால், வீட்டு வாடகை கொடுக்க முடியாது என்பது, அனைவருக்கும் தெரியும்.அந்த சாமானிய மக்கள், அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்ய போராடும் நிலையில், வீட்டு வாடகை தர நிர்பந்திப்பது, ஈவு இரக்கமற்ற செயல்.'வாடகை வீட்டிற்கு கொடுத்த முன் பணம், கொரோனா காலத்தில் கழிந்தது' எனக் கூறி, உடனடியாக வீட்டை காலி செய்து தரும்படி கேட்பது, வருத்தமாக உள்ளது.மதுரையில், எனக்கு தெரிந்த, ஒரு வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும், அரசு பள்ளியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள்; அவர்களின் பிள்ளைகள், கல்லுாரி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் வீட்டில், வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்தை, இந்த நேரத்தில் வெளியேற நிர்பந்திக்கின்றனர். அந்த குடும்பம், எவ்வளவு மன வேதனையை அனுபவிக்கும்!
அவர்கள் தரும் வாடகையை வைத்து தான், வீட்டின் உரிமையாளர் வாழ்க்கை நடத்தப் போவதில்லை; கொஞ்சம், இரக்கம் காட்டலாமே!

பணம் தான் முக்கியமா?சுப்ரமணியம் விஸ்வநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், ஏழைக் குழந்தைகளுக்காக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகாமையிலேயே, 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட, தனியார் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகள், அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வருகின்றன. 'கார்ப்பரேட்' நிறுவனம் போன்று செயல்படும், பெரிய பள்ளிகள், பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து உள்ள பள்ளிகள், இந்த பட்டியலில் வராது.சிறிய அளவிலான, ஏழை மக்களுக்காக நடக்கும், தனியார் பள்ளிகளில், தலா, 100க்கும் குறைவாகவே, குழந்தைகள் படிக்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள கட்டணம், ஒரு குழந்தைக்கு, ஆண்டிற்கு, 7,000 ரூபாய். பெரும்பாலான பெற்றோர், கூலி வேலை செய்வதால், பள்ளிக் கட்டணத்தை, தவணையில் தான் கட்டுவர்.இந்த தொகையில், பள்ளி நிர்வாகம், ஆசிரியை மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்; மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.தனியார் பள்ளிகள், தரமான கல்வி மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அரசு செய்ய வேண்டிய வேலையை, இந்த தனியார் பள்ளிகள், குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றன. இதற்கு கைமாறாக, அரசு ஊக்கமளிக்காவிட்டாலும் பரவாயில்லை; தொல்லை தராமல் இருந்தால் போதும். அரசு அதிகாரிகளின் தொல்லை காரணமாக, சில பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.ஆண்டுதோறும், தனியார் பள்ளி நிர்வாகத்திடம், அனுமதி, கட்டட உறுதிச் சான்று என, ஒரு பட்டியலே நீட்டப்பட்டு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல், அரசு அதிகாரிகள், லஞ்சம் பெறுகின்றனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும்; இல்லையெனில், 'பள்ளியை மூடி விடுவோம்' என, மிரட்டுகின்றனர்.அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்துவதில்லை; நன்றாக நடக்கும், தனியார் பள்ளிகளையும், நிம்மதியாக செயல்பட விடுவதில்லை. இந்த அதிகாரிகளுக்கு, பணம் மட்டும் தான் முக்கியமா?

ஏன் கூச்சல் போடுகின்றனர்?ப.ல.பரமசிவம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மின்விசிறி சுழல, சுழல் நாற்காலியில் சுகமாக அமர்ந்து, தேடி வரும் மக்களை அலைக்கழித்து, தன் சொந்த கதைகளை, அலுவலகத்தில் பேசி, வேலை பார்க்காமல், நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துவோர், அரசு ஊழியர்கள்.வாங்கும் சம்பளத்திற்கு, வஞ்சகமில்லாமல் உழைத்து, நிறுவனத்தையும் உயர்த்தி, தானும் உயர்பவர், தனியார் துறை ஊழியர்கள்.பல ஆண்டுகளுக்கு முன், பஸ் போக்குவரத்தை, தனியார், டி.வி.எஸ்., நிறுவனத்திடம், அரசு ஒப்படைத்தது. வாலிப வயதில், அதில் பயணம் செய்த அனுபவம், இன்றும் என் மனதில், பசுமையாக உள்ளது!
குறித்த நேரத்தில் புறப்படுவது; நிறுத்தத்தில் முறையாக நிற்பது; பயணியரை அனுசரித்து செல்வது; சரியானக் கட்டணம்; மீதி சில்லரையை முகம் சுழிக்காமல் தருவது என, தனியார் பஸ் போக்குவரத்து, சிறப்பாக இருந்தது.இதனால், தனியார் நிறுவனம் லாபம் அடைந்து, அரசுக்கு சேர வேண்டிய வருமானமும் கிடைத்தது என்பது, நிதர்சனமான உண்மை.இதுபோல், பல துறைகளை, தனியாருடன் ஒப்பிட்டால் தெரியும், எது, மக்களுக்கு பலன் அளிக்கும் என்று! தற்போது, முக்கியமான துறைகளை, தனியார் வசம் ஒப்படைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளதால், 'இந்தியாவை, பிரதமர் மோடி விற்கப் போகிறார்' என, சிலர் கூச்சல் போடுவது தான், ஏன் என்று விளங்கவில்லை.
அரசுத் துறையில், உண்மையாக உழைப்பவர்கள் மிகக் குறைவு; அதனால், அரசுக்கு இழப்பு தான் ஏற்படுகிறது. அதே பணியை, தனியார் துறையினர், லாபத்துடன் நடத்தி, அரசுக்கு வருமானம் தருகின்றனர். மக்களே, கூட்டி கழித்துப் பாருங்கள்... விடை மிகச் சரியாக வரும்.வெட்டியாக உட்கார்ந்து, அதிக சம்பளம் வாங்கும் சில அரசு ஊழியர்களுக்காக, சில சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும்; அந்த சங்கங்கள், மக்கள் நலனுக்காக களமிறங்காது. விழிப்புடன் இருங்கள்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • veeramani - karaikudi,இந்தியா

    திரு பரமசிவம் அவர்களின் ஏற்புடையது. அரசின் தொழிலகங்கள் , ஆலைகள் நிறுவனங்கள் ...முதலில் இடஒதிக்கீடு காலிசெய்ய வேண்டும். எப்படித்தான் வேலை செய்யாமலிருப்பது எப்படி என சொல்லப்படுகிறது. ஆயினும் மத்திய அரசின் ரயில்வே துறையை பாருங்கள். மைய அரசின் கட்டுப்பாடில் இருந்தாலும் ரயில்கள் எப்படி செல்கின்றன. அரசாங்கம் இனிமேலும் விழித்துக்கொள்ளவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement