Advertisement

விழிப்புடன் இருப்போம்; வீழ்த்திடுவோம்!

Share

உலகளாவிய சர்வதேச நோய் பரவலில் இருந்து, உலக சமுதாயம் பாதிப்பு அடைந்த பின், மீண்டு வந்த கதையை, கடந்த கால அரிய நுால்களில் இருந்து, உங்களுக்கு சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பதினேழாம் நுாற்றாண்டு முதல், பத்தொன்பதாம் நுாற்றாண்டு வரை, 200 ஆண்டு காலம் உலகளாவிய கொடும் நோய்களால், நுாறு கோடி மக்கள் இறந்திருப்பர். 1900ம் ஆண்டு முதல், கடந்த, 120 ஆண்டுகளில் உலகளாவிய சர்வதேச பரவல் நோய்களை, நாம் தெரிந்து கொள்வோம். இதை எப்படி உலக மக்கள் கடந்து வந்தார்கள் என்றும் அதன் பின்பு பார்ப்போம்.

நோய்களின் விபரம்:-* கடந்த, 1915 முதல், 1926 வரை, 'என்சிபாலிட்டிஸ்' எனப்படும் மூளை வீக்க நோய் பாதித்து, பதினைந்து லட்சம் மக்கள் இறந்தனர்

* 1918 முதல், 1920 வரை ஸ்பானிஷ் ப்ளு நோயால், ஐந்து கோடி மக்கள் இறந்தனர்
* 1957ல், ஆசிய இன்புளுவென்சா என்ற நோய்க்கு, பத்து லட்சம் பேர் இறந்தனர்
* 1968ல், ஹாங்காங் காய்ச்சலால், 40 லட்சம் பேர் இறந்தனர்
* 1977ல், பறவைக் காய்ச்சல் நோய் துவங்கியது
* 2002ல், 'சார்ஸ்' எனப்படும் கடுமையான சுவாச நோய் தொற்று ஏற்பட்டு, 800 பேர் இறந்தனர்
* 2009ல் பன்றிக் காய்ச்சலால், ஆறு லட்சம் பேர் இறந்தனர்
* 2009 முதல், இன்று வரை, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும், 'மம்ப்ஸ்' வைரசால் மட்டும், 1.42 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்
* 2012 முதல், 'மெர்ஸ்' எனப்படும் மத்திய கிழக்கு சுவாச நோய், கொரோனா தொடர்புடைய வைரஸ் தொற்று பரவியது. இதற்கு, ஒட்டக காய்ச்சல் என்ற பெயரும் இருந்தது
* 2013 - 16 வரை, எபோலா வைரசால், 16 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர்
* 2015 - 16 வரை, ஜிகா வைரசால், 50 பேர் இறந்துள்ளனர்
* 2019ல் சீனாவில் இருந்து உலகம் முழுதும் பரவி, உலக மக்களை பாதித்து வரும், கொரோனா வைரசால், இன்று வரை, 3.5 லட்சம் மக்கள் இறந்து உள்ளனர்.

இவை மட்டும் இன்றி, உலக மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த நோய்கள்:-*1877 - 1977 பெரியம்மை நோய்க்கு, 25 கோடி மக்கள் இறந்துள்ளனர்
* காலரா நோய், 1817 முதல், உலக முழுவதும் சுழற்சி முறையில், இதுவரை, ஏழு முறை தாக்கியுள்ளது. ஒவ்வொரு முறை வரும் போதும், பத்து ஆண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகள் வரை நீடித்து உள்ளது. இதனால் மட்டுமே, ஐம்பதுலட்சம் பேர், உலகம் முழுதும் இறந்து உள்ளனர். கடைசியாக காலரா நோய் தொற்றுக்கு, 2016 - 2019 வரை, ஏமன் நாட்டில், 4,000 பேர் இறந்து உள்ளனர்
* மலேரியா நோயால் மட்டும், 2017 கணக்கின் படி, ஆண்டிற்கு, ஐந்து லட்சம் பேர் இறந்து உள்ளனர்
* 1980 முதல், எய்ட்ஸ் நோய்க்கு மட்டும், 4.5 கோடி பேர் இறந்து உள்ளனர்
* காசநோய்க்கு, உலகளவில், 2018 கணக்கெடுப்பு படி, ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் இறக்கின்றனர். அதில் சராசரியாக, 4,109 பேர் தினமும் இறக்கின்றனர். இதில், இந்தியாவில் மட்டும்,ஆண்டிற்கு, 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்; தினமும், 694 பேர் இறக்கின்றனர்

கடந்த, 2009 -2018 வரை, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும், மம்ப்ஸ் வைரசால் மட்டும், 1.42 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். மனிதனுடைய செயல்பாடு என்ன, இவ்வளவு பெரிய நோய்களை சந்தித்த நம் முன்னோர், அதில் இருந்து தப்பிக்க என்ன செய்தனர் என்று பார்ப்போம்.

பரவுதலை கட்டுப்படுத்துதல்செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வு தான். இத்தகைய செல்வத்தைப் பெற, நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச்சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை, நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது, கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம், சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க, கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது.

பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பர். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை, கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டிற்குள் நுழைவர். ஆனால், அந்தப் பழக்கம் தற்போது மறைந்து போய் விட்டது.நாம் முன்னோர்களையும் மறந்தோம்; அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்கவழக்கங்களையும் அடியோடு மறந்து விட்டோம்.

முகக்கவசம் உங்கள் உயிர் கவசம், வெளியே செல்லும் போது, கட்டாயம் அணிவது அவசியம். சமூக விலகலை கடைப்பிடித்து, முடிந்தவரை சமூக நிகழ்ச்சிகளில் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும். பொது இடங்களில் இருக்கும்போது, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே குறைந்தபட்சம், 1 மீட்டராவது பாதுகாப்பான துாரத்தை பராமரிக்கவும். குறிப்பாக, அவர்களுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நேரடி தும்மலில் வரும் உமிழ் நீர் துளி தொடர்பைத் தவிர்க்க பாருங்கள். மற்றவர்களிடம் கைக்குலுக்குவதை முற்றிலும் தவிர்க்கவும். டேபிள், நாற்காலிகள், கதவு, கைப்பிடிகள் போன்ற மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

இன்று, உலக அரங்கில், சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில், கைக் கழுவும் முறை தான் முதன்மையாக உள்ளது.வெளியில் இருந்து, வீட்டிற்கு வந்த பிறகு அல்லது மற்றவர்களை சந்தித்த பிறகு, குறிப்பாக அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நல்ல சுகாதாரத்தை கடைப் பிடிக்கவும். சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.உலகளாவிய கைக் கழுவுதல் நாள், அக்., 15. அது மட்டும் இன்றி, உலக கை சுகாதார நாளாக மே, 5 இருக்கிறது.

தடுப்பு மருந்து தயாரிப்பது - சிரமமான காரியமாக இருந்தாலும், சரியான வைரஸ் மருந்தை எடுத்து, விலங்குகளில் பரிசோதனை செய்து, முதல் கட்ட பரிசோதனை ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு பாதுகாப்பாக சோதனை செய்யப்படுகிறது.இரண்டாம் கட்ட பரிசோதனையில் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு பரிசோதனையில் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கண்டறியப்படுகிறது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் அதிக மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அறிதல், கடைசியாக மருத்துவ ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுதல், அந்தந்த நாடுகளில் பதிவு பெற்று, உற்பத்தி செய்தல் என்று பல கட்டங்கள் உள்ளது. நீண்ட நாட்கள் ஆக வாய்ப்பு உள்ளது.கைவசம் இருக்கும் மருந்துகளை வைத்து, உயிர் காத்துக் கொள்ளுங்கள்.

தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி, கொரோனாவினால் ஏற்படும் அறிகுறிகளை நன்கு அறிந்து, அதற்கு ஏற்றாற்போல் நாம் கைவசம் இருக்கும் மருந்தை முடிந்தவரை உபயோகித்து உயிர்காத்து கொள்வது மிகவும் நன்மை தரும்.

எதிர்காலம்உலக மனித இனத்தை ஆட்டிப்படைத்த நோய் எய்ட்ஸ் நோய்க்கு, 1980 இருந்து, 1990களில், ஆப்பிரிக்காவில், 20 - 40 வயது வரை இருக்கும் ஆண் மற்றும் பெண்கள் பல லட்சம் பேர் இறந்தனர் .கடந்த, 2004ம் ஆண்டு, இதனால் உலகம் முழுதும் ஆண்டுக்கு, 17 லட்சம் பேர் இறந்தனர். 2010ம் ஆண்டு 12 லட்சமாக இறப்பு குறைந்தது. இது, 2018ம் ஆண்டில், 7.70 லட்சமாக குறைந்தது. இதற்கு தடுப்பு மற்றும் தற்காப்பு முறைகள் நிறைய உள்ளன. ஆனால், குணப்படுத்த மருந்து இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு இரண்டு டஜன் ஆன்டிரெட்ரோ வைரல் மருந்துகள் இருக்கின்றன. இந்த மருந்து, எச்.ஐ.வி., வைரசை நேரடியாகத் தாக்குவதால், அவை வைரசின், தன்னை நகலெடுக்கும் திறனை முடக்குகின்றன.

நோய் இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிப்பது மனிதனின் மூளைக்குள் இருக்கும் சிந்தனையின் அளவை பொறுத்தே அமையும். அந்த நோயின் முக்கியத்துவமும், முக்கியத்துவம் இன்மையும் சிந்தனையின் அளவை பொறுத்தே அமைந்திருப்பதை, கடந்த கால நோய்களின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. ஏன் என்றால் நாம் கடந்து வந்த பாதையை புரட்டி பாக்கும் போது, மலேரியாவால் இறந்த மக்கள் தொகை, 100 கோடியாக இருக்கும்.

சவால் தான்காலராவால் மட்டுமே பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். காசநோய் ஒரு மாற்ற முடியாத நோயாக இருக்கிறது. காலரா தடுப்பு மருந்து இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் எத்தியோப்பியா, ஈராக், வியட்நாம், இந்தியா, ஜிம்பாப்வே, ஹெய்தி மற்றும், 2016க்கு பிறகு ஏமனில் மட்டும் இதுவரை, 4,000 மக்கள் இறந்துள்ளனர். அதே போல் மம்ப்ஸ், தட்டம்மை, ரூபெல்லா போன்ற நோய்களுக்கு தடுப்பு ஊசி இருந்தாலும் நோய் பரவுதலை தடுப்பது இன்னமும் சவாலாகவே இருக்கிறது. தட்டம்மை அதே போல காங்கோ, வியட்நாம், நியூஸிலாந்து, பிலிபைன்ஸ், மலேசிய போன்ற நாடுகளில் இன்றும் இருப்பதை காண்கிறோம்.

இப்போதிலிருந்து, 9,000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட காசநோய் இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நுரையீரலை மட்டுமே தாக்கும் இந்த நோய், காற்றின் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. ஆறு முதல் ஒன்பது மாதம் வரை மருந்துகள் ஒரு நாள் தவறாமல் உட்கொண்டால் குணப்படுத்த முடியும். காசநோயுடனும் சேர்ந்து வாழ பழகி விட்டோம். மேற்கண்ட அனைத்து நோய்களையும் கடந்து வந்தோம் நாம். ஆனால், மனித மூளை இந்த நோய்களை பற்றி சிந்திக்க, அதிக இடம் நமக்கு கொடுக்கவில்லை.

ஆனால், கொரோனாவில் இழந்தவர்களை விட, நாம் இழந்த மக்கள் தொகை பல மடங்கு அதிகம். எனவே, மனித மூளை எதை முக்கியத்துவம் படுத்துகிறது என்பதை பொறுத்தே, அந்த நோய்கள் குறித்த அவர்களிடம் அச்சம் அமைந்திருந்ததை, கடந்த கால வரலாறு நமக்கு காட்டுகிறது. வாழ்க்கையும் நோயும் ஒன்று தான், இந்த இரண்டையும் வேறு வேறாக பிரிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது, ஒரு கனவு இலக்கு. ஆனால், வாழ்க்கை நோயுடன் கலந்து இருப்பது தான் நிதர்சனமான உண்மை. வெயிலும் நிழலும் போல, இரவும் பகலும் போல, நோயும் வாழ்வும் இன்றைய சூழலில் பிரிக்க முடியாதது. மேலே குறிப்பிட்டது போல, நாம் எல்லா நோய்களுடனும் வாழ்ந்து, கடந்தே வந்துள்ளோம். இனி, எதிர்காலத்திலும் நாம் கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும்.

சமீபத்திய சர்வதேச மருத்துவ ஆய்வக ஆய்வுகளை பின்பற்றினால் மட்டுமே, விடை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று நம்புவோம்.கடந்த, 1918ம் ஆண்டில், ஆபத்தான ஸ்பானிஷ் காய்ச்சல் குறித்து, மக்களை எச்சரிக்கவோ அல்லது முன்னெச்சரிக்கவோ எந்த தொழில்நுட்பமும் இல்லை, அரசாங்கத்திற்கு, மூன்று வழிகள் இருந்தன.

கைகுலுக்கல் கிடையாதுஅவை, தினசரி செய்தித்தாள்கள், செய்தியை வழங்க ஒரு துாதர், விழிப்புணர்வை ஏற்படுத்தும், துண்டு பிரசுரம், விளம்பரம், சுவரொட்டி பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்தில், கைக்குலுக்குதல் இல்லை; அரவணைப்புகள் இல்லை. கடந்த, 1920 ஆரம்பத்தில், வானொலி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1945ம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சல் தடுப்பூசியின் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு, ராணுவ வீரர்களுக்கும், பின், அமெரிக்க மக்களுக்கும் வழங்கப்பட்டது. மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிலையங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு இல்லாததால், அமெரிக்கா முழுதும், தடுப்பூசி அடைய ஓராண்டு ஆனது. அந்த நேரத்தில் காய்ச்சல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இது ஒரு வைரசால் அல்ல; பாக்டீரியாவால் ஏற்பட்டது என்று பலர் நம்பினர்.

விஞ்ஞான வளர்ச்சியின், புதிய நவீன சகாப்தத்தில், ஒரே தொடர்பில் தொடர்பு கொண்ட மக்கள், விரல் நுனியில் எல்லா விஷயங்களையும் அறியும் திறன் கொண்ட மக்கள் இன்று சுய சிந்தனை திறனை இழந்தனர். மேலும், இந்த தொற்று நோயிலிருந்து அவர்களைக் காப்பாற்ற, அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கொரோனா, நம் ஸ்மார்ட்போனை விட மனிதர்களை துார விலக்கி இருக்க செய்திருக்கிறது.

கடந்த வரலாற்றை நாம் பார்க்கும் போது, நம் முன்னோர்கள் மிக கச்சிதமாக விட்டு சென்றவை:* உடம்பை வலுப்படுவதன் மூலமாக கைவசம் இருக்கும் மருந்துகளை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி எடுப்போம். இன்று கொரோனா நுாற்றுக்கு நுாறு விதமாக எல்லோரையும் கொல்லவில்லை மிக சிறிய அளவே மக்கள் இறக்கின்றனர்

* தடுப்பு மருந்து வந்தால் இந்த நோயை வீழ்ச்சியடைய செய்யலாம்
* தனிமைப்படுத்தல், கைக்கழுவுதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தால் நோய் பரவாமல் தடுக்க சிறந்த வழியாக இருக்கும்.

கடந்த, 1918ல் நடந்த ஆய்வுகளில், வைரஸ் பரவுதல் கட்டுக்குள் கொண்டு வர பின்பற்றப்பட்ட ஒரே ஒரு வழி, சமூக விலகல் மட்டுமே. ஒரு நுாற்றாண்டுக்கு பின் கூட, இதுவே உண்மையாக உள்ளது. நமக்கு கிடைத்த இந்த வரலாற்று தகவல்கள் பின்பற்றத்தக்க மிக சிறந்த நன்னெறி வழி, இப்போது விலை மதிப்பற்ற புதையலாக உள்ளது.நாம் மருந்துக்கு காத்திருந்தால், நம் பொருளாதாரம் மரணமடைந்து விடும். பொருளாதாரம் மரணமடைந்தால், நாம் பட்டினியால் மரணமடைந்து விடுவோம். எனவே தான், நாம் காத்திருக்க வேண்டிய நேரம் இல்லை. இப்போது வாழ்க்கையை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்று கடைகளை திறக்க துவங்கியுள்ளனர்.

இந்த நோய் இன்னமும் எத்தனை காலம் தொடரும் என்று சிந்தித்தால், சமுதாயம் இது முடிந்துவிட்டது என்று நம்பும் வரை, அது தொடரத் தான் செய்யும். அதன் பின்பும் நோயின் அதிர்வலைகளும், பொருளாதார வீழ்ச்சியும் இருக்கத் தான் செய்யும்.முடிந்தாலும் இதனுடைய பாதிப்புகள் தொடரத் தான் செய்யும். புத்திசாலித்தனமாக வாழ்க்கையை தொடர்ந்து முன்னெடுக்கும் போது, நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.

டாக்டர் அ.பிரபுராஜ்
டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக்

சென்னை - 600014

மொபைல்: 98843 53288
இ - மெயில்: prabhuraj.arthanaree@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    68 நாளா அரசு புண்ணியத்துல விழிச்சுக்கிட்டு இருக்கோம். கொரோனாவை என்ன பண்றதுன்னு தெரியாம திரு திருன்னு முழிச்சுக்கிட்டிருக்கோம். ஒண்ணு புரிஞ்சிடுச்சு. ரவுண்டு கட்டி அடிச்சா கொரோனா போகாது. எப்போ போகணும்னு அதுக்கு தெரியும். அரசு இத்தனை நாள் போட்ட ஊரடங்கால் மொத்தத்தில் இழப்புதான் அதிகமாயிட்டிருக்கு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement