கொரோனா பரவல் தடுப்பு: மாறுமா மக்கள் மனநிலை?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிய மாநிலங்களில், மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தற்போது, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், இறப்பு எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா, டில்லிக்கு அடுத்ததாக, மூன்றாவதாக வந்துள்ளது.
மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 0.27 சதவீதத்தினர், அதாவது, ஆயிரத்தில் மூன்று பேருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக, மார்ச், 7 தான், கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின் 118 நாட்களில், அதாவது, ஜூலை 3ல், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.02 லட்சமாக இருந்தது. அதற்கு அடுத்த 22வது நாளான, ஜூலை 25ல், மேலும் 1.04 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2.06 லட்சமாக உயர்ந்துள்ளது. மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், நோய் பரவல் குறைந்தபாடில்லை. இதற்கு அதிக அளவில் சோதனை நடத்தப்படுவது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், நோய் பரவல் அதிகரித்து வருகிறது என்பதே, நிதர்சனமான உண்மை. அதே நேரத்தில், எந்த விதமான தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், கூட்டு மருத்துவ சிகிச்சையால் நோயிலிருந்து ஏராளமானவர்கள் குணமடைந்து வருவது, திருப்தி அளிப்பாக உள்ளது.
இது ஒரு புறமிருக்க, கொரோனா தொற்றால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டு, ஏராளமானோர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. அதற்கு உதாரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர், ஈரோடில், டீ விற்பதாக, சமீபத்தில் வெளியான செய்தியை சொல்லலாம். அத்துடன், கடன் தவணைகளை செலுத்த முடியாமல், மன அழுத்தத்திற்கு ஆளான, வாடகை வாகன ஓட்டுனர்கள், 50 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் தடுக்க, அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஏராளமான, அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கையை, பல வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டது. இந்த சூழ்நிலையில், நாடு முழுதும் தற்போது அமலில் உள்ள, சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 31ல் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி, எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில், சமீபத்திய சில நாட்களாக, கொரோனா வைரஸ் பரவல், தினமும் 5,000த்துக்கு மேல் அதிகரித்து வருவதை பார்க்கும் போது, இப்போதைக்கு பரவல் கட்டுக்குள் வருமா என்பது சந்தேகமே. அதேநேரத்தில், ஊரடங்கை தளர்த்தி, மார்ச் 25க்கு முன்பிருந்த நிலைமை திரும்ப அனுமதித்தால், ஏராளமான உயிர் பலிகள் நிகழவும் வாய்ப்பு உள்ளது. போலீசாரின் பலத்த எச்சரிக்கையையும் மீறி, காசிமேடில் நேற்று முன்தினம் மீன்கள் வாங்க குவிந்த கூட்டத்தை பார்க்கும் போதே, இதை தெரிந்து கொள்ளலாம். அதனால், தற்போது நடந்து வரும் பல கட்ட சோதனைகள் நிறைவடைந்து, கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, புழக்கத்திற்கு வரும் வரை, குறைவான கட்டுப்பாடுகளுடன் பொருளாதார நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில், முக கவசம் அணியாமல் வெளியில் வருவோருக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் விதிக்கப்படுவது போல, கடுமையான அபராதம் விதிக்கலாம். மருத்துவ நிபுணர்கள் உட்பட, பல தரப்பினருடன் கலந்து ஆலோசித்து, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்காத வகையிலான, நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாம்.
மேலும், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில், தற்போது, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற, இந்திய மருத்துவ முறைகள் நல்ல பலன் தருவதால், அந்த வகை சிகிச்சை அளிக்கும் மையங்களை, மாநிலம் முழுதும் அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். தொற்று பாதித்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலைமையை உருவாக்குவது அவசியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில், அரசுகளுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது என்ற மனநிலையில் இருந்து மக்கள் மாற வேண்டும். வெளியில் செல்லும் போதும், பணிக்கு செல்லும் போதும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கை கழுவுவது போன்ற, சுகாதாரத் துறையினரும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ள, ஆரோக்கியம் பேணும் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள முதியோர், குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொற்று விஷயத்தில், நீண்ட நாட்களுக்கு சுயகட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியது அவசியம். அப்போது தான், நிலைமை மாறும்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!