dinamalar telegram
Advertisement

சர்ச்சை கிளப்பியுள்ள சுற்றுச்சூழல் அறிக்கை

Share

கடந்த சில நாட்களாக, நாடு முழுதும், சர்ச்சையை கிளப்பியுள்ள விஷயம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை -- 2020' தான்.

கடந்த, 2006ல் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மாற்றாக, தற்போதைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துகளில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு தான், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க உள்ளது.

நம் நாட்டில், பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் துவக்க வேண்டும் எனில், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன்படி, அனுமதி பெற வேண்டும். அப்போது, துவக்கப்பட உள்ள தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது தொடர்பாக, அறிவியல்பூர்வமாக மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த அறிக்கையில், பாதிப்பானது குறைவாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டால், திட்டங்கள், தொழிற்சாலைகள் துவக்க அனுமதி வழங்கலாம். பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றால், அனுமதி வழங்கக் கூடாது.

ஆனால், 'மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை -- 2020ல், பல பாதகமான அம்சங்கள் உள்ளன; அது முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களின் நலனை பேணுவதாக இருக்கிறது. எனவே, அதை வாபஸ் பெற வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அதாவது, புதிய வரைவு அறிக்கைப்படி, தொழில் துவக்குவதற்கு முன், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதில்லை; தொழில் துவங்கிய பின் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பெரிய அளவில் தொழில்கள் மற்றும் திட்டங்கள் துவக்கப்படும் போது, அதுதொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பது என்பது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு முன்னதாக நடைபெற வேண்டும். புதிய வரைவு அறிக்கையானது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பிறகு, பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் என்கிறது.

பொதுமக்களிடம், கருத்து கேட்பதற்கான அவகாசமும், 30லிருந்து, 20 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்கு, சில வகையான தொழிற்சாலைகளுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையே தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தொழில் துவங்குகிற நிறுவனமே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தயாரிப்பதற்கான, ஆலோசனை நிறுவனத்தை நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பான விஷயங்களை மறைத்து, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக, அந்த நிறுவனங்கள் அறிக்கை தரலாம்.'திட்டங்களை நிறைவேற்றும் போது, நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதால், அதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க இயலாது; தொழிற்சாலைகளின் சட்ட விரோதமான செயல்பாடுகளை, சட்டப்பூர்வமாக மாற்றும் வகையில், வரைவு அறிக்கை உள்ளது; தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளை, வரைவு அறிக்கை நீர்த்துப் போகச் செய்து விடும்' என்பதும், வரைவு அறிக்கை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள்.

புதிய வரைவு அறிக்கையானது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல்வாதிகளும், சுற்றுச்சூழல் நிபுணர்களும், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையேயான சமநிலையை, வரைவு அறிக்கை பாதிப்பதாக விமர்சனம் செய்கின்றனர். எனவே, இந்த வரைவு அறிக்கையை, அனைத்துப் பிராந்திய மொழிகளிலும், மத்திய அரசு மொழி பெயர்த்து வெளியிட்டு, பெரிய அளவில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு, அதன்பின் இறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு என்றால், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வழிவகை செய்வது அவசியம்.

நாட்டின் வளர்ச்சிக்கு, புதிய திட்டங்கள், தொழிற்சாலைகள் துவக்கப்படுவது தேவையானதே. அவை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். அதேநேரத்தில், எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படாத வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதும் அவசியம். 'ஒவ்வொரு மனிதனின் தேவையையும், பூர்த்தி செய்யும் அளவுக்கு, இந்த பூமி ஏராளமான வளங்களை கொண்டுள்ளது. ஆனால், அந்த வளங்கள் எல்லாம், மனிதனின் பேராசையால் பாதிக்கப்பட கூடாது' என, மஹாத்மா காந்தி கூறியதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக கிடைக்கும், அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களுக்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலி கொடுத்து விடக்கூடாது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement