dinamalar telegram
Advertisement

சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு

Share

கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், பொறியியல் கல்லுாரிகளில் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாவது ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்.அதன் பிறகே பட்டம் வழங்கப்படும் என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.சி.ஜி., தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட், கல்லுாரி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் என, அறிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு சூழ்நிலை கருதி, தேவைப்பட்டால் தேர்வை தள்ளி வைத்துக் கொள்ளலாம். மேலும், தேர்வை ஆன்லைனில் நடத்துவதா அல்லது ஆப்லைனில் அதாவது, கல்லுாரிகளில் நடத்துவதா, இல்லையெனில் இரண்டு விதமான முனைகளிலும் நடத்துவதா என்பதை, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், பல்கலைகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.இதன் வாயிலாக, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடிக்க உள்ள, 1.50 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக நீடித்த, 'சஸ்பென்ஸ்' முடிவுக்கு வந்துள்ளது.கல்லுாரி, பல்கலை பாடத் திட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இல்லை. கல்லுாரி படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்களில், குறிப்பிட்ட சதவீதத்தினரே, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர்.எனவே, குருட்டு மனப் பாடம் செய்து, அதனடிப்படையில் தேர்வு எழுதி, அதனால் பெறும் பட்டத்தால், மாணவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழ்ந்து விடப் போவதில்லை.மேலும், அரசு வேலை, பொதுத் துறை நிறுவன பணி, பிரபல தனியார் நிறுவன பணி என, எதில் சேர வேண்டும் என்றாலும், அந்நிறுவனங்கள் நடத்தும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெறுவது அவசியம்.மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து, விடைத்தாள் திருத்தம் உட்பட தேர்வு தொடர்பான மற்ற நடைமுறைகள் முடிவடைய, இந்த ஆண்டு இறுதி ஆகி விடும் என்பதால், மாணவர்கள் பட்டம் பெற கால தாமதமாகும் என்பதில் ஐயமில்லை.மொத்தத்தில், ஓராண்டு வீணாகி விடும் என, சிலர் தரப்பில் முன் வைக்கப்படும், விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், கல்லுாரி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தாமல், பட்டம் வழங்குவது, அவர்கள் எதிர்கால நலனை பாதிக்கும். அப்படி வழங்கும் பட்டத்திற்கு மவுசும் இருக்காது.ஆண்டு இறுதித் தேர்வு நடத்தாமல் பட்டம் வழங்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பது, அவர்களின் ஓட்டு வங்கி அரசியலையே காட்டுகிறது என்பதும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு வாயிலாக, தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பை, கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். எனவே, இந்த விஷயத்தில், இனி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முடிவு எடுக்க வேண்டும்.கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு விரைவாக பட்டங்களை வழங்க வேண்டும்.மேலும், கல்லுாரி மாணவர்கள் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல. அதனால், தேர்வு எழுதும் விஷயத்தில், அவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, தேர்வுகளை எழுதி, உலக நாடுகள் பலவும் அங்கீகரிக்கக்கூடிய பட்டத்தை பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அதேநேரத்தில், ஆண்டு இறுதித் தேர்வை, ஆப்லைனில் நடத்துவதாக இருந்தால், தற்போது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களாக செயல்படும் கல்லுாரிகளில் நடத்தாமல், மற்ற இடங்களில் நடத்தலாம். ஒரே நேரத்தில் அதிக மாணவர்கள் கூட்டமாக சேராத வகையில், குறைந்த மாணவர்களுடன், காலை, மாலை என, இரண்டு, 'ஷிப்ட்'களாக தேர்வுகளை நடத்தலாம். தேர்வு மையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல, சிறப்பு பஸ் வசதிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில் சீரிய முறையில் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டியது, கல்வி நிறுவனங்கள் பொறுப்பு. அதை செய்யும் என நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement