பி.எம்.கிசான் திட்ட மோசடி தவறுகள் களையப்படுமா?
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு எதிராக, மத்திய, மாநில அரசுகள், ஏப்ரல் முதல் தீவிரமாக போராடி வரும் நிலையில், தமிழக அரசுக்கு ஒரு தலைவலியாக, பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு, சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், தகுதியற்ற ஐந்து லட்சம் பேர், விவசாயிகள் என்ற பெயரில், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அதன் வாயிலாக, 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. எனவே, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' எனப்படும், பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டமானது, மத்திய அரசின் திட்டமாகும். 2018 டிசம்பர், 1 முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ், சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய், தலா 2,000 ரூபாய் என, மூன்று தவணைகளாக, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசு வகுத்துள்ள, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இத்திட்ட பயனாளிகளை, மாநில அரசுகள் தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில், இத்திட்டத்திற்காக இதுவரை, 2,500 கோடி ரூபாய் வரை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆகஸ்ட், 23 நிலவரப்படி, நாடு முழுதும் இத்திட்டத்தில், 10.46 கோடி விவசாயிகள் பயன் அடைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் விவசாய நிதியுதவி திட்ட பயனாளிகள் சேர்க்கை, வி.ஏ.ஓ.,க்கள் எனப்படும், கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக, முதலில் மேற்கொள்ளப்பட்டது. பின், விவசாயத் துறை அலுவலர்கள் வாயிலாகவும்; தொடர்ந்து, இணையதளம் வாயிலாக நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை உதவியுடன், தனியார் இன்டர்நெட் மையங்கள் வாயிலாக, பயனாளிகள் பெயரை, பதிவேற்றம் செய்ததில் தான், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழகத்தில், 41 லட்சமாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை, திடீரென, 46 லட்சமாக உயர்ந்ததால், சந்தேகங்கள் எழும்பி, விசாரணை நடத்தியதில், முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
விவசாய தொழிலில் ஈடுபட்டிருந்த பலர், தண்ணீர் பற்றாக்குறை, நோய் பாதிப்பால் நஷ்டம், இயற்கை சீற்றம் உட்பட, பல்வேறு காரணங்களால், சில ஆண்டுகளாக மாற்று தொழிலுக்கு மாறி வந்தனர். அந்த நிலைமையை சீரமைக்கவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தை அறிவித்தது. இதன் வாயிலாக, இடைத்தரகர்களின் தலையீடின்றி, விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே, நேரடியாக பணம் சென்றடைந்தது. ஏழை விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் வகையிலும், விவசாய தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நிதியுதவி திட்டத்தில் தற்போது, முறைகேடுகள் அம்பலமாகி இருப்பது வேதனையாக உள்ளது.
இதுபோன்ற மோசடிகள், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் சேர, விண்ணப்பிக்கும் விவசாயிகள், தகுதியானவர்கள் தானா என்பதை, ஒரு சில அதிகாரிகள் மட்டும் முடிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு, ஒரு குழுவானது, அதை தீர்மானிக்க வேண்டும். அந்தக் குழு தான், விவசாயிகளை விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும். அவர்கள் தந்துள்ள தகவல்கள் உண்மையானதா என்பதை, கள ஆய்வு வாயிலாக உறுதி செய்ய வேண்டும். குழுவில், பல்துறை அதிகாரிகள் இடம் பெற வேண்டும். மேலும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றுடன், வருவாய் துறையினர் தரும் பட்டா, சிட்டா போன்ற நில ஆவணங்களை, பிரதமரின் நிதியுதவி திட்டத்திற்கு பதிவேற்றம் செய்வதையும் கட்டாயப்படுத்த வேண்டும்.
மேலும், கிராமங்களில், முறைப்படி பிரிக்கப்படாத மூதாதையர் நிலங்களை, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அனுபவித்து வரும் நிலைமை உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு, அவர்களின் பங்கிற்கு ஏற்ற நிலத்தின் அளவை குறிப்பிட்டு, கூட்டு பட்டா வழங்கி, அதன் அடிப்படையில், நிதியுதவி பெற வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில், 1.25 கோடி குடும்பத்தினர் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், 41 லட்சம் பேர் தான், பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் பயன் அடைகின்றனர் என்பது, விவசாயிகள் சங்கங்களின் குற்றச்சாட்டு. அதுவும் சரிசெய்யப்பட வேண்டும்.
தகுதியுள்ள எந்த விவசாயியும், நிதியுதவி திட்டத்தில் இருந்து விடுபடாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில், இந்த நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்த அதிகாரிகள் உட்பட, அனைவர் மீதும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடும் நடவடிக்கையை தொடர வேண்டும். அவர்களை சிறையில் தள்ள வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!