dinamalar telegram
Advertisement

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!

Share

கடந்த, 50 ஆண்டுகளாக, பூமியைக் காப்போம் என்று உலகத் தலைவர்கள் கூறி வருகின்றனர். பல லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான இந்தப் பூமியில், கடந்த, 100 ஆண்டுகளாக ஏற்பட்ட காயத்தால், 'பூமியை காப்போம்' என, தலைவர்கள் அழைப்பு விடுகின்றனர்.

பல தலைவர்கள், இந்த பூமியை ஆண்டு உள்ளனர். அவர்கள் யாரும், பூமியை அழித்ததில்லை. ஆனால், தொழில் புரட்சி என்ற பெயரில், அணு உலைகள், ரசாயன தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்கி, இந்த பூமியை மாசடைய செய்தனர். நம் தேசத்தின் தலைநகர் டில்லியில், கடந்த ஆண்டு, காற்றை வியாபாரமாக்கி விட்டனர்.


ஏன் இந்த நிலை என்று யாரும் உணரவில்லை; இனியும் உணர போவதுமில்லை. அப்படி உணராமல் போனால், நம் சந்ததிகள், இனி இந்த பூமியில் வாழ முடியாது. இதற்கு தீர்வு, நம் தேவைக்கு, ஒரு மரம் நாம் வெட்டினோம் என்றால், அந்த இடத்தில், நான்கு மரக்கன்றுகளை நட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாள் முடிவதற்குள், குறைந்த பட்சம், 100 மரக்கன்றுகள் நடுவோம். இதை, பின்வரும் நம் சந்ததிகளுக்கும் கற்று தருவோம்.

நீரின்றி அமையாது உலகு. இவ்வுலகில், 70 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளது. நம் பயன்பாட்டிற்கு உகந்த தண்ணீரின் அளவு, ௫ சதவீதத்துக்கும் குறைவு தான். இதை, மழையால் மட்டுமே பெற வேண்டும்.

பேராபத்துமாறாக, பூமிக்கு அடியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி தண்ணீர் எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியாமல் செய்கிறோம்.சுமார், 50 ஆண்டுகளுக்கு முன், செல்லும் இடமெல்லாம் தண்ணீர் இருந்தது. ஆனால், இன்று உலகமெல்லாம் தண்ணீர் விற்கப்படுகிறது. என் தந்தை காலத்தில் துவங்கிய தண்ணீர் விற்பனை, என் காலத்தில் வானுயர்ந்து நிற்கிறது.

என் பிள்ளைக்கு தண்ணீர் விலைக்கு கிடைக்குமோ தெரியவில்லை.அப்படியானால், என் பின்வரும் சந்ததி எப்படி தண்ணீர் இன்றி வாழ்வார்... அவர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்... இல்லை நாம் என்ன செய்ய வேண்டும்... இதற்கு ஒரே தீர்வு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தான்.

இயற்கை கொடுத்த கொடை, மழை. மழை நீரை, ஏரிகள், குளங்கள், கால்வாய்களில் சேமிப்போம். முடியவில்லை எனில், ஒவ்வொரு வீட்டிலும், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்போம்.வருங்கால சந்ததிக்கு தண்ணீரின் அவசியத்தை சொல்வோம். சாயப்பட்டறை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், ஆறுகளில் கலப்பதையும் தடுப்போம்.

மனிதனுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டிருப்பது விவசாயம். எனினும், விவசாயத்தின் மூலம் அனைவருக்கும் உணவு அளித்து விட்டோமா என்றால், இல்லை என்பது தான் பதில்.உலக மக்களில் பல லட்சம் பேருக்கு சரியான உணவு இன்றி, பட்டினியாக வாழ்கின்றனர். அதனால், உணவில் நாம் தன்னிறைவு அடைய எத்தனையோ வழிகளை பின்பற்றி வருகிறோம். அவற்றில், பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, விளைநிலங்களை எல்லாம் பாழாக்கி கொண்டிருக்கிறோம்.


நாம், இப்படி விளைநிலங்களில், பூச்சிக்கொல்லி தெளிப்பதால், பயிர் வகைகள், குறுகிய காலத்திலேயே அறுவடைக்கு தயாராகி விடுகின்றன. இதனால், அவற்றை உட்கொள்ளும் மனிதனுக்கு, சத்தான உணவு கிடைக்கவில்லை. மாறாக, ரசாயனங்கள் கலந்த உணவை சாப்பிட்டு, பல நோய்களுக்கும், மரபியல் மாற்றங்களுக்கும் ஆட்படுகிறோம்.இதனால், மனித இனத்திற்கு பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது.


விளைநிலங்களை விற்பனைக்கு, விலைநிலங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். ரசாயன உரங்களை, செடிகளின் மீது தெளித்தால், கிருமிகள் இறந்து மண்ணில் மடிகின்றன. மண்ணில் வாழும் விவசாயிகளின் நண்பன், மண் புழுக்கள், மடிந்த கிருமிகளை உண்டு, அவையும் இறக்க நேரிடுகிறது.

மாடித் தோட்டம்இப்படியே சென்றுக் கொண்டிருந்தால், அனைத்து விளைநிலங்களும் மலட்டுத் தன்மையை பெற்று, பாலைவனமாக மாறி விடும். விவசாயம் முற்றிலும் அழிந்து, மனிதன் உண்ண உணவின்றி, வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்படுவான்.

மேலும், 100 ஆண்டுகளுக்கு முன் வரை, உலகமெங்கும் இயற்கையாய் விளைந்து கொண்டிருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், இன்று, ரசாயனங்கள் மூலமே விளைவிக்கப் படுகிறது. அனைத்து நாடுகளிலும், ரசாயன தொழிற்சாலைகள் பெருகி விட்டன. பூச்சிக்கொல்லி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், அந்த நிறுவனங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இன்று உலகமெங்கும், 'ஆர்கானிக் ஷாப்' என்று அழைக்கப்படும், இயற்கை விளைபொருள் நிலையங்கள் பெருகி விட்டன.

இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தில், ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி, அதிகப்படியான கோதுமையை, குறுகிய காலங்களில் விளைவித்தனர். இப்படி, பஞ்சாபில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களால், மக்களின் பசி நீங்கியது.ஆனால், மக்களுக்கு கொடிய புற்றுநோய் வந்து விட்டது. இன்று, இந்தியாவில், புற்று நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலமாக பஞ்சாப் உள்ளது.
இதற்கு தீர்வு, நமக்கு தேவையான உணவை, நாமே இயற்கை முறையில், ஒவ்வொருவர் வீட்டிலும், மாடித் தோட்டங்களை அமைத்து, நாமே உற்பத்தி செய்து கொள்வது தான். மேலும், விளைநிலங்களில், ரசாயனம் பயன்படுத்துவதை தவிர்ப்பது; இயற்கை முறையில் விளைநிலங்களில் விவசாயம் செய்வது; மக்கும் குப்பைகளை உரமாக்கி, விவசாயிகளுக்கு அளிப்பது போன்றவற்றையும் செய்ய வேண்டும்.

சமவெளிப் பகுதிகளில் தான், விவசாயம் செய்ய முடியும். ஆனால், அங்கு தொழிற்சாலைகளை உருவாக்கி, தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டி விடுகிறோம். இன்று, நிலங்கள் அழிவதற்கு, பிளாஸ்டிக் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாஸ்டிக் நிலங்களின் மேற்பகுதியில் தங்குவதால், மழை நீர் மண்ணுக்குள் சென்று, நிலத்தடி நீராக மாறுவதில்லை. நிலங்களின் அனைத்து விதமான குப்பைகளையும் மக்கள் அப்படியே கொட்டி விடுகிறோம். இதில், மக்கும் குப்பை, மக்கா குப்பை அனைத்தும் கலந்து, நிலத்தின் தன்மை மென்மேலும் பாதிக்கப்படுவதுடன் விஷக்கிருமிகள் அங்கு உருவாகின்றன.

அந்த நிலத்தின் இருக்கும் நீருக்குள், ரசாயனங்கள் கலந்து நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. பாலைவனங்களில் அணுகுண்டு சோதனை முதல், ஏவுகணை சோதனை என்று, பலவற்றை செய்து, அங்கு வாழும் உயிரினங்களுக்கு பேராபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சென்னையில், பள்ளிக்கரணை முதல், தரமணி வரை இருந்த சதுப்பு நிலங்கள், இன்று சிறு பகுதி மட்டுமே உள்ளது. சென்னையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கொட்டப்படுவதும், ஆக்கிரமிப்பு களும், சதுப்பு நிலங்கள் குறைய காரணமாக இருக்கின்றன.

இன்று, உலக அளவில் வறண்ட நிலங்களில், எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன், விவசாயம் செய்து கொண்டிருந்த நிலங்களில், பெரும்பகுதி உபயோக மற்ற நிலமாக மாறி வருகின்றன. மனிதன் வாழ்ந்து வந்த பல நகரங்கள், இன்று மனிதன் வாழ முடியாத நகரங்களாக மாறி விட்டன.


இதற்கு தீர்வு, நிலங்களின் தன்மையை புரிந்துக் கொள்ளுதல்; நிலங்களின் தன்மைக்கேற்ப வாழ்வியலை மாற்றுதல்; நிலங்களில் தேவையற்ற கழிவுகள் கொட்டுவதை தவிர்த்தல்; மக்கும் குப்பைகளை உரமாக்குதல்; மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்தல் போன்றவையே. இயற்கையோடு நாம் ஒன்றி வாழ்ந்தால், இயற்கை நம்மை போற்றி வாழும். இயற்கையை செயற்கையால் வெல்ல முடியாது என்பதை புரிந்து, இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
உ.கோபாலகிருஷ்ணன்


இயற்கை ஆர்வலர்


தொடர்புக்கு:


gopal@nammaooru.org

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • சுரேஷ் -

    ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் சூப்பர் டீலக்ஸ் குடியிருப்புகளாக மாறிவிட்டது. எங்கே மரங்களை நடுவது? சாலைகள் மற்றும் தெருக்களின் ஓரங்களில் வண்டிகள் செல்வதற்கே இடம் போதவில்லை. மரங்களை எங்கே நடுவது? மனிதர்களாகிய நாம் இயற்கையை அழித்து நம்முடைய வாழ் நாட்களை குறைத்துக் கொண்டு இருக்கிறோம். "நமக்கு நாமே எமன்"

  • Deva Indiran - Doha,கத்தார்

    நீங்கள் கடைசி வரையும் புலம்பி கொண்டே இருங்கள்,எதாவது செயல் வடிவமாது இருக்கா உங்களிடம் ..குறைத்த பட்சம் உங்கள் தெருவில் எத்துணை மரங்களை நட்டு பாது காத்து உள்ளீர்கள்? உங்கள் வீட்டில் எத்துணை மரத்தை வளர்த்துள்ளீர்கள்? புலம்பல் கட்டுரை இது.உங்களால் மேலோட்டமான பேச்சை மட்டுமே பேசி பேசி நாட்டை கெடுக்கிறீர்கள் .முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள் .பியூஸ் மனுஷ் , நாம் தமிழர் , மக்கள் பாதை , வானகம் , செம்மை வானம் இவர்களை சென்று பாருங்கள் , அவர்களின் செயல்பாடுகளை அறிந்து வாருங்கள் .

  • மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்

    மாடியே இல்லாமல் பிளாட் வீட்டில் அல்லவா குடியிருக்கிறோம் .

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement