dinamalar telegram
Advertisement

ஒரே நாடு; ஒரே ரேஷன் சாதகமான திட்டம்

Share

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், தொழில் ரீதியாகவோ, வேலை தேடியோ, தங்களின் சொந்த மாநிலத்திற்கு உள்ளேயோ அல்லது மற்றொரு மாநிலத்திற்கோ இடம் பெயரும் போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், மானிய விலையில் பெறும் வகையிலான, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், கடந்த, 1 முதல், தமிழகத்தில் அமலாகி உள்ளது.


நாட்டில் உள்ள, 28 மாநிலங்கள், எட்டு யூனியன்பிரதேசங்களில், ஆகஸ்ட், 1 நிலவரப்படி, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இத்திட்டத்தில் இணைந்திருந்தன. தற்போது, அந்தப் பட்டியலில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது. இதன்வாயிலாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உணவுப் பொருட்கள் பெறுவோர்களில், ௭௦ சதவீதம் பேர், இந்த திட்ட வரம்பிற்குள் வந்துள்ளனர். ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலானதால், மானிய விலையில் உணவு பொருட்கள்பெறும் ஏழைகள் எவருக்கும், இனி, அவற்றை பெற முடியவில்லை என்ற நிலைமை இருக்காது.

மேலும், குறிப்பிட்ட கடையில் தான், பொருட்கள் வாங்க வேண்டும் என்பதும் மாறும். ரேஷன் கார்டு உள்ள ஒவ்வொருவரும், தங்களுக்கு அருகில் உள்ள, கூட்டம் அதிகம் இல்லாத, எந்த கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, கைரேகை அல்லது ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தான், ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதால், ரேஷன் திட்ட ஊழல்கள் குறையலாம். வேலைக்காக ஊர் விட்டு ஊர் செல்வோர், தங்களின் ரேஷன் கார்டுகளை அண்டை அயலாரிடம் கொடுத்து, ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளச் சொல்வதோ அல்லது ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பதோ தவிர்க்கப்படும்.

மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், போதிய வருமானம் இல்லாமல் தவித்த போது, அவர்களால், மானிய விலையில் வழங்கப்பட்ட ரேஷன் பொருட்களையும் பெற முடியவில்லை. இதனால், பெரும் அவதிக்கு ஆளாகினர். இனி, அது போன்ற நிலைமை உருவாகாது. எந்த இடத்திற்கு வேலைக்கு செல்கின்றனரோ, அங்குள்ள ரேஷன் கடையிலேயே பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், ரேஷன் கார்டுகளை, வியாபாரிகளிடம் அடகு வைத்து விட்டு செல்லும் முறையும் முடிவுக்கு வரும்.
\வியாபாரிகள் சிலர், மொத்தமாக பொருட்களை வாங்கி, கள்ளச்சந்தையில் விற்பதும் குறையும். அதேநேரத்தில், புலம் பெயரும் தொழிலாளர்கள் வசதிக்காக, மாநில அரசுகள் வழங்கும் ரேஷன் கார்டுகளில், இனி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில், கார்டுதாரர்களின் விபரங்கள் இடம் பெற்றிருப்பது அவசியம். மேலும், ஆதார் கார்டு போல, 10 அல்லது 12 நம்பர்களுடன் கூடிய, ஒரே விதமான ரேஷன் கார்டுகள், நாடு முழுவதும், எதிர்காலத்தில் வழங்கப்பட்டால், ரேஷன் கார்டு தொடர்பான, பல பிரச்னைகளை தீர்க்கலாம்.


சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, 2019ல் வெளியிடப்பட்ட, உலக பட்டினி குறியீட்டில், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட, 117 நாடுகளில், இந்தியா, 102வது இடத்தை பிடித்திருந்தது. இனி, அந்த நிலைமை மாறலாம். மேலும், எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்கிற போது, குறிப்பிட்ட சில ரேஷன் கடைகளில், அதிகம் பேர் பொருட்கள் வாங்கலாம். அதற்கு ஏற்றாற்போல, அந்த கடைகளுக்கு, அதிக உணவு பொருட்களை, பொது வினியோக துறையினர், 'சப்ளை' செய்ய வேண்டும். ஓரிரு மாதங்களுக்கு, ரேஷன் கடைகளின் பொருட்கள் வினியோக நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்றாற்போல, பொருட்களை சப்ளை செய்ய வேண்டும்.

மேலும், புலம் பெயரும் தொழிலாளர்கள் பற்றி, அதிகாரப்பூர்வமாக விபரங்கள் சேகரிக்கப்படாததால், ரேஷன் பொருட்கள் வினியோகம் மற்றும் சப்ளையில், சில சிக்கல்கள் ஏற்படலாம். அதுவும் சரிசெய்யப்பட வேண்டும். அத்துடன், புலம் பெயரும் தொழிலாளர்கள் குறித்த விபரங்கள், அரசு நிறுவனங்களால் சேகரிக்கப்பட வேண்டும். அத்துடன், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் செயல்பாடு குறித்து, அவ்வப்போது சமூக தணிக்கை செய்யப்பட வேண்டும். வரும் காலத்தில், பொது வினியோக முறையானது, பொருட்களுக்கான பணத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கிற்கே, பணமாக செலுத்தும் முறையாக மாற்றப்பட்டால், அதுவும் நல்லதே. ஏழ்மையை போக்கவும், வருமான பற்றாக்குறையை தீர்க்கவும், சிறப்பான வேலை வாய்ப்புகளை பெறவும், தொழிலாளர்கள் புலம் பெயர்வது தவிர்க்க முடியாதது. அவர்களுக்கு ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம், வரும் நாட்களில், சிறப்பான பலன் அளிக்கும் என, நம்பலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement