சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கட்சிகளுக்கு சவுக்கடி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இந்த ஆண்டின் முற்பகுதியில், டில்லி ஷாகீன் பாக் பகுதியில், பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு அமலாகும் வரை, இந்தப் போராட்டம் நீடித்தது. சாலைகளை மறித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இதுதொடர்பான வழக்கில், சமீபத்தில் தீர்ப்பளித்த, சுப்ரீம் கோர்ட்டின், நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான, மூன்று நீதிபதிகள் பெஞ்ச், 'பொது இடங்கள், சாலைகள், போராட்ட களங்களாக மாறுவதை ஏற்க முடியாது. பொது இடங்களை காலவரையற்ற வகையில் ஆக்கிரமிக்க முடியாது. அனுமதியின்றி, பொது இடங்களையும், சாலைகளையும் ஆக்கிரமித்து நடக்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடக்கும் போராட்டங்களை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'இந்த விஷயத்தில், ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, அரசு நிர்வாகம் தப்பிக்கக் கூடாது. டில்லி ஷாகீன் பாக் பகுதியில், சாலைகளை அடைத்து நடைபெற்றது போன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது' என, கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இது, வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். ஜனநாயக நாட்டில், அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவோ, நடவடிக்கைகளுக்கு எதிராகவோ, மற்ற பல காரணங்களுக்காகவோ, பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் போராடுவதற்கான உரிமையும், மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் உரிமையும், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமையானது அத்துமீறுவதாக இருக்கக் கூடாது. போராட்டம் நடத்துபவர்களுக்கு எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ, அதேபோன்ற உரிமை, போராட்டத்தில் ஈடுபடாத மற்ற பொதுமக்களுக்கும், குறிப்பிட்ட பொது இடங்களை, சாலைகளை பயன்படுத்துவோருக்கும் உள்ளது என்பதையே, தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் வாயிலாக, அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ நடத்தும் போராட்டங்கள், எந்த வகையிலும் மற்றவர்களை பாதிக்காமல் இருக்க வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் தான் நடைபெற வேண்டும் என்பதை, நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த தீர்ப்பானது, அற்ப காரணங்களுக்காக, திடீரென சாலைகளை மறித்து, போராட்டங்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கும், மற்ற பல சேவைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும், அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் ஒரு சாட்டையடியாகும்.
அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின்படி, சட்டத்திற்கு எதிராகவோ, அரசின் முடிவுகளுக்கு எதிராகவோ போராடுவோர், தங்களின் கருத்துக்களை, சுதந்திரமாக தெரிவிக்க உரிமையுண்டு. அவர்கள் அரசால், போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூடி, போராட்டங்களை நடத்தலாம், தங்களின் எதிர்ப்புகளை கோஷங்களாக தெரிவிக்கலாம். ஆனால், போராட்டங்கள் எதுவுமே, மற்றவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கக்கூடாது. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு, பொது ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்துவதாக இல்லாமல், குறிப்பிட்ட அளவு கட்டுப்பாடுகளுடன் நடைபெற வேண்டும். இதை, அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் நன்கு உணர்ந்து, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். தொண்டர்களை துாண்டி விட்டு, வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
போராட்டம் நடத்துவதற்கான உரிமை என்பது, ஜனநாயக நாட்டின் ஒரு பாதுகாப்பு கருவியாக இருக்க வேண்டும். அரசியல் சட்ட வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதும், சர்வாதிகாரம் போன்ற, பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தி விடும். மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் நிலைமையும் உருவாகலாம். நாட்டில் நிலவும் ஆரோக்கியமான சூழ்நிலையை கெடுத்து விடும். அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால், அதற்கு நஷ்ட ஈடு வசூலிக்கும் வகையில், போராட்டக்காரர்களே, சேதத்திற்கு பொறுப்பேற்கும் வகையிலான, சில தீர்ப்புகளை, சென்னை உயர் நீதிமன்றம் உட்பட, சில நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன.
அந்த வரிசையில், தற்போது, சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதைக் கண்டிப்புடன் பின்பற்ற அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டின், இந்த உத்தரவின் அடிப்படையில், நாடு முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், தாலுகாக்கள் அளவிலும் போராட்டம் நடத்துவோருக்காக, பிரத்யேகமான இடங்களை, அரசு நிர்வாகத்தினர் ஒதுக்கினால் நல்லது. அந்த இடங்களில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க வேண்டும். இப்படி செய்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பிரச்னை ஏற்படாது. ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!