ஜி.எஸ்.டி., இழப்பீடு சர்ச்சை: நல்ல முடிவெடுத்த மத்திய அரசு
சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 2017 ம் ஆண்டு அறிமுகமான போது, அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக, மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.
அதன்படி, கடந்த நிதிஆண்டில், 1.65 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரண மாக, நடப்பு நிதியாண்டில், மத்திய, மாநில அரசு களின் வரி வருவாய் கணிசமாக குறைந்தது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் மட்டும், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகையாக, 1.51 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டிஇருந்தது. இதில், தமிழகத்திற்கான பங்கு மட்டும், 11 ஆயிரத்து, 700 கோடி ரூபாய். அதனால், இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என, மாநில அரசுகள் நச்சரித்து வந்த நிலையில், 'மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகையை, தற்போது வழங்க இயலாது. கொரோனா ஊரடங்கு காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் குறைவாக இருப்பதால், போதுமான நிதியில்லை' என, கடந்த மாதம் பார்லிமென்டில், மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மாநில அரசுகள் தங்களுடைய வருவாய் பற்றாக்குறையை போக்க, ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ள லாம். அந்தக் கடனை, ஐந்து ஆண்டுகளுக்கு பின், திருப்பிச் செலுத்தலாம் என்பது உட்பட, இரண்டு விதமான வாய்ப்புகளை, மத்திய அரசு முன்வைத்தது. மத்திய அரசின் இந்த முடிவை, சில மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டாலும், மேற்குவங்கம், கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மேலும், இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. மத்திய அரசே கடன் வாங்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தின.'வருவாய் இழப்பை ஈடுகட்ட, மாநிலங்கள் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, 2017ம் ஆண்டில், ஜி.எஸ்.டி., சட்டத்தை அமல்படுத்திய போது, மாநில அரசுகளுக்கு அளித்த உத்தரவாதத்தை மீறுவதாக உள்ளது. மேலும், இந்த அறிவிப்பு, மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையை பாதிக்கும்' என்றும், விமர்சனங்கள் எழுந்தன. இப்படி பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததால், மத்திய அரசு தன் முடிவை மாற்றி உள்ளது.
மாநில அரசுகளுக்கு தர வேண்டிய, ஜி.எஸ்.டி., நிலுவை தொகை வழங்க, மத்திய அரசே, 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்து உள்ளது. இந்த நிதியானது, ஜி.எஸ்.டி., இழப்பீட்டிற்குப் பதிலாக, மாநிலங்களுக்கு கடனாக வழங்கப்பட உள்ளது. இதனால், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இடையே நிலவி வந்த பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த முடிவை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம் உட்பட, பொருளாதார நிபுணர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
மேலும், மத்திய அரசு வாங்கும் இந்த கடனால், நிதிப்பற்றாக்குறை அதிகரிக்காது; மாநில அரசுகள், மத்திய அரசு இணைந்து வாங்கும் கடன் தொகையும் உயராது. மாநிலங்கள் தனித்தனியாக கடன் வாங்கி, அதற்கு வெவ்வேறு விதமான வட்டி செலுத்துவதும் தவிர்க்கப்படும் என்பதும் சிறப்பானதே.
பொருளாதார மந்த நிலைமை காரணமாக,2019 ஆகஸ்ட் முதல், ஜி.எஸ்.டி., வசூலில் இலக்கை எட்ட முடியாமல், மாநில அரசுகள் தவித்து வந்தன. அத்துடன், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி, மாநில அரசுகளுக்கு செலவுகள் அதிகரித்த தும், தொற்று பரவலை தடுக்க, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கால், வரி வசூல் குறைந்ததும், அவற்றின் நிதி நிலைமையை மோசமாக்கின. அந்த பாதிப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு தற்போது நல்லதொரு முடிவு எடுத்துள்ளது. இதனால், மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் இருந்து மீள வாய்ப்பு உருவாகியுள்ளது.
கொரோனாவால், மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கு, 2.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என, மத்திய அரசு கணித்திருந்தது.அதில், பாதியளவிலான தொகையை, மத்திய அரசு கடன் வாங்கி, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் உத்வேகம் பெறலாம். நிதி சந்தைகளில் நிலவும், நிலையற்ற தன்மையும், குழப்பங்களும் முடிவுக்கு வரலாம். மேலும், நிதிப்பற்றாக்குறையால் மாநிலங்கள் தவித்து வரும் நிலையில், மத்திய அரசு முதலில் தெரிவித்த யோசனைப்படி, மாநில அரசுகள் கடன் வாங்கினால், அதனால், மூலதன செலவுகளும், உள்கட்டமைப்பு செலவுகளையும் குறைக்க வேண்டியது நேரிட்டிருக்கும். அது, மத்திய அரசின் தற்போதைய முடிவால் தவிர்க்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக நீடித்த சர்ச்சைகளும் தீர்ந்துள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!