dinamalar telegram
Advertisement

எதிர்க்கட்சிகளுக்கு அதிர்வலையை ஏற்படுத்திய தடுப்பூசி அறிவிப்பு

Share

பீஹார் மாநிலத்தில், வரும், 28 நவம்பர், 3 மற்றும் 7ம் தேதிகளில், மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது, நவ., 10ம் தேதி தெரிந்து விடும்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், தற்போதைய பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.நிதிஷ் கூட்டணிக்கு போட்டியாக, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், இரு அணிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், பா.ஜ., சார்பில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டில்லியில் வெளியிட்ட அறிக்கை, எதிர்க்கட்சிகள் மத்தியில், சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது, 'பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்' என்பதாகும். கொரோனா தொற்று பரவலும், அதனால், உருவாகியுள்ள பீதியும், இன்னும் முழுமையாக குறையவில்லை. மேலும், தடுப்பூசி எப்போது அறிமுகமாகும் என்பதும், இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், கொரோனா பரவல் சூழலை சாதகமாக பயன்படுத்தியுள்ள, பா.ஜ., இலவச தடுப்பூசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'ஆனால், கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு சொந்தமானது; பா.ஜ.,வுக்கு சொந்தமானதல்ல. நோய் குறித்த மக்களின் அச்சத்தையும், மரண பீதியையும், அரசியல் ஆதாயத்திற்காக, பா.ஜ., பயன்படுத்துகிறது' என, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது.

அதேநேரத்தில், மஹாராஷ்டிரா மாநில ஆளும் கட்சியான சிவசேனாவோ, 'நாட்டில், 130 கோடி மக்கள் உள்ளனர். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அந்தத் தடுப்பூசியை பொது மக்கள் அனைவருக்கும் வினியோகிக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை.'அதை மறந்து விட்டு, பீஹார் மக்களுக்கு மட்டும், கொரோனா தடுப்பூசி இலவசம் என, பா.ஜ., அறிவித்துள்ளது சரியல்ல. அப்படியெனில், மற்ற மாநில மக்களும், பா.ஜ., அல்லாத இதர கட்சிகள் ஆளும் மாநிலங்களும், ரஷ்யாவிடமா தடுப்பூசி கேட்க முடியும். பீஹார் மட்டும் இந்தியாவில் இருப்பது போலவும், மற்ற மாநிலங்கள் எல்லாம், பாகிஸ்தானில் இருப்பது போலவும் உள்ளது, பா.ஜ.,வின் அறிவிப்பு' என, கடுமையாக விமர்சித்துள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியோ, 'பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு, கோவிட் தடுப்பூசி கிடையாதா?' என, கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டின் அனைத்து மாநில மக்களிடம் இருந்தும், வரி வசூலிக்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த ஏழைகளும், கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற தகுதியானவர்கள். அப்படி இருக்கையில், பீஹார் மக்களுக்கு மட்டும் இலவசம், மற்றவர்கள் பணம் செலுத்த வேண்டுமா? உயிர்காக்கும் மருந்து விவகாரத்தை அரசியலாக்குவது, அரசியல் நெறிமுறைகளுக்கு முரணானது அல்லவா என்ற, விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதனால், பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலரோ, 'கொரோனா தடுப்பூசி மருந்துகளை, மாநில அரசுகளுக்கு, குறிப்பிட்ட விலையில், மத்திய அரசு வழங்கும். அவற்றை கட்டணத்துக்கு வழங்குவதா அல்லது இலவசமாக வழங்குவதா என்பதை, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். பீஹாரில், பா.ஜ., தற்போது ஆளும் கூட்டணியில் உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவது என, முடிவு எடுத்துள்ளது' எனக்கூறி சமாளித்துள்ளனர்.

பீஹாரில் தேர்தலை சந்திக்கும், பா.ஜ., தடுப்பூசி இலவசம் என, அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வும் அதே பாணியை பின்பற்ற துவங்கியுள்ளது. 'கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், அது, அனைவருக்கும் இலவசமாக போடப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தது, தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு, மக்களை கவர்வதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, காசநோய், போலியோ, பெரியம்மை உட்பட, ஒன்பது நோய்களுக்கு எதிராக, தற்போது இலவசமாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதன் வாயிலாக, ஒவ்வோர் ஆண்டும், 12 லட்சம் குழந்தைகளும், 11 லட்சம் கர்ப்பிணிகளும் பயனடைகின்றனர். அதனால், முதல்வர் அறிவித்தது ஏற்கனவே உள்ள திட்டங்களின் தொடர்ச்சியே என்றாலும், தேர்தல் வரவுள்ள நேரத்தில் அறிவித்ததால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் அறிவிப்பு, அ.தி.மு.க., வெற்றிக்கு உதவுமா என்பது, தேர்தல் முடிவுகளுக்கே பிறகே தெரியவரும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement