dinamalar telegram
Advertisement

7.5% இட ஒதுக்கீடு மசோதா : சாதித்த பழனிசாமி அரசு

Share

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, ஒருவழியாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்து விட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த செய்தி, அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வு எழுதிஇருந்த மாணவர்கள் நெஞ்சில் பால் வார்த்ததோடு, சில நாட்களாக, அரசியல் கட்சிகள் எழுப்பி வந்த கூக்குரல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அமலுக்கு வர, முந்தைய தி.மு.க., - காங்., அரசே காரணம் என, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வுடன் கூட்டுச் சேர்ந்து, அ.தி.மு.க., தான் நீட் தேர்வுக்கு சிகப்பு கம்பளம் விரித்து விட்டது என, தி.மு.க.,வும், சில ஆண்டுகளாக, பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, இந்த இரு கட்சிகள் மட்டுமின்றி, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கோரி வந்தன. தற்போதைய நிலையில், 'நீட்' தேர்வு ரத்து முடியாத காரியம் என்பதால், அதற்கான மாற்று வழியை முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு கண்டறிந்து, தற்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் - 2020, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழக அமைச்சர்களும் கவர்னரை சந்தித்து, மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இருப்பினும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில், கவர்னர் வேண்டுமென்றே தாமதம் செய்யவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தர வகை செய்யும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால், அது, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்ற சில மாநிலங்களும், இதுபோன்ற சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முன்வரலாம் என, கவர்னர் நம்பியதால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கருத்தை பெற விரும்பியுள்ளார்.

அதிலிருந்தே, இந்த விஷயத்தில், கவர்னர் எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டுள்ளார் என்பதை அறியலாம். மேலும், சொலிசிட்டர் ஜெனரலின் கருத்து பெறப்பட்ட மறுநாளே, சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.சட்ட விவகாரங்களை விரிவாக ஆராய்ந்து, சரியான கருத்தை தெரிவிக்க, சொலிசிட்டர் ஜெனரலுக்கு அவகாசம் தேவை என்பதால் தான், மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., அறிவித்துள்ளதுடன்,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும், இதை முன்னிலைப்படுத்த தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சிகளும், இது, தங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என, கூறி வருகின்றன. எது எப்படியோ, மொத்தத்தில் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, இது, ஒரு வரப்பிரசாதமாகும்.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில், 41 சதவீத மாணவர்கள் படிப்பதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பின், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், தமிழகமருத்துவக் கல்லுாரிகளில், ஒற்றை இலக்கத்தில் தான் சேர்ந்து வந்தனர். அதற்கு, தற்போதைய மசோதா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வந்தது. அந்த நிலைமையும் இனி மாறலாம். அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலைமை உருவாகும். மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சிகளும் உத்வேகம் பெறலாம்.அந்தப் பயிற்சிகளை, மேலும் தரமானதாக, கல்வித்துறை மாற்ற வேண்டும்.

தனியார் பயிற்சி மையங்களில், அதிக பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்கள், அரசின் நீட் பயிற்சி மையங்களில் அதிக அளவில் சேரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அரசு தரப்பில் அளிக்கும் பயிற்சியே சிறப்பானது என்ற நிலைமையை அரசு ஏற்படுத்த வேண்டும். இதுவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் விருப்பம். அதையும், அரசு நிறைவேற்றும் என, நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement