அறவே ஒழிக்க வேண்டிய 'ஆன்லைன்' சூதாட்டம்
தமிழகத்தில், ஒரு காலக்கட்டத்தில், லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள், லாட்டரி வாங்கி பாதித்து, நடுத்தெருவுக்கு வந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதன் விற்பனைக்கு, 2003ல், அதிரடியாக தடை விதித்தார்.
இருப்பினும், வெளிமாநில லாட்டரிகளை திருட்டுத்தனமாக விற்பதும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதும், அவ்வப்போது நடந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சமீப நாட்களாக, 'ஆன்லைன்' சூதாட்டங்கள் பிரபலமாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த நேரத்தில், இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், ஏராளமானவர்கள் பல லட்சம் பண இழப்பை சந்தித்ததோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடன் பிரச்னையை எதிர்கொள்ள முடியாதவர்கள், தற்கொலை செய்து கொள்வதும், சமீப நாட்களாக நிகழ்கிறது. மதிப்புமிக்க உயிரை பலி வாங்கும், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, சில அரசியல் கட்சிகள் தரப்பில், பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும், தற்போது தான், அதன் தீவிரம் அதிகமாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில், தேசிய அளவில், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குவதால், இத்தகைய சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தின் கதவுகளும் தட்டப்பட்டுள்ளன. வழக்கை விசாரித்த நீதிபதிகளும், ஆன்லைன் சூதாட்ட விளம்பங்களில் நடித்த, பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர், நடிகையருக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு, தெலுங்கானா மாநில அரசு தடை விதித்துள்ளது. அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான கோரிக்கை. இந்தச் சூழலில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்.,சும் அறிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்பு, சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், அந்த நல்ல காரியத்தை முதல்வர் செய்ய வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.கடந்த, 2003ல், லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட போது, அது தொடர்பான தொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக, குரல் எழுப்பினர்; போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், காலப்போக்கில், அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். ஏராளமான குடும்பங்களை சீரழித்து, சிலர் மட்டும் கோடி கோடியாக குவிப்பதும் தடைபட்டது.
தற்போது, இணையதளம் வாயிலாகவே, பல விதமான நடவடிக்கைகளும் நடைபெறுவதால், அவற்றை பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இணையதளத்தை பயன்படுத்தாத இளைஞர்கள் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. எனவே, அந்த இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து விடாமல் தடுக்க, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஏராளமானவர்களின் வாழ்க்கையை சீரழித்து, சில நிறுவனங்கள் மட்டும், ஆதாயம் பெறும் இத்தகைய கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, சைபர் கிரைம் போலீசார், ஆபாச படங்களை இணையதளம் வாயிலாக பார்ப்பவர்களை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் வாயிலாக கண்காணித்து, அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே முறையில், ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோரையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கேற்ப, தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள்.
ஒருவர் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், அந்தப் பணத்தை எளிதில் இழந்து விடும் வகையில், ஆன்லைன் சூதாட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனால், குடும்பத்தில் நடத்த வேண்டிய பிள்ளைகள் திருமணம், தொழில் துவங்க போட்டிருந்த திட்டங்கள் மற்றும் அவற்றுக்காக சேமித்து வைத்திருந்த முதலீடுகள் போன்றவை எளிதில் பறிக்கப்பட்டு, பலர் நடை பிணமாக, மன நலம் பாதித்தவர்களாக மாறும் சூழ்நிலை உருவாகிறது. மது, புகையிலை போன்ற கெட்ட பழக்கங்களை விட மிக மோசமானது, சூதாட்டம் என்ற மாயவலை. அந்த வலையில், எதிர்காலம் வீழ்ந்து வாழ்க்கையை தொலைக்காமல் மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். அதை, தமிழக அரசு விரைவில் செய்யும் என, நம்புவோமாக.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!