dinamalar telegram
Advertisement

'இப்ப பிரியாணி; பிறகு தண்ணி கூட கிடையாது!'

Share

'இப்ப பிரியாணி; பிறகு தண்ணி கூட கிடையாது!'


திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருத்தணி சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பாசறை பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, பயிற்சியைத் துவக்கி, வழிகாட்டி புத்தகம் கொடுத்தார். பயிற்சி முடிந்ததும், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு, தலைக்கு, 500 ரூபாயும், ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுத்தனர்.கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் இருவர், 'தேர்தல் வரும் வரை நமக்கு பிரியாணி கொடுப்பாங்க. அப்புறம், பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டாங்க...' என்றார். கூட்டத்தை ஏற்பாடு செய்த தி.மு.க., நிர்வாகி, நெளிந்தார்.

'திக்'குன்னு இருக்குமா உதயநிதிக்கு?தி.மு.க.,வில், கோவை, திருப்பூர் மாவட்ட இளைஞரணியில் காலியாக உள்ள அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான நேர்காணல், கோவையில், அக்கட்சி அலுவலகத்தில் நடந்தது; மாநில செயலர் உதயநிதி, நேர்காணல் நடத்தினார்.அவரை வரவேற்று, அலுவலகம் அமைந்துள்ள, வடகோவை மேம்பாலம் பகுதியைச் சுற்றிலும், 'போஸ்டர்கள்' ஒட்டப்பட்டிருந்தன. 'இளைஞர்களின் காவலரே; எங்கள் சின்னவரே; ஐந்தாம் தலைமுறை தலைவரே; இளம் சூரியனே; இளைஞர்களின் எழுச்சியே; நேர்மையின் நிதர்சனமே, மாணவர்களின் மணிமகுடமே; இளைஞர்களின் இதயத் துடிப்பே' என, பல்வேறு பட்டங்கள் சூட்டி, கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
அருகில் இருந்த பேக்கரியில் நின்றிருந்த ஒருவர், 'கட்சியில் பதவி வாங்குறதுக்கும், தக்க வைக்கறதுக்கும் எப்படியெல்லாம் புகழ வேண்டியிருக்குது... இந்த சின்னப்புள்ளைக்கே, இதையெல்லாம் பார்த்து, 'திக்'குன்னு இருக்கும் போல...' எனச் சொல்ல, பக்கத்தில் இருந்தவர், அதை ஆமோதித்தார்.

அமைச்சரும், வில்லுப்பாட்டும்!மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், இணைய வழியில், தமிழ் மரபுக் கலை விழா நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழ்ச் சங்கம், கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், அமெரிக்காவின் மில்வாக்கி தமிழ்ச் சங்கம் சார்பில், இவ்விழா நடந்தது.அமெரிக்கா தமிழ்ச் சங்கத்தினர் கண்டு களிப்பதற்காக, மதுரையில் இரவு முழுதும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு போன்ற, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நள்ளிரவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமார், 'எனக்கும், வில்லுப்பாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு. நான் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்த போது, குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற, புனே சென்றிருந்தேன். அப்போது கிராமியக் கலையாக 'தந்தனத்தோம் என்று சொல்லியே வந்தோம் ஐயா' என, வில்லுப்பாட்டு பாடினேன். அதுகுறித்து, விளக்கமாகப் பேசினேன். அனைவரும் பாராட்டினர்' என்றார்.
'போதும் சார்... கலைஞர்களுக்கு நேரம் கொடுங்க...' என, நிர்வாகி ஒருவர் மெலிதாகக் குரல் கொடுத்தார். நல்ல வேளையாக, இணையத்தில் அது ஒளிபரப்பாகவில்லை!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    சிறு இடம் கிடைத்தால் போதுமே, ‘நானும் விவசாயி, நானும் கலைஞன், நானும் ஜல்லிக்கட்டு தெரிந்தவன் ‘ என்று தம்பட்டம் அடித்துக்கொள்வார்களே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement