dinamalar telegram
Advertisement

இந்திய பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் 'கே'

Share

இயற்கை சீற்றம், வறட்சி, போர், வறுமை, வேலையின்மை, அதிக உற்பத்தி, பற்றாக்குறை, அரசுகளின் நிர்வாக சீர்கேடு என நாட்டுக்கு நாடு, சூழ்நிலைக்கு தகுந்தவாறு, பொருளாதார வீழ்ச்சிகள் அல்லது மந்தநிலை ஏற்படுவது உண்டு. பல சமயங்களில், பொருளாதாரம், தன்னைத் தானே மீட்டுக் கொள்ளும். பல சமயங்களில், அரசுகள் அதற்கான முனைப்பில் இறங்கும்.

'வி' நல்லதுபொருளாதார மீட்சியை, 'வி, யூ, டபிள்யூ ஷேப்' என, பல வடிவங்களில் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு வடிவமும், பொருளாதார மீட்சியின் ஒரு தன்மையை சொல்லும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலை அடைந்து, பின் மீட்சியுறும் போது, அது, 'வி ஷேப்' என்று குறிப்பிடப்பட்டால், அது வீழ்ந்த சில காலங்களிலேயே மீண்டும் மேலெழுந்து விட்டது என அர்த்தம். இதில், உடனே மீள்வதால், பொருளாதார பாதிப்பு காலம் குறைவு என்று கணிக்கப்படுகிறது. இதை விரைவான பொருளாதார மீட்சி என கொள்ளலாம்.

அதுவே, யூ ஷேப் என்றால், பொருளாதாரம் மந்தநிலை அடைந்து, அது மீள்வதற்கு கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டதாக கருதலாம். இதில், பொருளாதாரம் உடனே மீட்சி பெறாததால், பாதிப்பின் அளவீடு, கொஞ்ச காலம் இருந்திருக்கிறது என கொள்ளலாம்.

அதே நேரம், டபுள்யூ ஷேப் என்றால், பொருளாதாரம் வீழ்ந்து, மீட்சி பெறும் நேரத்தில், மீண்டும் வீழ்ந்து எழுவதே 'டபுள்யூ ஷேப் ரெக்கவரி'. இதற்கு, அமெரிக்காவில், 1979ல் எண்ணெய் மற்றும் பணவீக்க நிலைமைக்கு பின், மீண்டும் 1980, 81ல் மந்தநிலை உருவானதை உதாரணமாக கொள்ளலாம்.

சரி, இந்திய பொருளாதாரத்தின் மீட்சியும், பிற நாடுகளின் மீட்சியும் தற்போது எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா?

உயிர் பிழைத்தல்இந்தியாவில், கொரோனா பெருந்தொற்று துவங்கி, ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, நாடு முழுதும் பல்வேறு கட்டங்களாக போடப்பட்ட ஊரடங்கு அமலும், தளர்வுகளும், 135 கோடி இந்தியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது என்றால் மிகையில்லை.காரணம், நாட்டில் கொரோனா வேகமாக பரவத் துவங்கியபோது, மக்களிடம் வாழ்வு குறித்த அச்சம் இருந்தது. '2020ம் ஆண்டில், நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி நினைக்காதீர்கள். உயிர் பிழைத்து இருப்பதே சாதனை' என்றெல்லாம் சிந்தனை விதைக்கப்பட்டது.

தாராள முதலாளிகள்பெருந்தொற்றால், வேலை, தொழில் இழந்த அடித்தட்டு, நடுத்தர குடிமக்களுக்காக, எல்லா உலக நாடுகளுமே, தங்கள், ஜி.டி.பி.,யில், 10 முதல், 20 சதவீதம் அளவிற்கு, நிவாரணம் மற்றும் சலுகை உதவிகள் அளித்தன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஏப்ரல், மே மாதங்களில் பெருந்தொற்று பயம் போய், தொழில் மற்றும் வேலையை தக்க வைத்துக் கொள்ளும் பயம் சூழ்ந்தது. பின், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தளர்வுகள் துவங்கியபோது, தனியார் துறை பணியாளர்கள் சலுகை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் இழப்பு, வேலை இழப்பு என்று பல வகையிலும் பாதிக்கப்பட்டனர். கடந்த ஏப்ரலில், நாட்டில் இதுவரை இல்லாத வகையில், வேலைவாய்ப்பின்மை, 23 சதவீதம் என்ற உச்சம் தொட்டது.

பெருந்தொற்று ஊரடங்கால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. வங்கிக்கடன், மாதத் தவணை, கட்டட வாடகை, ஊழியர்களை தக்க வைப்பது போன்றவை மிகப்பெரிய சவாலாக இருந்தன. பல சிறுதொழில், நடுத்தர நிறுவனங்களின் முதலாளிகள், தங்கள் சொத்துகளை விற்றும், அடமானம் வைத்தும், வங்கியில் மேலும் கடன் பெற்றும், ஊரடங்கில் வீட்டில் இருந்தபோதும், தங்கள் நிறுவன ஊழியர்களை கைவிட்டு விடாமல்,குறிப்பிட்ட சம்பளம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் காத்தனர்.

பலர், தாங்கள் பார்த்து வந்த சிறு தொழில்களை மீட்க முடியாமல், விட்டுவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர். சுற்றுலா, ஓட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில் துறைகள் இன்னும் மீளவில்லை. ஆனால், பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பூகம்பம், மக்கள் நெஞ்சங்களில் மன உறுதியையும், நம்பிக்கையையும் விதைத்தது. இதுவும் கடந்து போகும் என பலரும் காலத்திற்காக காத்திருந்தனர்.

ஒருபுறம் வேகம்இது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் இந்திய பொருளாதாரம், சில துறைகளில் மட்டும் அசுர வேகம் எடுத்ததை காண முடிந்தது. பெருந்தொற்றின் சீற்றம் அடங்கி, ஊரடங்கு தளர்வுகள் துவங்கியபோது, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா கொண்டாட்டங்கள், தீபாவளி பண்டிகைகள் வரிசை கட்டின. அந்த சமயங்களில், அமேசான், மிந்ரா, பிளிப்கார்ட் போன்ற, 'ஆன்லைன்' வர்த்தக வலைதளங்கள் ஐந்தே நாளில், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பார்த்தன. அதன் உச்சகட்டமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடியை கடந்து, ஆச்சரியமளித்தது.


பெருந்தொற்று காலத்திலும், அதற்கு பின்னும், வேளாண் தொடர்புடைய தொழில்களில் எந்த குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது தடுமாறினாலும், விட்ட சந்தையை மீண்டும் பிடித்தன. நோய் எதிர்ப்பு சக்தி உணவு பொருட்களுக்கான உற்பத்தி, விற்பனை அதிகரித்தது.

அடுத்ததாக, ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், தங்கம் விலை உயர்ந்தது. பங்குச் சந்தைகள் உயர்வை நோக்கிச் சென்றன. நிலம் விற்பனை அதிகரித்தது. இதில், விவசாய பூமி விற்பனை பல இடங்களில், 30 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்திருக்கிறது.

அதே சமயம், புதிதாக கட்டி, விற்பனைக்காக காத்திருக்கும் பிளாட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. நாடு முழுதும், 2024ம் ஆண்டுக்கான மக்கள் தேவைக்கு, தற்போதே பிளாட்கள் கட்டி விற்க தயார் நிலையில் இருப்பதால், ஏகப்பட்ட தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டும், அவற்றின் விற்பனை இன்னும் விறுவிறுப்பை எட்டவில்லை.

'கே' எச்சரிக்கைஇது, ஒரு தரப்பு மக்களிடம் பணம் அதிகரித்திருக்கிறது. மற்றொரு தரப்பு மக்கள், பணமின்றி தவிக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.இந்த சம்பவங்கள், நாட்டின் பொருளாதார மீட்சி, கே ஷேப்பில் செல்வதாக, பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதாவது, 'கே' வடிவத்தில், ஒரு அம்பு மேற்புறமும், ஒரு அம்பு கீழ்ப்புறமாகவும் செல்வது போலவே, நாட்டின் ஒரு தரப்பு மக்களின் செல்வ வளம் மேல் நோக்கி உயர்ந்தும், மற்றொரு தரப்பு மக்களின் பொருளாதாரம், கீழ் நோக்கி செல்வதையும் குறிக்கிறது.

கே ஷேப் பொருளாதார மீட்சி என்பது, ஒரு ஆபத்தின் அறிகுறி என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பொருளாதார இடைவெளியை விரைவில் சரி செய்யாவிட்டால், அது சமூகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த கே ஷேப் பொருளாதார மீட்சி, இந்தியாவிற்கு மட்டும் ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்ல, அமெரிக்கா, ஐரோப்பா துவங்கி, பல உலக நாடுகளும், கே ஷேப்பிற்குள் மாட்டிக் கொண்டுள்ளன.

திடீர் விலையேற்றம்இது ஒருபுறமிருக்க, நாட்டில் நிலவும் மூலப்பொருள் திடீர் விலையேற்றம், நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் துறையை முடக்கிப் போட்டுள்ளது. ஸ்டீல் உட்பட முக்கிய மூலப்பொருட்கள் சீனாவிற்கு ஏற்றுமதியாவது அதிகரித்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் அவற்றின் விலை திடீரென உயர்ந்துள்ளது.இதனால், பெரிய நிறுவனங்களிடமும், மத்திய, மாநில அரசுகளிடமும் 'ஆர்டர்' பெற்றுள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், தாங்கள் உறுதி அளித்த விலையில் பொருட்கள் விற்க முடியாமல் தடுமாறுகின்றன. ஒப்பந்தப்படியான விலைக்கு விற்கும்பட்சத்தில், நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.

திருச்சி உட்பட பல நகரங்களில் இயங்கும் எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்கள், 'மூலப்பொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப, விற்பனை பொருளின் விலையை அதிகரித்து தர வேண்டும்' என, அரசு நிறுவனங்களுக்குஅவசர கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த சூழலில், இந்தியாவில் இருந்து ஸ்டீல் உட்பட மூலப்பொருள் ஏற்றுமதி, சீனாவுக்கு அதிகரித்திருப்பதன் பின்னணியையும் நாம் அலசி பார்க்க வேண்டும். கொரோனாவுக்கு பின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், சீனாவில் இருக்கும் தங்கள் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு இடப்பெயர்ச்சி செய்வதில் முனைப்பு காட்டின. அதில் முதல் சாய்ஸ் இந்தியா தான்.

எம்.எஸ்.எம்.இ., காப்பாற்றணும்இந்தியாவில் இருந்து, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், அதனால் நம் தொழில் வளம் பெருகும். ஆனால், உள்நாட்டில், மூலப்பொருள் தேவை அதிகமாக இருக்கும்போது, இங்கே விலை ஏற்றமும், சீனாவிற்கு ஏற்றுமதியும் நடந்தால், இந்திய எம்.எஸ்.எம்.இ., தொழில் துறை மீண்டும் முடங்கும் அபாயம் உருவாகும்.

சரி, ஸ்டீல் உட்பட மூலப்பொருள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்து நிலைமையை சமாளிக்கலாம் என்றால், உலக வர்த்தக ஒப்பந்த அடிப்படையில், சீன இறக்குமதிக்கு, 'கவுன்டர்வெய்லிங் டூட்டி' - 20 சதவீதம் போடப்படுகிறது.அதேபோல, கன்டெய்னர் பற்றாக்குறையும், இந்திய தொழில் துறையை அச்சுறுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து, நாட்டு மக்களை காப்பாற்றி, தொழில்கள், வேலைவாய்ப்புகளை வேகமாக மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, தற்போது எழுந்துள்ள கே ஷேப் பொருளாதார மீட்சி நிலை மாறவும், மூலப்பொருள் விலையேற்றம், எம்.எஸ்.எம்.இ., தொழில் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளையும், அடுத்து வரும் சில வாரங்களில் விரைவாக களைய வேண்டும்.அதற்கு சிறப்பு குழு அமைத்து, உடனடியாக கவனம் செலுத்தினால் மட்டுமே, இந்திய தொழில் துறை அனைத்து தரப்பிலும் சரிசமமாக மேலெழும். அப்போது தான், எல்லா தரப்பு மக்களும் பலன் அடைவர்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
தொடர்புக்கு:இ - மெயில்: karthi@gkmtax.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (7)

 • sankaseshan - mumbai,இந்தியா

  கொ ராணா பிரச்னை உலகம் தழுவியது இந்தியா விதிவிலக்கல்ல அரசு பாதிக்க பட்டோருக்கு பல சலுகைகள் வழங்கின இது தொடர்கிறது அனாவசியமாக பீதியை கிளப்ப வேண்டாம் வரும் பட்ஜட்டில் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பலாம் .

 • periasamy - Doha,கத்தார்

  எப்படி நாட்டின் பொருளாதாரம் முன்னேற முடியும்

 • Elango - Kovai,இந்தியா

  Job orders சென்ற முறை இருந்ததில் பாதி தான் இப்போது கிடைக்கிறது. அரசு எங்களை போன்ற சிறு தொழில் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகள் போல உதவினால் நல்லது.. (சம்பள பிடித்தம் செய்யவில்லை, நஷ்டத்தில் தான் இயங்குகிறோம்)....

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  தவறான கணிப்பு ..மத்திய அரசு முதலில் ஸ்டிமுலுஸ் என்று சொல்ல கூடிய பொருளாதார மீட்சிக்கு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தான் சலுகை வழங்கியது ..அணைத்து துறைகளுக்கும் சலுகை வழங்கி உள்ளது ..கடந்த மாத நிலவரப்படி கிட்டத்தட்ட அறுபதிந்தாயிரம் கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீடு கிடைத்து உள்ளது ..வேலை வாய்ப்பு பற்றாக்குறையும் கணிசமாக குறைந்துள்ளது ..இதை தொழிலாளர்கள் வருங்கால வாய்ப்பு நிதி ஆணையத்தின் தரவுகளும் உறுதி படுத்தி உள்ளன ..

 • ஆப்பு -

  K மாதிரி பொருளாதார வளர்ச்சி. இதை பொருளாதார நிபுணர்கள் தனியா சொல்லணுமா? ஒருபக்கம் 8000 கோடிக்கு சொகுசு விமானம், எம்.பி க்களுக்கு புதிய பங்களாக்கள், புது பார்லிமெண்ட்னு ஜமாய்க்குறாங்க. அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டு காசு பாக்குறாங்க. மறுபக்கம் மக்களை முடக்கி, இருக்குற வேலையையும் பறித்து, ஆளில்லா வண்டி ஓட்டி, பெட்ரோல் விலையை ஏத்தி மக்களை வதைக்கிறார்கள். கொலை, தற்கொலை, கொள்ளைக் கேசுகள் பெருகி வருவது மற்றொரு அறிகுறி.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement