மனிதன் உயிர் வாழ, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மூளை என, ஐந்து உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த ஐந்து உறுப்புகளும் தாயின் கருவறையில் மூன்றாவது மாதம் உருப்பெற்று, ஒன்பது மாதங்களில் முழுமையான வளர்ச்சியைப் பெற்று விடுகின்றன.
இதில் ஒரு உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும், மற்ற உறுப்புகளில் தாக்கம் இருக்கும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது இதயத்தை தாக்குகிறது. நாம் உண்ணும் உணவு, இரைப்பையில் செரிவடைந்து, குளூக்கோஸ், புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், சோடியம், பொட்டாசியம், கார்பனேட், வைட்டமின்களாக ரத்தத்தில் கலந்து விடுகிறது உடலில் உள்ள திசுக்களுக்கு இந்த சத்துக்கள் சென்று, மெட்டபாலிசம் என்ற ஜீவ பரிமாண சக்தியையும் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது. ரத்தத்திலுள்ள கழிவுகளையும், நச்சுகளையும் சிறுநீரகம் வடிகட்டி, வெளியேற்றி விடுகிறது. சிறுநீரகம், அவரைக்கொட்டை போன்ற உருவம் கொண்டது. பத்து செ.மீ., அளவுக்கு வயிற்றுப் பகுதியில் இருக்கும். சிறுநீரகத்தின் முக்கிய உயிர் நாடி, நெப்ரான் என்றழைக்கப்படுகிறது. இதன் குழாய், தேனீர் கோப்பை போன்ற வடிவத்தில் வளைந்து காணப்படும். இதிலிருந்து, இரண்டு செ.மீ., நீளமுள்ள குழாய்கள், சிறுநீரகப் பையில் சேர்கின்றன.
சிறுநீரகம் சிதைகிறது
இந்த நெப்ரான்கள், 10 லட்சத்திற்கும் மேல் சிறுநீரகத்தின் உள்ளே தென்படுகின்றன. இந்த சிறிய ரத்தக் குழாய்கள், கொத்து கொத்தாக படர்ந்திருக்கும். இந்த ரத்த குழாய்களால், ரத்தத்தில் உள்ள ஒரு நானோ கிராம் சற்றே அதிகமாக இருக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டணுக்களை வெளியேற்ற முடியாது. காரணம், இவற்றில் உள்ள துவாரம், ஒரு நானோ கிராம் அளவுக்கு தான் இருக்கும். இதன் மூலம், குளூக்கோஸ் மற்றும் தாது பொருட்கள் வெளியேறி, கீழேயுள்ள குழாய்களில் கிரகிக்கப்படுகிறது. மீதி, சிறுநீரகப் பையில் வந்து வெளியேறுகிறது.சிறுநீரகத்தை பாதிக்கும் நோய்களில் முக்கியமானவை, சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, காரணம் அறியாத சிறுநீரக வியாதி. முக்கியமானது சர்க்கரை வியாதி. இது உடலில் நீண்டகாலமாக, மவுனமாக பாதிப்பை ஏற்படுத்தி, எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது. சர்க்கரை வியாதியால், கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, வடிகட்டும் வேலை தடைபடுகிறது. சிறுநீரகம் சிதைகிறது. இந்த சிதைவால், சிறுநீரகத்தில் ரெனின் என்ற வேதிப் பொருள் வெளியாகி, ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. இந்த உயர் ரத்த அழுத்தத்தால், இதய வீக்கம் ஏற்படுகிறது அல்லது இதயம் செயலிழக்கிறது அல்லது மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் சம்பவிக்கிறது.
சிறுநீரகத்தின் பரிசோதனைகள்:
*சிறுநீர் ஆல்புமின் என்ற வெண் புரதம் அளவைக் கண்டறிதல்.
* யூரியா என்ற வேதிப்பொருளின் அளவைக் கண்டறிதல்.
* கிரியாட்டின் அளவைக் கண்டறிதல்.
* ஜி.எப்.ஆர்., என்ற பரிசோதனை.
நலிவடைந்த சிறுநீரகத்தை சரி செய்ய, உணவில் உப்பு மற்றும் புரதம், பொட்டாசியம் என்ற தாதுப் பொருட்களை குறைத்து அளவாக உட்கொள்ள வேண்டும்.இவை சிறுநீரகத்திற்கு ஊறு விளைவிக்கும்.நலிவடைந்த சிறுநீரகத்தில் பாஸ்பரஸ் என்ற தாதுப்பொருள் அதிகமாகிறது. காரணம், நலிவடைந்த சிறுநீரகத்தால் இதை வடிகட்டி வெளியேற்ற முடியாது. இதனால் இது ரத்தத்தில் அதிகமாகிறது. இந்த பாஸ்பரஸ், கால்சியத்துடன் இணைகிறது. இதனால் கால்சியம் குறைகிறது. இந்தக் குறைபாட்டை சரி செய்ய கால்சியம், வைட்டமின் டி3 இரண்டும் தேவைப்படுகின்றன. சிறுநீரகம், எரித்ரோபோய்ட்டின் என்ற உசுப்பு நீரை சுரக்கிறது. இதன் வேலை, எலும்பு மஜ்ஜையில் ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது. நோயுள்ள சிறுநீரகத்தில், எரித்ரோபோய்ட்டின் குறைந்து அனீமியா என்ற ரத்தசோகை உண்டாகிறது. வாழ்நாள் முழுக்க, மைக்ரோ நொடி கூட பிசகாமல் வேலை செய்யும் சிறுநீரகம், வடிகட்டும் வேலையை நிறுத்தி விட்டால், உயிர் வாழ்வது கடினம். மரணம் ஏற்படும். மரணத்தை தடுக்க டயாலிசிஸ் செய்ய வேண்டும்.
டயாலிசிஸ் எப்போது?
பழுதடைந்த சிறுநீரகத்தின் வேலையை செய்வதற்கு, 'டயாலிசிஸ்' என்ற கருவியை உடலுக்கு வெளியே வைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தி திரும்பவும், ரத்தத்திற்குள் செலுத்தி உயிர் காக்கப்படும். இரண்டு வகை டயாலிசிஸ் உண்டு. பெரிடோனியல் மற்றும் ஹீமோ டையாலிசிஸ்டயாலிசிஸ், வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு ஒரு நாளுக்கு, 10 ஆயிரம் ரூபாய். இது ஒரு தற்காலிகமான உயிர்காக்கும் சிகிச்சை தான். இதனால், உயிரை எந்தவித ஊடுருவல் சிகிச்சையுமின்றி காப்பாற்றலாம்; முக்கியமான இறுதி தீர்வு, சிறுநீரக மாற்று சிகிச்சை தான். நீண்ட நாள் சர்க்கரை வியாதியை, தகுந்த மருந்தால், கட்டுப்படுத்தா விட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடுகிறது.கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தத்திற்கு சரியான சிகிச்சை எடுத்து கொள்ளாவிடில், சிறுநீரகம் பழுது அடையும்.இவை தான், இரண்டு முக்கிய காரணங்கள். சிறுநீரக தானம் பெற்று வாழ்வது, எளிதான காரியம் அல்ல.தானம் பெற்றவரின் உடல், மாற்று சிறுநீரகத்தை நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம். இதைத் தடுக்க, மிகவும் விலை உயர்ந்த, சைக்ளோஸ்போரின் என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். இதற்குப் பக்க விளைவுகள் அதிகம். அதைச் சகிக்க வேண்டும். மேலும், தானம் பெற்ற சிறுநீரகத்திற்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். எந்த நேரத்தில், எப்படிப்பட்ட நோய் வரும் என்று கூற இயலாது. இதற்கு மருத்துவர் கண்காணிப்பு அவசியம். 20 வயது முதல், 50 வயது உள்ளவர்களுக்கு, சிறுநீரக மாற்று சிகிச்சை, நல்ல பலனைக் கொடுக்கும். காரணம், இந்த வயதில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எந்தவித குறைபாடும், நோயும் இருக்காது. வயதானோருக்கு, அதாவது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மாற்று சிகிச்சை செய்யும் முன், அவர்களை துல்லியமாகப் பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய வீக்கம், சில உறுப்புகள் செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டிருக்கலாம்.
அரசியல் உளைச்சல்
எல்லாமே சீராக இருந்தால், சிறுநீரக மாற்று சிகிச்சை சாத்தியம்.அதுவும், சிறுநீரக தானம் வழங்கியவர்கள் இளம் வயதினராக, நெருங்கிய உறவினராக இருப்பது சிறந்தது. முதியோருக்கு, இள வயதினரின் சிறுநீரகம் பொருத்துவது சரியானதாக இருக்கும். அப்படிச் செய்தாலுமே, மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியம்.மாற்று சிறுநீரக சிகிச்சை பெற்ற, இரண்டு வி.ஐ.பி.,க்களில் ஒருவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர், முன்னாள் கவர்னர் டாக்டர் சென்னா ரெட்டி. இருவருக்குமே, 65 வயதுக்கு மேற்பட்டே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் கொடுத்தவர், அவருடைய அண்ணன் மகள். இவருக்கு, தினமும் 24 மணி நேரமும், டாக்டர்கள் குழு, இவர் வீட்டிலும், அலுவலகத்திலும் தங்கி கண்காணித்து வந்தனர். சர்க்கரை நோயால் கடும் பாதிப்படைந்து இவர் சிறுநீரகம் செயலிழந்தது.
சர்க்கரை நோய் ஏற்பட்டதற்குக் காரணம், அரசியல் உளைச்சல்.டாக்டர் சென்னா ரெட்டிக்கு தானம் வழங்கியவர், அவர் மகன். சென்னா ரெட்டியும், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். காங்., கட்சி தலைவராக இருந்து, ஆந்திராவில் கோலோச்சிய இவருக்கும், அரசியல் உளைச்சல் தான் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தியது.தமிழ்த் திரை உலகில், ரஜினி தொடர்ந்து, 45 ஆண்டுகள் புகழ் பெற்று, உச்சநிலையில் இருக்கிறார். சிறந்த ஆன்மிகவாதி. மேக்கப் இல்லாத உண்மை தோற்றத்தோடு வலம் வருகிறார். கறுப்பு கண்ணாடி, கம்பி மீசை, தலையில் பொய் மயிர் என எதுவும் இல்லாமல் இருக்கிறார். தனக்கிருக்கும் உடல் உபாதை குறித்து, வெளிப்படையாகத் தெரிவித்து விட்டார்.
நேர்மையாளனாக இருப்பது வாழ்க்கையில் கடினம். அப்படி இருக்க ஆசைப்படும் ரஜினி, அரசியலில் நுழைந்தால், தேவையில்லாத மன உளைச்சல்கள் ஏற்படும். பொய்மைவாதிகளுடன் பழக நேரிடும். அவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு, இவரால் ஈடுகொடுக்க முடியாது. அந்த உளைச்சல்களை, இவர் மனம் ஏற்காது; இதனால் உடல் கடுமையாக பாதிப்படையும்.எனவே, அரசியலிலிருந்து விலகி இருப்பதே, ரஜினிக்கு நல்லது. அவரைச் சிறந்த மனிதராக, நல்ல திரைப்பட நடிகராகவே பார்ப்போம். அவர் நீடூடி வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம் அல்லவா! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்... அரசியலுக்கு இழுக்கக் கூடாது. புரிந்ததா!
பேராசியர். மருத்துவர். சு.அர்த்தநாரி., எம்.டி., டி.எம்.,
இருதய நோய் ஊடுருவல் நிபுணர்
கைபேசி: - 9884353288
மின்னஞ்சல் - prabhuraj.arthanaree@gmail.com
ரஜினி யாருக்கு வேணுமுன்னு பெயர் வெளியிட்டு விடுங்கள் ..நீங்கள் பாட்டுக்கு நமக்கு வேண்டும் என்று சொன்னால் ஆனதில்லை தமிழக மக்களுக்கும் என்றாகிவிடும் .. பலரில் சிலர் பைத்தியம் ..அவர்களுக்கு பெயர் ரசிகர்கள் .. அவர்களுக்கு உதவ ஊடகங்கள் .. இருந்தாலும் பலரும் இதற்க்கு உடன்படுவத்தில்லை .. சிலர் அதிலும் வெகுசில ரசிகர்கள் மனநல பாதிப்பின் வெளிப்பாடாக இருப்பது உண்மை ..