dinamalar telegram
Advertisement

மதிமயக்கத்திற்கு பெயர் தான் விதியா?

Share

தண்டனைக்கு பயந்து மட்டுமே, தப்பு செய்யாதவன் மனிதனில்லை; மனசாட்சிக்குப் பயந்து தப்பு செய்யாமலிருப்பவனே, மனிதனாக வாழத் தகுதியானவன். அத்தகைய மனிதர்களுக்கு, இந்த சமுதாயத்தில் பஞ்சம்ஏற்பட்டு விட்டது

.நம் உயிர் நிலையானதில்லை. வாழ்க்கையில் வரும் இன்பமும், துன்பமும் கூட நிரந்தரம்இல்லை என்ற உண்மையை உணர்ந்த ஒருவனுக்கு, அடுத்தவன் உயிரைப் பறிக்கும் எண்ணம் எழ வாய்ப்பில்லை.

தயக்கம் ஏன்?அடுத்தவன் உயிரைப் பறித்து விட்டு, தான் மட்டும் இந்த உலகத்தில் கால காலமாக சுகத்தை அனுபவித்து நிலைத்திருக்கப் போவதாக நினைப்பவன், சட்டத்தின் பிடியில் சிக்கி, சாதாரண வாழ்க்கை சுகத்தையே இழக்கிறான்.பல சந்தர்ப்பங்களில், ஆசை அதிகப்படியான நேரம் பணியாற்றும் போது, அறிவு ஓய்வெடுத்து விடுகிறது.

உங்களுக்குப் பிறந்த குழந்தைகள், உங்கள் மூலமாக இந்த உலகுக்கு வந்தவர்கள் தானே தவிர, உங்களுக்கு சொந்தமானவர்கள் இல்லை. அவர்களது வாழ்க்கையை, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, உங்கள் திசையில் இழுத்துச் செல்ல முயல்வது, மனிதாபிமானமற்ற செயல்.சிறு வயதிலிருந்தே அவர்கள் விருப்பப்பட்டு, கேட்டதையெல்லாம், வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த உங்களுக்கு, அவர்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையுடன் வாழ அனுமதிப்பதில் மட்டும் தயக்கம் ஏன்?

தனக்கு ஏற்ற வகையில் சிறந்த தொழிலையும், வாழ்க்கைத் துணையையும் அவர்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி, உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவில்லை என்று நீங்கள் குற்றம்சாட்டும் அதே நேரத்தில், அந்த விதத்தில், அவர்களை வளர்த்த நீங்களும், அதற்கு காரணம் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறி விடுகிறீர்கள்.

வாழ்க்கைத் தரத்திலும், கல்வியறிவிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் மிக அதிக அளவில் வளர்ந்து விட்டதாக பெருமைபட்டுக் கொள்ளும் நாம், நம் பிள்ளைகளை அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்காமல், மனதளவில் பின் தங்கி தான் இருக்கிறோம்.இந்த தருணத்தில் தான், நம் வாழ்க்கையின் நிலையற்ற தன்மை நம் நினைவுக்கு வர வேண்டும்.எதுவும் நிரந்தரமில்லை; இதுவும் கடந்து போகும் என்ற உண்மை புலப்பட வேண்டும்.

பெற்றோர் தேர்ந்தெடுத்து, நடத்தி வைத்த திருமண தம்பதியர் அனைவரும் மனமொத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அல்லது காதல் திருமணங்கள் எல்லாமே நிலைத்து நிற்கிறது என்று பொதுவான முடிவுக்கு வர இயலாத அளவுக்கு, நீதிமன்றங்களில் இரு வகை திருமண ஜோடிகளும் வரிசை கட்டி நிற்கின்றனர்.நிச்சயதார்த்தத்தில் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி, சம்பந்தம் பங்கேற்றவர்கள் கல்யாணத்துக்கு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அநாகரிக வார்த்தைகள் எனும் சேற்றை வாரி பூசிக் கொள்கின்றனர்.

கவுரவக் கொலைகடற்கரையில் தனிமையில் உட்கார்ந்து, மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர்கள், திருமணத்துக்குப் பின் வக்கீல்கள் மூலமாக பேசிக் கொள்கின்றனர்.அப்படி இருக்கும் போது, தன் பெண் விரும்பிய ஒருவனுடன் வாழ அனுமதிக்காமல், அவனை கொலை செய்து சிறைக்குப் போவதுடன், பெண்ணின் வாழ்வில் ஒரு தேவையற்ற களங்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், என்ன கவுரவத்தை, அவர்கள் நிலை நாட்டிவிடப் போகின்றனர்...அந்த கொலைக்கு கவுரவக் கொலை என்றும், ஆணவக்கொலை என்றும் பெயர் சூட்டல் வேறு.

வெறித்தனம்எல்லா கொலைகளுக்குமே மனிதனின் வெறித்தனம் தான் காரணமாகிறது. அப்படியொரு வெறியின் உச்சகட்டம் தான், அகோரமாக அரங்கேற்றப்படும் ஆணவக்கொலைகள். கொலைகளுக்கு மற்றொரு காரணமாக திகழ்வது, சொத்து பிரச்னைகள். தங்களுக்குப் பின் வரும் வாரிசுகள் சுகமாக வாழட்டும் என்ற பேராசையில், மூதாதையர் தேடி வைத்து போன சொத்துக்கள், பல இடங்களில் அவர்களுக்குள் பகையை மூட்டிவிடவும், ஒருவரை ஒருவர் பலியிட்டுக் கொள்ளவும் தான் பயன்படுகிறது.

மாவீரன் அலெக்சாண்டர் தன் சாவிற்கு முன்னதாகவே, 'நான் இறந்த பின், என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி வைத்து, அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துப்போக வேண்டும்' என்று கட்டளையிட்டிருந்தாராம்.உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்ட வர முயற்சித்து, அதில் பெருமளவில் வெற்றியும் கண்ட அலெக்சாண்டர் கூட, தன் இறுதிப்பயணத்தின் போது, எதையும் எடுத்துச் செல்லவில்லை; எல்லாவற்றையும் இவ்வுலகில் விட்டுச் செல்ல வேண்டி தான் இருந்தது என்பதை, மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணினான். எல்லாருக்குமே மரணத்தின் பிடியிலிருக்கும் போது தான் மனக்கதவு திறக்கிறது. அதனால் தான் சட்டம் கூட, மரண வாக்குமூலத்துக்கு மதிப்பு கொடுக்கிறது.

மனம் திறந்து பேசலாமேமனிதர்கள் எல்லாருமே மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் தான். தண்டனை நிறைவேற்றப் படும் நாள் தான் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.மரணத்தின் பிடியில் இருந்து மனதை திறப்பதை விட, என்றோ ஒரு நாள், சற்றும் எதிர்பாராத தருணத்தில் நிகழ இருக்கும் மரணத்தை, எதிர்நோக்கியிருக்கும் நாம், எல்லாரிடமும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் பேசலாமே.

அப்படி பேசுவதால், கள்ளம் கபடமில்லாத புனித ஆத்மா என்ற நற்பெயருடன், சிரமங்களையும், பகையையும் சந்திக்காத வாழ்க்கையை வாழும் வாய்ப்பிருக்கிறது.நாம் பிறக்கும் போது, நம்முடன் இருந்த பலர் இப்போது இல்லை; இப்போது இருப்பவர்களில் சிலர், நாம் இறக்கும் போது, நம்முடன் இருப்பதும் நிச்சயமில்லை.

பிடிவாத குணம்நமக்கு முன் இந்த உலகுக்கு வந்தவர்களில் சிலர், நமக்கு பிறகும் இவ்வுலகில் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நமக்குப் பிறகு இந்த உலகுக்கு வந்தவர்களில் கூட, சிலர் நமக்கு முன்பே போய் விட்ட அவலத்தையும் நாம் பார்த்து விட்டோம்.இவையெல்லாம் நம் மனதை பக்குவப்படுத்தவில்லை; நம் ஆசைக்கு அணை போடவில்லை என்றால், அதற்குக் காரணம் சிந்திக்க இயலாத நம் அறிவீனம்; சிந்திக்கத் துணியாத நம் கோழைத்தனம்; சிந்திக்க மறுக்கும் நம் பிடிவாத குணம்.நம் இந்த பலவீனத்துக்கு நாம் பலியாவதுடன், மற்றவர்களையும் பலியிட்டு கொண்டிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

நம் இந்த மதி மயக்கத்துக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் தான் விதி. அந்த விதியின் முன் பல உயிர்கள், பொம்மையாக நமக்குத் தெரிகிறது. பிறப்பதற்கு முன் நாம் எங்கிருந்தோம்; இறந்த பிறகு நாம் எங்கு போகப் போகிறோம் என்பது, நமக்கு தெரியாத மர்மம்.

கடிவாளம்ஆதாரமே இல்லாவிட்டாலும், முன் ஜென்ம பாவம் தொடர்ந்து வரும் என்ற ஒரு அச்சம்; மறு ஜென்மம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை. இந்த இரண்டுமே ஏதோ ஒரு வகையில் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள, தவறான வழியில் செல்லாமல் தடுக்கும் கடிவாளமாக இருக்கிறது.இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், கல்வியறிவே இல்லாத பலரிடம், இந்த மனப்பக்குவம் இருக்கிறது.

படித்த மேதாவிகள் பலரிடம் அது இல்லை. அதற்குப் பதிலாக, நமக்கு புத்தி சொல்லும் தகுதி, யாருக்குமே இல்லை என்ற மேதாவித்தனம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. படிப்பறிவில்லாத பலர், தங்கள் வாழ்க்கை போராட்டத்தில் துன்பங்கள், துயரங்கள், அவமானங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடந்து சென்று கொண்டிருப்பதை காண்கிறோம்.

கல்வியின் உச்சத்தைத்தொட்டு விட்ட சிலர், தன் வாழ்க்கையில் சந்தித்த சிறு தோல்வியை கூட தாங்கிக்கொள்ள இயலாமல், முடிவைத் தேடிய கோழைத்தனத்தை பார்க்கிறோம். வசதிகளை ஏற்படுத்தி கொண்டவர்களுக்கு, வளமான வாழ்க்கை கிடைக்கவில்லை. வசதிகளை நினைத்து பார்க்கக்கூட முடியாதவர்களுக்கு, வாழ்க்கை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம்கண்டுபிடிக்க தெரியாத நாம், அதற்கு, 'விதி' என்று பெயர் சூட்டியிருக்கிறோம். அந்த விதி தான், இன்று பல உயிர்களை பொம்மையாக ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது, அறிவு மழுங்கிப் போகிறது. உண்மையான விளையாட்டு வீரன் ஓட்டப்பந்தயத்தில் பின்தங்கி விட்டாலும், கடைசி வரை ஓடி, முடிவு எல்லையைத் தொட்டுத் தான் ஓட்டத்தை முடிப்பான்.

தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும், பாதியிலேயே பந்தய மைதானத்தை விட்டு வெளியேறுவதில்லை.உங்களது மனம் என்பது,உங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு அரண்மனை; அது ஒரு கோவில். அதனுள் நுழைய யாரை அனுமதிக்க வேண்டும் என்பதை, நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தவறான முடிவுநீங்கள் அனுமதிக்காத வரை, யாரும் அதனுள் நுழைந்து, அதை மாசுபடுத்தி விட்டு அல்லது பாழ்படுத்திவிட்டு போக முடியாது; போகக்கூடாது. நல்லவர்களை, உங்களது உயர்வில், நலத்தில் அக்கறை உள்ளவர்களை அனுமதித்தால், உள்ளே வந்து உங்களுள் இருக்கும் சிறிதளவு குப்பையையும் அகற்றி, சுத்தம் செய்துவிட்டு செல்வர். மாறாக, தீயவர்களை அனுமதித்தால், மோசமான வகையில் மாசுபடுத்தி விட்டு போய் விடுவர்.அது போன்று, பிறரது தவறான நுழைவால் மாசுபட்ட மனமே, கொலை, தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கு காரணமாகிறது.எல்லாவற்றிற்கும், விதியின் மீது பழியைப் போட்டு தப்பிக்க முடியாது.

நம் கவனக்குறைவால் முள்ளின் மீது கால் பதித்து விட்டு, முள் குத்தி விட்டது என்று உயிரற்ற அந்த ஜடப்பொருளுக்கு, நம்மிடம் ஏதோ பகை இருப்பதைப் போல, சுட்டிக்காட்டியே பழகி விட்டோம்.

எதிர்பார்ப்புநம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், நம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவை. ஆனால், அதை எதிர்கொள்ள நாம் ஆற்றும் எதிர்வினை நாம் தீர்மானிப்பதே. கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே என்பதன் உள் அர்த்தமே அது தான். அந்த கடமை நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்துக்கு உண்மைக்கும், மனிதாபிமானத்துக்கும் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் நல்லவர்களின் எதிர்பார்ப்பு. நாம் வாழ பிறரை அழிப்பதும், வாழ்வின் இயல்பான சவால்களிலிருந்து தப்பிக்க நம்மையே அழித்துக் கொள்வதும் அறிவீனத்தின் வெளிப்பாடு!

மா.கருணாநிதி
காவல் துறை கண்காணிப்பாளர், ஓய்வு
தொடர்புக்கு: 98404 88111
இ-மெயில்: spkaruna@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (6)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  இதை படிப்போர் பலர்.. கருத்துக்கள் சொல்வோர் பலர்.. பாராட்டுவர் பலர். ஆனால் சிந்தித்து செயல்படாதோர் பலர்.. ஏர்ப்போரும் பலர் ..ஆனால் நடைமுறைக்கு சரிவராதென்பார் பலர் .. இருப்பினும் சிலர் முன்னதாகவே செயல்பாடுகளில் இந்த கருத்துக்களை வைத்திருப்பவர்கள் பலரும் நடுத்தர மக்கள் மட்டும் தான் என்பது மாறா உண்மை ...

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  திரு தமிழ்வேல் அவர்களே இதையே திரு சகாயம் அவர்களுக்கும் கூறவும். அவர் பணியில் இருந்த போது ஊழல் செய்த எவ்வளவு பணியாளர்களின் மேல் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறமுடியுமா ? யாவர்க்கும் பேசுவது எளிது. செய்வது மிக கடினமான ஒன்று. இவர் ஆட்சிப் பணியில் இருந்தபோது இவர் அலுவலகத்தில் citizen's chart படி அலுவல்கள் நடந்தது என்று அறுதி இட்டு கூறுவார்களா ?

 • sankaseshan - mumbai,இந்தியா

  இவர்பெயரும் கருணாநிதி அவர்பெயரும் ( Kattumaram) பெயரும் கருணாநிதி ஆனால் இருவர் சிந்தனையும் வெவ்வேறானவை .

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  அனுபவத்தின் வெளிப்பாடான சிறந்த கட்டுரை .இளையதலைமுறை யின் வாழ்க்கை முறை இவ்வாறாகத்தான் இருக்கிறது

 • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

  லஞ்சம் அளவு மீறிய சொத்து சேர்த்தல் மற்றும் கட்ட பஞ்சாயத்து இவரது துறையில் மிக அதிகம். அதிகாரம் கையில் இருப்பதால் போடும் ஆட்டமும் அதிகம்...அதனை குறைக்க இவரால் இயன்ற எதையாவது இவரது பனிக்காலத்தில் செய்தாரா அல்லது முயற்சி மேற்கொண்டாரா? ஓய்வுக்கு பிறகு சொல்வது எளிது...சர்வீஸில் இருக்கும்போது? இவரது துறையினர் நேர்மையாக இருந்தால் அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் கூட்டுசேராமல் இருந்தாலே சமூகத்தில் பாதிக்கு மேற்பட்ட குற்றங்கள் குறையும் ....அல்லவா?

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  போலீஸ் பொதுமக்களை போட்டு அடி அடின்னு அடிக்கும் ஆனா இவர் விவாத மேடையில் உக்காந்துகிட்டு அதை நியாயப்படுத்தி பேசுவார்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement