dinamalar telegram
Advertisement

பாரதியின் பேத்திகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் !

Share

இன்று, மொபைல் போன்களில், 'மகளிர் தின வாழ்த்து' வைத்துக் கொள்வதே 'ஸ்டேட்டஸ்' என்றாகி விட்டது பலருக்கு. முகநுால், சிட்டுரை என, அனைத்து மின்பயன்பாட்டு ஊடகங்களும் இன்று, மகளிர் தினத்தையே கொண்டாடிக் கொண்டாடி, மகளிருக்கு திகட்டுமளவுக்கு தீர்த்து விடப் போகின்றன.

பெண்களில் சிலரோ, தன்னை நளினமானவளாகக் காட்டிக்கொள்ள, அழகிப் போட்டிகளில் பங்கேற்பதும், மலினமாக உடுத்தி சொக்க வைப்பதுமாய் வலம் வருகின்றனர். கோலப்போட்டி, சமையல் போட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என, பண்பலைகளும், தொலைக் காட்சிகளும் பெண்களை மகிழ்ச்சிக் கடலில் முத்துக் குளிக்க வைக்கின்றன.'பெண்களுக்குத் தான் மகளிர் தினம், அன்னையர் தினம் என்பதெல்லாம். பாவப்பட்ட ஆண்களுக்கு எதுவும் இல்லையே!' என, அப்பாவியாய் சில ஆண்களும் கேள்வி கேட்கவே செய்கின்றனர்.

'இன்று ஒருநாள் மகளிருக்கான நாள்; கொண்டாடட்டும்' என, குதுாகலிக்கின்றனர் ஆண்களும். பல உணவகங்கள் விடுதிகள், பரிசுப் பொருள் விற்பனையகங்கள் என, பல்வேறு வணிக நிறுவனங்கள் கவர்ச்சியான சலுகைகளை அறிவித்துள்ளன. இன்று கொண்டாட்டம். எனில், நாளை?இந்தக் கொண்டாட்டம் பூப்பதற்கான விதையை யார் போட்டது?

கொஞ்சம் பின்னால் திரும்பி பார்ப்போம்.ஒரே தொழிற்சாலையில், ஆண், பெண்ணுக்கு ஒரே வேலை. ஆணுக்கு குறைந்த நேரம், அதிக கூலி; பெண்ணுக்கு அதிக நேரம், குறைந்த கூலி என்பதே அப்போதைய நிலை. உணவிலும் அதே நிலை தான்.

ஐ.நா., அங்கீகரிப்புஇதைத் தான், நுாறாண்டுக்கு முன் பெண்கள் கேள்வி கேட்டனர். கேட்டதற்காக, கொத்துக் கொத்தாக, பஞ்சாலைக்குள் பஞ்சாகி கரியானவர்களும், வயலுக்கு உரமாக்கப்பட்டவர்களும் உண்டு.இப்படி இருந்த நிலையிலும், இரண்டாம் உலகப் போருக்கு எதிராக பெண்கள் குரல் கொடுத்தனர். காரணம் பயம் அல்ல.போரின் பாதிப்புகள் ஆண்களை விட, பெண்களுக்குத் தான் அதிகம் என்பதால். ஒவ்வொரு போரிலும், தோற்பவர்களின் தாய், மனைவி, மகள் என வயது வித்தியாசமில்லாமல் வெற்றி பெற்றோரால் சூறையாடப்படுவதும், நிர்க்கதியாக்கப்படுவதும் தான்.

அதுமட்டுமல்ல, போரில் இறக்கும் வீரனின் மனைவி, விதவைத் தாயாக, குழந்தைகளை வளர்க்க அல்லாடுவதும் தான்.இதனால் தான், சமாதானம், அன்பு, அறத்தை நோக்கி போருக்கு எதிராக பெண்களின் குரல்கள் உயர்ந்தன. இப்படியே, உலகின் பல பகுதிகளிலும் பெண்கள் துப்பாக்கிகளுக்கு முன் பூக்களை ஏந்தி போராடியதன் விளைவு தான், ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மகளிர் தினம்.

சிந்திக்கும் ஆற்றல்நம் நாட்டுப் பெண்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட போது, பெண்களுக்காக குரல் கொடுத்ததும், ஆண்களிடம் நியாயம் கேட்டதும் இருவர். ஒருவர் ஈ.வெ.ரா., இன்னொருவர் பாரதி. ஈ.வெ.ரா.,வை விட பாரதியை பெண்களுக்கு அதிகம் பிடிக்க காரணம், அவன் கவிதை மொழி பேசியது தான். அவன் பாடல்களின் வழியே, பெண்களின் இதயத்தை துடிக்கச் செய்தது தான். புலவர்கள் எல்லாம் ஆண் கடவுள்களை அதிகம் போற்றிய போது, அவன், பெண்களை பக்தியால் மதித்தான். அவன் தான், சுதந்திர தேவியைப் போற்றினான். சக்தி, பராசக்தி, வள்ளி, தேசமுத்துமாரி, கலைமகள், திருமகள், கண்ணம்மா என, பெண்களை பலவாறாகப் பாடிக் களித்தான்.

சோம்பிக் கிடந்த பெண்களின் நரம்புகளை பாடல்களால் மீட்டி, உணர்வைத் தேனீராய் ஊட்டினான். 'பாஞ்சாலி சபத'த்தின் வழியாக, பெண்களை புரட்சி செய்ய துாண்டினான்.அவன், 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன். மண்ணுக்குள்ளே சில மூடர், நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கொடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்!' என, ஆண்களுக்கு அறிவுறுத்தினான்.

அதாவது, 'ஆண்களைப் போலவே தான், பெண்களின் மூளையிலும், சிந்திக்கும் ஆற்றலைப் படைத்துள்ளான் ஈசன். சில மூடர்கள் அதை மறைத்து நாட்டின் வளர்ச்சியை கெடுத்து விட்டனர். இது, இரண்டு கண்ணில் ஒன்றைக் குத்தி, பார் என்பது போன்றது' என சாடினான்.அதேநேரம், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று, பெண்களுக்கு உரம் ஊட்டினான்.

புகழ் மாலைஅதை தலைமுறை தலைமுறையாக சுவாசித்து தான், இன்றைய தமிழச்சிகள், பாரதியின் பேத்திகள், அவன் கனவுகளை வென்று, பலதுறை வித்தகர்களாகி, அவனுக்கு புகழ் மாலை சூட்டுகின்றனர்.என்றாலும், அனைத்து பெண்களுக்கும் விரும்பிய நல்லவை கிடைப்பதும் இல்லை. விரும்பாத கெட்டதை விலக்க முடிவதுமில்லை. தன் தேவையை தானே உணரவும், உணர்ந்ததைப் பெறவும், இன்னும் பல பெண்களுக்கு தோன்றவே இல்லை. என்பதே, புரட்சிப் பெண்களின் குரலாக உள்ளது.

'பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால், பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை' என்கிறான் பாரதி. அதே பாரதி, 'பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா; பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!' எனக் கூவித் தாவுகின்றான். இந்த நாளில், பெண்கள், தங்களின் புரட்சித் தாத்தாவான பாரதியையும் நினைவு கூர்ந்து, கொண்டாட வேண்டும்.

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்' என்பதை உணர்ந்து, 'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் பெற்று, செம்மை மாதராய் திறம்பட வாழ' அனைத்து பெண்களும் உறுதி ஏற்க வேண்டும்.பெண் என்பவளின் அடையாளம் உடலோ, உடையோ அல்ல. அவளின் தனித்த அறிவு, தனித்த நடை, தனித்த குணம், தனித்த மனம் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். அது தான், பாரதிக்கு செலுத்தும் மரியாதை என்பதை உணர்ந்து, மகளிர் தினத்தில் சக்தி பெற்று உயர வேண்டும்.

வாழ்க பெண்மை. வையத்துள் வாழ்வாங்கு!அனைத்து பாரதியின் பேத்திகளுக்கும் மீண்டும் மகளிர் தின வாழ்த்துகள்!

- தி.சிவகுமார்

சமூக ஆர்வலர்

naduvoorsiva@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement