dinamalar telegram
Advertisement

இன்று முடிகிறது 26 நாள் காத்திருப்பு

Share

கடந்த ஏப்ரல் 6ல் தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிந்தது; இன்று முடிவுகள் வர உள்ளன. இடைப்பட்ட நாட்கள் 26. போட்டியிட்டோரிடம் பதைபதைப்பு கட்சியினரிடம் பரபரப்பு காணப்படுகிறது. ஆனால் பொதுமக்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. யார் ஆள வந்தாலும் எந்த மாற்றமும் நமக்கு ஏற்படப் போவதில்லை என்ற எண்ணமே அதற்கு காரணம்.கடந்த 2011லும் இப்படித் தான். ஏப். 11ல் தேர்தல். மே 11ல் முடிவு. இடைப்பட்ட நாட்கள் 30. அப்போதும் பரபரப்பு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
அந்த முடிவு வரும் முன் தி.மு.க.வினரும் அவர்களின் கூட்டணி கட்சியினரும் 'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது; ஊழல் அ.தி.மு.க. அகற்றப்பட்டு விட்டது. அதற்காகமக்கள் ஓட்டளித்து விட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் இந்த ஊழல் பெருச்சாளிகளை பிடித்து உள்ளே போடுவோம்' என்றனர்.

நடுநிலையாளர்கள்ஆனால் முடிவு என்னவோ அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இருந்தது; அ.தி.மு.க. ஆட்சியே தொடர்ந்தது. அன்று ஆரம்பித்தது அ.தி.மு.க. அரசுக்கு எதிரான தி.மு.க.வின் குடைச்சல். ஜெ. உயிருடன் இருந்தது வரை சற்றே குறைந்திருந்த இம்சை பழனிசாமி முதல்வரான பின் மிகவும் அதிகரித்து விட்டது.அ.தி.மு.க.வும் பா.ஜ.வும் ஓரணியாகவும் பிற கட்சிகள் அனைத்தும் தி.மு.க. தலைமையில் எதிரணியாகவும் தமிழக அரசுக்கு நித்தமும் பல்வேறு விதங்களில் சிக்கலை ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றன.அவற்றை எல்லாம் இந்த நான்காண்டுகளில் வெற்றிகரமாக சமாளித்து ஆட்சியை தக்கவைத்ததுமட்டுமின்றி எந்த கட்சியையும் சாராத நடுநிலையாளர்களின் ஆதரவையும் பெற்று 'ஜம்'மென ஆட்சியில் வீற்றிருக்கிறது அ.தி.மு.க. அரசு.

கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலின் போது தான் என்றில்லாமல் அதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பே தி.மு.க. துவக்கி விட்ட தேர்தல் பிரசாரத்தில் 'அடுத்து அமையப் போவது எங்கள் ஆட்சி தான்' என்ற ரீதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதற்கொண்டு அக்கட்சி மற்றும் அதன் தலைமை யிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சொல்லி வந்தனர்.இதனால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்குள் மறைந்திருக்கும் அந்த ரகசியத்தை இவர்கள் எப்படி அறிந்தனர் என்ற ஐயம் பல மாதங்களாகவே தமிழக மக்களுக்கு உள்ளது. ஆனால் ஆளும் தரப்போ மீண்டும் எங்கள் ஆட்சிதான் தொடர போகிறது; மக்களுக்கு எங்களின் செயல்பாடு பிடித்துப் போயுள்ளதால் நாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்கிறது. எப்படியோ இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும்; அடுத்து யார் ஆட்சி அமையப் போகிறது என்று.காத்திருப்பதும் சுகம் தானே. ஓட்டுப்பதிவு முடிந்ததும் அடுத்து யார் ஆட்சி என அறிவித்தால் என்ன என மனம் ஏங்கியது. அந்த ஏக்கம் 26 நாட்கள் நீடித்து இன்று முடிவுக்கு வரவுள்ளது.

ஒரு வாதத்திற்கு என வைத்துக் கொள்வோம். தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்து விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறுமா ஓடப் போகிறது; இல்லையே. நாம் உழைத்தால் தான் நம் வயிறு நிரம்பும்.மாற்றமே வேண்டாம் என மக்கள் ஓட்டளித்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியே தொடர்ந்தால் அந்த அரசும் மக்கள் பசியை பிணியை போக்கி விடப் போகிறதா; இல்லையே.எனவே ஜனநாயக கடமையை ஆற்றிஉள்ளோம். முடிவு எதுவாக இருந்தாலும் அதனால் ஓட்டு போட்ட மக்களுக்கு எந்த நேரடி பலனும் கிடைக்கப் போவதில்லை.
நாம் உழைத்தால் நாம் படித்தால் நாம் சாப்பிட்டால் தான் வயிறு நிரம்பும். அதை நினைத்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் நலனை கருதி நாம் உழைப்போம்.இத்தனை நாள் காத்திருந்ததிலும்ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. பொதுவாகவே வாழ்க்கையின் எல்லா அங்கங்களிலும் காத்திருப்பது சுகமே. பள்ளிப் படிப்பை முடித்ததும் பிளஸ் 2வில் சேர எதிர்பார்த்த 'குரூப்' கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. எதிர்பார்த்தது கிடைத்து விட்டால் மகிழ்ச்சி தான். தேர்வு எழுதிய பின் முடிவுகள் தெரிய சில மாதங்கள் காத்திருக்கிறோம். தேர்வு முடிவு வெளியாகும் நாளில் எத்தனை பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது... காத்திருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கத் தான் செய்கின்றன.அப்படியே கல்லுாரி படிப்பு வேலை என காத்திருந்து காத்திருந்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறோம்.

கருத்துத் திணிப்புஅதன் பின் திருமணம். மணமகள்மணமகன் தேடுதல் வேட்டையிலேயே குறைந்தது இரண்டு ஆண்டுகள் காத்திருக்கிறோம். 'காத்திருந்த மாப்பிள்ளைக்கு நினைத்தது போல் அழகிய மணப்பெண் கிடைப்பாள்' என்பது கிராமத்து பழமொழி. அதன் பின் வாரிசுக்காக காத்திருப்பு. அதில் கிடைக்கும் சுகமே அலாதியானது. இப்படி ஒவ்வொரு காத்திருப்பிலும் இறுதியில் நமக்கு கிடைப்பது இனிய உணர்வுகளும் பலன்களும் தான்.


அதுபோல இந்த 26 நாட்கள் காத்திருப்பும் நமக்கு இனியதைத் தான் வழங்கும் என நம்புவோம்.தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அவர்களின் கட்சித் தலைவர்கள் 'அடுத்து நம் ஆட்சி தான்' என உறுதி அளித்தாலும் முடிவு என்னவாகும் என தெரிந்து கொள்வதில் வேட்பாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வேண்டாத தெய்வம் இல்லை; போகாத கோவில் இல்லை என்ற அளவில் தான் நிலைமை இருந்தது.தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. எனினும்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கருத்துத் திணிப்புகளாக மாறி ஒவ்வொரு நிறுவனத்தின் முடிவும் வெவ்வேறாக இருந்தது.

எதிர்பார்ப்புகட்சித் தலைவர்கள் சிலரை திருப்திபடுத்தும் வகையில் அமைந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் சிலருக்குஏமாற்றத்தை அளித்துள்ளன. எனினும் யார் வெற்றி பெறுவார் என்பது இன்று தான் முடிவாகிறது. இந்த கொரோனா காலத்திலும்ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்த தேர்தல் முடிவை வைத்தே மத்தியிலும் சில மாநிலங்களிலும் கூட்டணி வியூகங்கள் அரசியல் போக்குகள் மாறப் போகின்றன.வரும் 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் எப்படியாவதுவெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சித்து வரும் காங்கிரசின் எதிர்காலத்தை இந்த தேர்தல் தான் முடிவு செய்யப் போகிறது.
ஏனெனில் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றது முதல் லோக்சபா மற்றும் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி படுதோல்வியைத் தான் சந்தித்து வந்துள்ளது. அந்த விரக்தியில் தலைவர் பதவியிலிருந்து இறங்கியுள்ள ராகுல் உடல் நலமில்லாத தன் தாயின் தலையில் தலைமை பொறுப்பை இறக்கி வைத்துள்ளார்.


நேரு - இந்திரா குடும்பத்தை விட்டால் காங்கிரசுக்கு தலைமை இல்லை என்ற நிலை காணப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தலைமை தொடர்ந்து பதவியில் நீடிப்பது இந்த தேர்தல் முடிவை பொறுத்து தான் அமையும்.அதுபோல 'தமிழகத்தில் நாங்கள்கைகாட்டும் கட்சி தான் ஆட்சி அமைக்கும்' என மார்தட்டி வந்த தமிழக பா.ஜ.வின் தலைவிதியும் இன்றுதான் தீர்மானிக்கப்பட உள்ளது.இன்றைய முடிவு பா.ஜ.வுக்கு சாதகமாக இருக்குமா; பாதகமாக இருக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.அதுபோல கேப்டன் இல்லாத கட்சியாக கருதப்படும் நடிகர் விஜய காந்தின் தே.மு.தி.க.வின் அரசியல் எதிர்காலமும் இன்று நிர்ணயம் செய்யப்பட்டு விடும்.
சில மாதங்களுக்கு முன் வரை சினிமா படங்களில் நடித்து விட்டு 'பிக்பாஸ்' போன்ற 'டிவி' நெடுந்தொடர்களில் தோன்றி கோடிகளை குவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலின் அரசியல் எதிர்காலமும் இன்று முடிவாகி விடும்.
ஆட்சியை கைப்பற்றுவேன் என கூறி 187 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள கமல் கட்சி கரை சேருமா என்பதும் இன்று தெரிந்து விடும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி அ.தி.மு.க.வின் ஜெயலலிதா இல்லாத நேரத்தில் நடந்து முடிந்துஉள்ளது இந்த தேர்தல். அதுபோல ஜெ. தோழி சசிகலா மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என பல ஆண்டுகளாக கூறி கடைசி நேரத்தில் ஏமாற்றிய நடிகர் ரஜினி போன்றோர் 'இந்த தேர்தல் முடிவு எப்படித் தான் இருக்கிறது என பார்ப்போம்' என காத்திருந்தனர். அவர்களின் காத்திருத்தல் இன்று முடிவுக்கு வருகிறது.
'கால்குலேட்டர்' போன்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வெளியில் இருந்து யாராலும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என ஆதாரப் பூர்வமாக பல முறை நிரூபிக்கப்
பட்டும் நம்பாத சில அரசியல் தலைவர்கள் அந்த இயந்திரங்கள்வைக்கப்பட்டுள்ள அறைகள் முன் தன் கட்சியினரை இரவு பகலாக காத்திருக்கச் செய்துள்ளனர்.
அந்த காத்திருப்பிற்கும் இன்று வருகிறது முடிவு. கொரோனா என்ற கொடும் பூதம் இந்த உலகத்தையே தன் கபளீகர கரங்களால் வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. அதன் பிடியில் சிக்கியுள்ள பல நாடுகளில் நம் நாடும் ஒன்று. சில நாடுகள் அந்த கொடூர கரங்களில் இருந்து விடுபட்டாலும்
இன்னமும் வலியிலும் வேதனையிலும் துடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

தர்மசங்கடம்கொரோனா துயரங்களை இன்றைய தேர்தல் முடிவு மாற்றியமைக்கப் போவதில்லை. ஆனால் ஆட்சிக்கு வரும் அல்லது ஆட்சியை தக்க வைக்கும் அரசுக்கு கொரோனா தர்மசங்கடத்தையே கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.'கொரோனா முடியும் வரை ஆட்சியில் யாராவது இருங்கள்; அதன் பின் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என சொல்லாத குறையாகத் தான் நிலைமை இருக்கும். எனவே இந்த 26 நாட்கள் காத்திருப்பு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தாவிட்டாலும் கொரோனா என்ற பூதத்தின் பிடியில் உலகம் சிக்கியுள்ளதால் அதன் பாதிப்பை ஆட்சியாளர்கள் உணரத் தான் செய்வர். அவர்களுக்கு இத்தனை நாள் காத்திருப்பு கொஞ்சம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கொரோனா முழுதும் ஒழியும் வரை நிம்மதி இல்லை என்பது மட்டும் சாஸ்வதம். சீத்தலைச்சாத்தன் சமூக ஆர்வலர் இ - மெயில்: send2subvenk@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement