dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

பத்திரிகை செய்தி:



சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தோல்வியை தழுவினார். ஆக., 1ல் கோவை தெற்கு தொகுதியில், தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்ல, கமல் நேரில் செல்கிறார். அப்போது கட்சியை பலப்படுத்த திட்டமிட்டு, அதிருப்தியில் உள்ள மாற்று கட்சியினரை, கட்சிக்கு இழுக்கும்படி, நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவிட்டுள்ளார்.


'டவுட்' தனபாலு: எல்லா கட்சி தலைவர்களும் நன்றி தெரிவித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இப்போது தான் கமலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததோ என்ற, 'டவுட்' முதலில் வருகிறது. மேலும், பசையில்லாத அவரின் கட்சியில், மாற்றுக்கட்சியினர் இணைவது, 'டவுட்' தான்!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் வகையில், கர்நாடக அரசு எழுப்பும் எந்த பிரச்னைக்கும் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் செவி சாய்க்காது. எனவே, இந்த விவகாரத்தை தொடர்ந்து அரசியலாக்காமல், ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க, தமிழக கட்சிகள் முன்வர வேண்டும்.


'டவுட்' தனபாலு: நீர் உள்ள வரைக்கும், நிலம் உள்ள வரைக்கும், கார் உள்ள வரைக்கும், கதிரவன் உள்ள வரைக்கும், கர்நாடகா மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள், காவிரி நீர் விவகாரத்தை எழுப்பிக் கொண்டு தான் இருப்பர். இரு மாநில விவசாயிகள் பிரச்னை, எப்போது மொழி மற்றும் கட்சி ரீதியாக மாறியதோ, அப்போதே இந்த விவகாரம் ஓயாது என்பதில், இரு மாநில மக்களுக்கும், 'டவுட்'டே இல்லை!


தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ்:
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். கொரோனா மூன்றாவது அலை என்ற அச்சத்தை கடந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அரசின் சுகாதார வழிகாட்டுதல்படி, பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும்.


'டவுட்' தனபாலு: புதுச்சேரியிலும் தங்கள் குழந்தைகள் மீது பெற்றோர் அன்பு வைத்திருக்கத் தான் செய்கின்றனர். அங்கு பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது; தமிழகத்தில் தான் இன்னமும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகம் இழுத்தடிக்கும் என்பதை அறிந்து தானோ என்னவோ, புதுச்சேரி தனி 'ரூட்'டில் சென்று விட்டதோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு உண்டு!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மாணவர்களை நல்ல பாதுகாப்புடன் வைத்து போதிக்க உத்தரவு கொடுத்தால் பெற்றோர் வாரிசுகளை அனுப்புவர் அதைக் கொடுக்க அரசு முன் வருமா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement