Load Image
Advertisement

பத்தாயிரம் நோக்கி ரோகித்

இந்தியாவின் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியில் 10,000 ரன்னை நோக்கி முன்னேறுகிறார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா. கடந்த 2007ல் பெல்பாஸ்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். இதுவரை 45 டெஸ்ட், 239 ஒருநாள், 148 சர்வதேச 'டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய இவர், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். கோல்கட்டாவில், 2014ல் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 173 பந்தில், 33 பவுண்டரி, 9 சிக்சர் உட்பட 264 ரன் குவித்தார். இந்நிலையில் ரோகித், ஒருநாள் போட்டியில் 10,000 ரன் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார். இதுவரை 239 போட்டியில், 29 சதம், 47 அரைசதம் உட்பட 9630 ரன் குவித்துள்ளார். இவர், இன்னும் 370 ரன் எடுக்கும் பட்சத்தில், ஒருநாள் போட்டி வரலாற்றில் 10,000 ரன்னை எட்டிய 6வது இந்திய வீரர் என்ற பெருமை பெறலாம். இதுவரை இந்தியா சார்பில் சச்சின், கோஹ்லி, கங்குலி, டிராவிட், தோனி ஆகியோர் இச்சாதனை படைத்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 2 ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த 5 போட்டியில் ரோகித் சர்மா ரன் மழை பொழிந்தால் இம்மைல்கல்லை எட்டலாம். தவிர, 10,000 ரன்னை குறைந்த இன்னிங்சில் அடைந்த 2வது வீரராகலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement