Advertisement

அவளே சரணம்!

'என் தந்தை என்னிடம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லியதில்லை; அவர் வாழ்ந்தார்; நான் அவரைப் பார்த்து வளர்ந்தேன்!' - இவை, கிளாரன்ஸ் பி. கெல்லண்ட் எனும் அமெரிக்க எழுத்தாளரின் வார்த்தைகள்.

தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகனும் இதைத்தான் சொல்கிறார். ஒரே வித்தியாசம்... இவர், தன் தாயைப் பார்த்து வளர்ந்திருக்கிறார்.
தமிழக மற்றும் இந்திய பாரா சி.பி., கால்பந்தாட்ட அணிகளுக்கு கேப்டன், ஆங்கில பட்டதாரி, விவசாயி, ராணி பெற்றெடுத்த மகன்; இவையே, 27 வயது மாற்றுத்திறனாளி பாலமுருகனின் பெருமைகள்.

என் அம்மா
'செரிபரல் பால்சி' பிரச்னையால, பிறப்புலேயே எனக்கு இடது கை கிடையாது. தாழ்வு மனப்பான்மையோட நான் வளர்ந்துடக் கூடாதுன்னு, என்னை ஆங்கில வழி பள்ளியில சேர்த்தாங்க; பிறர் துணை தேடாத பக்குவம் வரணும்னு, ஹாஸ்டல்ல சேர்த்தாங்க.
வெளியுலகமே தெரியாத என் அம்மா ராணி, இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தது ரொம்ப பெரிய விஷயம்! அவங்களோட இந்த முடிவு தான், வர்ற ஜனவரி மாதம் ஜோர்டன்ல நடக்க இருக்குற சர்வதேச பாரா சி.பி., கால்பந்து போட்டி வரைக்கும் என்னை கொண்டு போகுது!

அம்மாவோட அறிவுரை?
அப்பா எங்களை விட்டு விலகி இருக்கிறதால, என் வயசுக்கு மீறின பாரங்களை நான் சுமக்க வேண்டியிருந்தது. இது அம்மாவுக்கும் புரியும். ஆனா, இதுக்காக மனசளவுல வருத்தப்படுவாங்களே தவிர, எதையும் வெளிக்காட்டிக்க மாட்டாங்க. 'ஒழுக்கமா இருக்கணும்ப்பா..' - இது ஒண்ணைத் தவிர, அறிவுரைன்னு எதையும் அவங்க சொன்னதில்லை.

அவ்வளவுதானா?
என்ன அவ்வளவுதானா; இந்த ஒரு அறிவுரை, எப்படியெல்லாம் எனக்கு காவல் இருந்திருக்கு தெரியுமா; விளையாட்டு போட்டிகளுக்காக இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன்; பல வசதியான இடங்கள்ல தங்கியிருக்கேன்; அந்த தருணங்கள்ல, நான் தடம் மாறி போறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருந்தது. ஆனா, துளிகூட நான் சலனப்படலை. அதுக்கு காரணமே, அம்மாவோட இந்த அறிவுரை தான்!

ராணி அம்மா என்ன சொல்றீங்க?
நான் செஞ்சதா என் புள்ளை சொல்றதெல்லாம் ஒரு தாயோட கடமை; என் நிலைமையில இருக்குற எந்த ஒரு தாயும் இதைத்தான் செஞ்சிருப்பா; ஏன்... என்னைவிட இன்னும் நல்லாவே வளர்த்திருப்பா!
என் மகன் விஷயத்துல ஒரு தாயா நான் கத்துக்கிட்டது ஒண்ணே ஒண்ணுதான்... பெத்தவங்க நாம பிள்ளைகளுக்கு உண்மையா இருந்தா, பிள்ளைகளும் நமக்கு உண்மையா இருக்கும்! என் பாலமுருகன் உண்மையா இருக்கிறதுல, எனக்கு ரொம்ப சந்தோஷம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement