திண்டிவனம்: புதுச்சேரியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த, மூன்று சிறுமிகளை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில், வாலுன்டரியேட் சில்ரன்ஸ் ஆர்பன்ஞ், நீலா இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த சந்துரு மனைவி விஜயலட்சுமி (25). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தனக்கு யாரும் ஆதரவில்லை எனக் கூறி, தனது இரு குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்துள்ளார். இல்லத்தில் ஆறு மாதங்களாக தங்கியிருந்த விஜயலட்சுமி குழந்தைகளிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த 5ம் தேதி இரவு 8 மணிக்கு விஜயலட்சுமி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற இல்லக் குழந்தைகளான சுமதி (10), தமிழ் அழகி (10), அனுசுயா (8) ஆகிய மூன்று சிறுமிகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சுரேஷ் (27) கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்பதற்காக சேதராப்பட்டு சப் - இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டிவனத்தில் முகாமிட்டுள்ளனர். திண்டிவனம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர்பாஷா, சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் உதவியுடன் விஜயலட்சுமியின் கணவர் சந்துரு மற்றும் உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE