| மொபைல் போன் மூலம் குடிநீர் மோட்டார் இயக்கி கான்சாபுரம் ஊராட்சியில் புதுமை| Dinamalar

தமிழ்நாடு

மொபைல் போன் மூலம் குடிநீர் மோட்டார் இயக்கி கான்சாபுரம் ஊராட்சியில் புதுமை

Updated : ஜூன் 01, 2010 | Added : ஜூன் 01, 2010 | கருத்துகள் (2)

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சியில் மொபைல்போன் மூலம் மின் மோட்டாரை இயக்குவதன் மூலம் மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் மின்கட்டண செலவு மிச்சப்படுத்தப்படுகிறது. கான்சாபுரம் கிராமத்தில் 350 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 58 பொது குழாய் இணைப்புகளும் உள்ளன. இவை அனைத்திற்கும் குடிநீர் ஆதாரமாக உள்ள குடிநீர் கிணறு, ஊருக்கு 8 கி.மீ., தொலைவில் உள்ள அத்திகோயில் மலையடிவாரத்தில் உள்ளது. இக்கிணற்றின் மோட்டாரை இயக்க பம்ப் ஆப்பரேட்டர் எட்டு கி.மீ. தூரம் செல்லவேண்டும். இயக்கி திரும்பிய பின் மின்வெட்டு, மோட்டார் பழுது போன்ற காரணங்களால் மோட்டார் நின்றுவிட்டால் அதை இயக்க மீண்டும் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

நேரம், பணம் மிச்சம்: இதனால் குடிநீர் வினியோகம் செய்வதிலேயே ஊராட்சி நிர்வாகம் முழு நேரத்தையும் செலவிடவேண்டியிருந்தது. இந்நிலையில் மொபைல் போன் மூலம் பம்புசெட்கள், மின் மோட்டார்களை இயக்க தனியார் நிறுவனம் 'மொபைல் ஸ்டார்ட்டர்' கருவி, கான்சாபுரத்தில் பொருத்தப்பட்டது. இருமாதங்கள் அதை பயன்படுத்தியதில் பயனுள்ளதாக இருந்தது. ஊராட்சி செலவினம் குறைந்தது. இயங்கும் முறை: மொபைல் போன் ஸ்டாட்டரில் சாதாரண மோட்டார் ஸ்டார்ட்டருடன் எலக்ட்ரானிக் சென்சார் போர்டு இணைக்கப்பட்டு, அது மொபைல்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மொபைல்போனில் இணைப்புக்காக வழக்கமான சிம்கார்டு போடப்பட்டுள்ளது. இதற்கு வேறு போனிலிருந்து டயல் செய்தவுடன் ரிங்டோன் மூலம் சென்சார் போர்டுக்கு சிக்னல் செல்கிறது. அதன் பின்னர், கால்செய்த போனுக்கு, ஒலி மூலம் சிக்னல் கிடைக்கிறது. "கால்' செய்தவர்கள் அதற்கான சில ரகசிய குறியீட்டு எண்ணை மீண்டும் டயல் செய்தவுடன் ஸ்டார்ட்டர் இயங்கி மோட்டாரை இயக்குகிறது. பிரச்னைகளுக்கு சிக்னல்: இதில் பழுது காரணமாக மோட்டார் இயங்காமல் போனாலோ, மின்தடை ஏற்பட்டாலோ, தண்ணீர் இல்லாமல் வெறும் மோட்டார் ஓடினாலோ ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொருவிதமான ஒலியுடன் மொபைல்போனில் கேட்கிறது.

இதன்மூலம் அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், எந்த மூலையிலிருந்து மோட்டாரை இயக்குவதற்கும் நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எந்த மொபைல்போனிலிருந்தும் இயக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது குறித்து ஊராட்சி தலைவி ஆவணிநாச்சியார் கூறியதாவது: மோட்டாரை இயக்க ஆள் கிடைக்காமல் தினசரி கூலி கொடுத்து ஆட்களை நியமிக்கவேண்டியிருந்தது. மலைப்பகுதியில் மிருகங்கள் தொந்தரவு இருந்ததால் ஆப்பரேட்டர்கள் பயந்துகொண்டு அங்கு செல்வதில்லை. இதனால் குடிநீர் வினியோகிக்க மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. தற்போது எந்த தொந்தரவும் இல்லை. அந்தந்த நேரத்தை பார்த்து வீட்டிலிருந்து நானே மோட்டாரை இயக்கிவிடுவேன். வெளிமாநிலங்களுக்கு சென்றபோது கூட அங்கிருந்தே மொபைல்போன் மூலம் மின் மோட்டாரை இயக்கினேன். பணியாளர்களுக்கு உத்தரவிடவேண்டியது, அவர்களை கண்காணிக்க வேண்டியது இல்லை. யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதை செயல்படுத்தியதால் டேங்க் நிரம்பி வழிந்தோடுதல், அல்லது தண்ணீரின்றி வெறும் மோட்டார் ஓடுதல் என தேவையற்ற மின்விரையம், பம்ப் ஆப்பரேட்டர் கூலி தவிர்க்கப் பட்டு மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊராட்சிக்கு மிச்சமாகிறது, என்றார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X