மேட்டூர்: மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து அடுத்தடுத்து மாயமான நான்கு மாணவியரையும் நேற்று போலீஸார் மீட்டனர். மேட்டூரில் செயின்ட்மேரீஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி உள்ளது. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காயத்ரி (13), சுபலட்சுமி (13), பியூலா ஜெனிபர் (13) ஆகிய மூன்று மாணவியரும் கடந்த 8ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 2 மாணவி ஜோதி (17) கடந்த 10ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் இருந்து மாயமாகி விட்டார். அடுத்தடுத்து நான்கு மாணவியர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் செயின்ட்மேரீஸ் பள்ளியை முற்றுகையிட்டனர். மேட்டூர் போலீஸார் மாயமான மாணவியரை வலைவீசி தேடி வந்தனர். எட்டாம் வகுப்பு மாணவியர் மூவரும் வேளாங்கண்ணியில் மீட்கப்பட்டனர். ப்ளஸ் 2 மாணவி ஜோதி, ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று காலை மேட்டூர் போலீஸார் சின்னபள்ளம் சென்று மாணவி ஜோதியை மீட்டு வந்தனர். விசாரணையில், மாணவி காயத்ரி காலாண்டு தேர்வில் நான்கு பாடத்திலும், மற்ற இரு மாணவியர் தலா ஒரு பாடத்திலும் பெயில் ஆகியுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பெற்றோர் திட்டியதால் விரக்தியடைந்த மாணவியர் சேலம் சென்று, அங்கிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கூல் பேக்குகளை தனியாக ஒரு இடத்தில் வைத்து விட்டு சர்ச் வளாகத்தில் மூன்று மாணவியரும் தூங்கியுள்ளனர். மூன்று ஸ்கூல் பேக் மட்டும் தனியாக இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீஸார், பேக்கை சோதனை செய்தபோது, அதில் பள்ளி அடையாள அட்டை மற்றும் ஃபோன் நம்பர் இருந்துள்ளது. ஃபோன் நம்பரை தொடர்பு கொண்டு போலீஸார் பேசிய பின்னர் தான் மூன்று மாணவியரும் வேளாங்கண்ணியில் இருப்பது மேட்டூர் போலீஸாருக்கு தெரியவந்தது. நேற்று காலை மூன்று மாணவியரையும் மேட்டூர் அழைத்து வந்த போலீஸார், அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான ப்ளஸ் 2 மாணவி ஜோதி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார். அதன் பின் மேட்டூர் செயின்ட்மேரீஸ் பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். ஜோதிக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை. வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு செல்வாக பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் அதை ஏற்று கொள்ளாமல் திட்டியுள்ளனர். முன்கோபம் அதிகமுள்ள மாணவி ஜோதியும் மற்ற மாணவர்களும் அதிகம் பேசுவதில்லை. யாருடனும் கலகலப்பாக பேசாத ஜோதி, தனக்கு தானே அறிவுரை கூறுவது போலவும், விரக்தியிலும் நோட், புக்கில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். பெற்றோர் அரவணைப்பும் இல்லாமல், ஹாஸ்டல் மாணவியருடன் சகஜமாக பேச முடியாத மாணவி ஜோதி, கடந்த 10ம் தேதி ஹாஸ்டலை விட்டு மாயமாகி விட்டார். "பெற்றோர் தன்னை திட்டுவதால் அவர்களுடன் செல்ல மாட்டேன்' என, ஜோதி பிடிவாதம் செய்ததால் கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளார். பள்ளியில் இருந்து மாயமான நான்கு மாணவியரும் நேற்று ஒரே நாளில் போலீஸாரால் மீட்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.