சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி : கல்லூரி முதல்வராக செபஸ்டியன் நியமனம்

Added : அக் 14, 2010
Advertisement
கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி : கல்லூரி முதல்வராக செபஸ்டியன் நியமனம்

சென்னை : திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதைத் தொடர்ந்து, அக்கல்லூரி முதல்வராக (பொறுப்பு) செபஸ்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.


திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வராக ராஜரத்தினம் பணிபுரிந்து வந்தார். அவர் மீது, அரியலூர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். இப்புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜரத்தினத்திற்கு பதிலாக செபஸ்டியனை முதல்வராக கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது. தமிழக ஜெஸ்யூட் கல்லூரிகளின் தலைவர் தேவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "போலீஸ் வழக்கு விசாரணையை தொடர்ந்து, தன்னை ஒரு மாதம் முதல்வர் பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜரத்தினத்திற்கு பதிலாக நேற்று முதல் செபஸ்டியன், தூய வளனார் கல்லூரியின் முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை: கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரிக்கு, அரசு மருத்துவமனையில் நேற்று, மருத்துவப் பரிசோதனை நடந்தது. கல்லூரி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, ப்ளாரன்ஸ் மேரி(28) என்ற கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மற்றும் அவருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்த தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகிய மூன்று பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியை, நேற்று முன்தினம் மாலை திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கன்னியாஸ்திரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு ப்ளாரன்ஸ் மேரி, அவரது அக்கா மேரி, கோட்டை பெண் போலீசார் இருவர், கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி வந்தனர். அங்கு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. "மருத்துவப் பரிசோதனையின் முடிவு, இன்று மாலை போலீசாரிடம் வழங்கப்படும்' என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ப்ளாரன்ஸ் மேரியின் அக்கா, வளாகத்தின் உள்ளே நிருபர்களிடம் எப்படி நடந்தது என்பது குறித்து, கண்ணீருடன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த, பாதுகாப்புக்கு வந்திருந்த கோட்டை மகளிர் போலீசார், அவரை மிரட்டி நிருபர்களிடம் பேச விடாமல் தடுத்ததோடு, ப்ளாரன்ஸ் மேரியும் நிருபர்களிடம் பேச முடியாதவாறு அழைத்துச் சென்றனர்.


இந்நிலையில், திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய ப்ளாரன்ஸ் மேரி, இசைக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வெளியானது. இச்சூழ்நிலையில், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தைக் கண்டித்தும், உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ம.க.இ.க., அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 11 பேர், கல்லூரி முக்கிய வாசலில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். திருச்சியில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.


மருத்துவ பரிசோதனையில் டாக்டர் புதிய தகவல்: "திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கருக்கலைப்பு செய்தாரா என்பதை கண்டறிய முடியவில்லை' என, டாக்டர் அறிக்கை அளித்துள்ளார்.


புகார் அளித்த ப்ளாரன்ஸ் மேரிக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டர் பாக்யவதி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று மாலையே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், "ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது' என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கை விரைவில் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிரியார் ராஜரத்தினம் தன்னை கற்பழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பதே கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியின் புகார். ஆனால், நேற்று அவருக்கு நடந்த பரிசோதனையில் கருக்கலைப்பு பற்றி தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பது, வழக்கின் நம்பத்தன்மையை சந்தேகப்படும் சூழலை உருவாகியுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X