கரும்பு சாகுபடியில் களையை கட்டுப்படுத்த யோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு சாகுபடியில் களையை கட்டுப்படுத்த யோசனை

Added : அக் 21, 2010

நாமக்கல்: "கரும்பு பயிரில் காணப்படும் களையை கட்டுப்படுத்த சரியான களைக்கொல்லி நிர்வாகத்தை பயன்படுத்த வேண்டும்' என, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கரும்பில் முளைப்பு பூர்த்தியாக குறைந்தது 25 முதல் 30 நாட்களாகும். இந்த இடைவெளியில் களைகள் விரைவாக வளர்கின்றன. தனிப்பயிராக கரும்பு சாகுபடி செய்யும்போது, அகன்ற இலை அல்லது பூண்டு வகை களைகள் அதிகம் உள்ள இடங்களில் அட்ரசின் என்ற களைக்கொல்லியை தெளிக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 300 லிட்டர் தண்ணீருடன் கலந்து கரும்பு நடவு செய்த 3 அல்லது 4 நாட்களுக்குள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நடவு செய்த 60ம் நாள் ஆட்கள் கொண்டு களை எடுத்தல் அவசியம்.கோரை மற்றும் அருகு அதிகமாக உள்ள இடங்களில் அட்ரசின் மருந்தை தெளிக்க வேண்டும். பின், 45வது நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கிளைபோசெட் என்ற களை கொல்லியை 10 கிராம் அமோனியம் சல்பேட் உரத்துடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு கோரை மற்றும் அருகு மேல் மட்டும் படுமாறு தெளிக்க வேண்டும்.


களைகள் மிகவும் அதிகமாக இருக்கும் இடங்களில் இம்முறையை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையில், கரும்பு நடவுக்கு ஒரு மாதம் முன் வயலில் நன்கு தண்ணீர் பாய்ச்சி கோரையை முளைக்கவிட வேண்டும். களை முளைத்து இலை வரும்போது கிளைபோசெட் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மிலி., மற்றும் 10 கிராம அமோனியம் சல்பேட் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.மருந்து அடித்த 15-20 நாட்களில் கோரையின் தாய் கிழங்கும், அருகில் வேர் தண்டும் முழுமையாக காய்ந்து மடிந்துவிடும். சுடுமல்லி போன்ற களை ஒட்டுண்ணிகள் அதிகமுள்ள இடங்களில் அட்ரசின் மருந்தைஅடித்துவிட்டு பின் 45வது நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் பெர்னாக்ஸோன் களைக்கொல்லியை 10 கிராம் யூரியா அல்லது 20 சதவீதம் சாப்பாட்டு உப்பை சேர்ந்து ஒட்டுண்ணி செடிகள் மேல் மட்டும் படுமாறு கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.கரும்பில் பயறுவகை பயிர்கள் மற்றும் சோயா மொச்சை ஊடுபயரிராக சாகுபடி செய்யும்போது அட்ரசின் களைக்கொல்லியை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதில் ஏக்கருக்கு ஆலக்போர் ஒரு லிட்டர் அல்லது புளுக்குளோரலின் 0.750 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் ஒரு லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.கரும்பு பயிரில் தோன்றும் களைகளுக்கு ஏற்ப சரியான களைக்கொல்லியை தேர்வு செய்து உரிய தருணத்தில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியை தேர்ந்தெடுக்கும் முன் களைகளின் பண்பு, பயிரின் பருவம், மருந்தின் செயல்திறன், ஊடுபயிர்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். களைக்கொல்லிகளை காற்று, மழை இல்லாத நாட்களில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லிகளை பூச்சி கொல்லி அல்லது பூசணக் கொல்லி மருந்துகளுடனோ கலந்து தெளிக்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X