| அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம்

Updated : அக் 28, 2010 | Added : அக் 26, 2010 | கருத்துகள் (43)

காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


சில தினங்களுக்கு முன்பு, டில்லியில் காஷ்மீர் பிரச்னை குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் பிரிவினைவாத குழு தலைவரான சையது அலி ஷா கிலானியும், பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சு, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. காஷ்மீர் தங்களின் பகுதி அல்ல என்பதை சர்வதேச அரங்கில் இந்தியாவே ஒப்பு கொண்டதாக அருந்ததி ராய் கூறியிருந்தார். இதற்கு இந்த கூட்டம் முடிந்ததுமே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.  அருந்ததி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து டில்லி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்துவர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தீவிர வடிவம் எடுக்க துவங்கியுள்ளது. அருந்ததி ராயை கைது செய்வதற்குண்டான சட்ட ரீதியிலான அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவரை கைது செய்யலாம் என்ற முடிவுக்கு டில்லி மாநகர போலீசின் சட்டப்பிரிவு வந்துள்ளது.  ஆனாலும் கைது நடவடிக்கைக்கு முன்பாக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அருந்ததியின் பேச்சு, ராஜதுரோக குற்றம் என்றும் அவரை குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் டில்லி போலீஸ் நம்புகிறது. ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. காரணம் மிகவும் நுணுக்கமான இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.  அதை போலவே சட்ட அமைச்சகமும் இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு, எதையும் மேற்கொண்டு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.


சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், "உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை' என்றார். இதற்கிடையில் நேற்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அளித்த பேட்டியில், "கிலானி, அருந்ததி ஆகியோரின் பேச்சுக்கள் விவரம் ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


அருந்ததி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், பிரபல மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.  பிரபல வக்கீலான பிரஷாத் பூஷன் கருத்து தெரிவிக்கையில், "சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று ராணுவத்தை தூண்டி விடும் வகையிலோ அல்லது வன்முறை கலவரம் போன்றவற்றிற்கு ஆதரவாகவோ பேசினால் மட்டுமே ராஜதுரோக வழக்கு போட முடியும்.  அருந்ததி ராயின் பேச்சு என்பது ராஜதுரோகம் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் அவர் மீது ராஜதுரோக வழக்கு போட்டால் அது ஜனநாயகத்தின் முடிவையே குறிக்கும்' என்றார்.


அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற கருத்து அவருடையாக இருந்து வருகிறது. அவர் வரும் வேளையில் காஷ்மீர் பிரச்னை பெரியதாக வெடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.  மேலும்  காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ., பேசி வருவதும் நெருக்கடியை தருகிறது. தவிர புக்கர் பரிசு பெற்றவர் அருந்ததி ராய். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அது சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாகி விடும்.  ஆகவே அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவசரம் காட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 நமது டில்லி நிருபர்


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X