பரங்கிமலை : கொழும்பிலிருந்து சென்னைக்கு நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினம், வைரகற்களை கடத்தி வந்த இலங்கை நபரை, புறநகர் போலீசார் கைது செய்தனர். கொழும்பிலிருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்னை வரும் ஒரு பயணி, விலை உயர்ந்த நவரத்தின கற்களை கடத்தி வருவதாக சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கமிஷனர் உத்தரவுப்படி, பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் குப்புசாமி, விமான நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், குறிப்பிட்ட விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை கண்காணித்து வந்தனர். பின், ரகசிய தகவலில் கூறப்பட்ட அங்க அடையாளங்கள் கொண்ட ஒருநபரை பின் தொடர்ந்தனர். அந்த நபர், அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு டாக்சியில் ஏற முயன்ற போது தனிப்படை போலீசார் மடக்கினர். விசாரணையில், அவர் இலங்கை, காலேவை சேர்ந்த முகமது ஷபீக் (43) என்பது தெரிந்தது. பின், விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரிடம் சோதனை நடத்தினர். இச்சோதனையில் சந்தேகப்படும்படி எந்த பொருளும் சிக்கவில்லை.
இதையடுத்து, முகம்மது ஷபீக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவரின் வயிற்று பகுதியை எக்ஸ்-ரே படம் எடுத்தனர். இதில், முகம்மது ஷபீக்கின் வயிற்றில் வித்தியாசமான வடிவத்தில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. இது குறித்து கேட்டபோது, ஷபீக் உண்மையை கக்கினார்.
போலீசாரிடம் முகம்மது ஷபீக் கூறுகையில், "இலங்கையை சேர்ந்த ராசிக் என்பவர், என்னிடம் விலை உயர்ந்த நவரத்தின கற்களை கொடுத்தார். விமான நிலைய சோதனையில் சிக்கக் கூடாது என்பதற்காக அவற்றை, பாலிதீன் பாக்கெட்டுக்களில் நிரப்பி, விழுங்கினேன். இந்த வகையில், 42 பொட்டலங்களை விழுங்கி, எடுத்து வந்தேன். சென்னை சேர்ந்ததும் இந்த பாக்கெட்டுக்களை எடுத்து, அங்கு மண்ணடியில் உள்ள மெட்ரோ லாட்ஜில் தங்கியிருக்கும் ஜெய்ப்பூரை சேர்ந்த குமார், ஷபீர், ரபீக் ஆகியோரிடம் ஒப்படைக்கும்படி ராசிக் கூறினார்,' என்றார்.
புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கூறும்போது,"முகமது ஷபீக்கின் வயிற்றிலிருந்து 2 ஆயிரத்து 65 நவரத்தினம் மற்றும் வைரக்கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. மருத்துவ உதவியுடன் ஆறு மணிநேரத்திற்கு பின் வெளியே எடுக்கப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய். முகமது ஷபீக் இதுபோல் மூன்று முறை இலங்கையிலிருந்து நவரத்தினங்களையும், வைரங்களையும் கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது. இந்த நவரத்தின கற்களை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருக்கும் நபரிடம் கொடுப்பதற்கு, முகமது ஷபீக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் கூலி பேசப்பட்டுள்ளது,' என்றார்.
வாழைப்பழ சிகிச்சை! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், முகம்மது ஷபீக் விழுங்கிய பாலிதீன் பொட்டலங்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது, "வாழைப்பழங்களை சாப்பிட்டால் பொட்டலங்கள் தானாக வெளியே வந்துவிடும்' என்று முகம்மது ஷபீக் மருத்துவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, முகம்மது ஷபீக் தொடர்ந்து 10 வாழைப்பழங்களை உண்டார். அடுத்த சில நிமிடங்களில் முகம்மது ஷபீக்கின் வயிற்றில் இருந்த 42 பொட்டலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தது. எவ்வித மருத்துவ சிகிச்சையும் இன்றி போலீசார், முகம்மது ஷபீக் விழுங்கிய நவரத்தினங்கள் மற்றும் வைரங்களை பறிமுதல் செய்தனர்.