புதுக்கடை: முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்தவ மத போதனைகள் அடங்கிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ராஜம்மேரி. இவர் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் கிறிஸ்தவ போதனைகள் அடங்கிய "ஆயிரம் ஸ்தோத்திர பலிகள்', "குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருமறை' ஆகிய இரண்டு புத்தகங்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களிடம் கிறிஸ்தவ போதனை புத்தகங்களை வழங்கி, மாணவர்களை மதம் மாற்ற தூண்டும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. முன்சிறை அரசு பள்ளி முன் நடந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கமலதாஸ் தலைமை வகித்தார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய பொதுச்செயலாளர் வக்கீல் கோபாலகிருஷ்ணன், பாலத்தடி விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமார், பொதுச்செயலாளர் ஐயப்பதாஸ், மாவட்ட இந்து முன்னணி தலைவர் குழிச்சல் செல்லன், விளாத்துறை நகர தலைவர் மோகன், பைங்குளம் நகர தலைவர் சந்தோஷ்குமார், நகர இளைஞரணி தலைவர் பிஜூ, ஏழுதேசம் நகர தலைவர் ராஜகுமார், கொல்லங்கோடு பஞ்., துணைத்தலைவர் பத்மகுமார், முன்சிறை பஞ்., யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ராம்குமார், சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன் வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
சம்பவ இடம் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சசிகலா, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன், குளச்சல் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் அகியோரிடம் மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை இடமாற்றம் செய்யப்படுவார் எனவும், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதற்கு சந்திரகுமார் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்சிறையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.அரசு கல்வி நிறுவனங்களில் மத பிரசாரத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கடை நகர காங்., தலைவர் துரை தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE